Thursday, October 16, 2008

பேச்சிலர் சமையல் - அத்தியாயம் 2


முன்குறிப்பு : நாம் ஏற்கனவே பேச்சிலர் சமையல் பற்றி ஒரு பதிவில் பேசியிருக்கிறோம். சமையலுக்குள் போவதற்கு முன் இது தொடர்பான வேறு சில விசயங்களைநாம் பேசிக்கொள்வோம்.


முதலில் சமையல் செய்வதற்கு நேரம் நிறைய முக்கியம்.

காலையில் அடித்துப் பிடித்து வேலைக்கு கிளம்பவே நமக்கு நேரம் இல்லாத பொழுது, சமைக்க எங்கிருக்கிறது நேரம்? என்பார்கள். இது ஒரு வகையில் உண்மை. இன்னொரு விதத்தில் பொய்.

பல உணவகங்களில் பலவற்றை சுவைக்காகவும், பல சமயங்களில் பற்றாக்குறையால், சிக்கனக்கத்திற்காவும் சுமாரான உணவகங்களில் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொண்ட பிறகு தான், சமைப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். ஆகையால், நெருக்கடியில் தள்ளபட்டுத்தான் நாம் சமைக்க முனைகிறோம்.


மேலும், இரவு நெடுநேரம் கண்விழித்திருந்து உருப்படியில்லாத பல வேளைகளை (தொலைக்காட்சி பார்ப்பது, மொக்கைப் பதிவு,பின்னூட்டம் போடுவது, குமுதம் படிப்பது) செய்கிறோம். அதைக் குறைத்து விரைவாக தூங்க தொடங்கிவிட்டால், காலையில் விரைவாக எழுந்துவிடலாம்.
சென்னையில் அமைதியான சூழ்நிலை, சுத்தமான காற்று எல்லாம் கிடைப்பது அதிகாலையில் தான். அதை அனுபவிக்காதவர்கள் அவர்களின் ஆயுளில் 5 ஆண்டைநிச்சயமாய் கழித்துவிடலாம்.

காலையில் விரைவாக எழ வேண்டும் என்பது எனக்கு பல நாள் ஆசை. நண்பர் ஒருவர் இதை வேறு சொல்லிவிட்டார் "இந்த உலகத்தில் நிறைய சாதனை செய்தவர்கள் அதிகாலையில் எழுந்தவர்களாம்". ஆசையை நிறைவேற்றவதற்கு பெரிய போராட்டமாக இருந்தது. மேலே உங்களுக்கு சொன்ன ஆலோசனைகளைசெய்தால் கூட விரைவாக எழ முடியாத பிரச்சனை வந்தது.

தோல்வி - 1


அலார்ம் வைத்து தூங்கினால், நாம் சோம்பல் பட்டு எழுவதற்குள் அறையில் உள்ள எவராவது அதை அணைத்துவிடுவார்கள்.

பகுதி வெற்றி - 1

"பாடி அலார்ம்" முயலலாம் என செய்துப்பார்த்தேன். நிறைய தண்ணீர் குடித்து தூங்கினால், காலையில் உடலே எழுப்பிவிடும். சில நாள்கள் பயன்பட்டது. அதற்கு மறக்காமல் நிறைய தண்ணிர் குடிக்க வேண்டும். மறந்துவிட்டால், அடுத்த நாள் எழ முடியாது.

பகுதி வெற்றி - 2

"பழங்குடியினர் சூரியன் மறைந்த பிறகு எதையும் உண்ண மாட்டார்களாம். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார்களாம்". இதை செய்துப் பார்க்கலாம் என முயற்சித்தேன். பசி நடுநிசியில் பலமுறை எழுப்பியது. தூக்கம் கெட்டது. காலையில் எழும்பொழுது நிறைய பசியோடு சோர்வாக எழுந்தேன். இந்த முறை பழங்குடியினருக்கு தான் சரிப்பட்டுவரும் என முடிவுக்கு வந்தேன். நாம் நகரவாசி இதில் பாதியை கடைப்பிடிக்கலாம் என முடிவெடுத்து,பாதி வயிறு சாப்பிடுவது என முடிவுக்கு வந்தேன். பலன் தந்தது.

பகுதி வெற்றி - 3

நமக்கு மருத்துவ ரீதியான புத்தகங்கள் படிப்பதில் ஒரு ஆர்வம். வயிறு பற்றி படிக்கும் பொழுது, ஜீரணம் சம்பந்தமாய், மண்டையில் ஒரு யோசனை எழுந்து, மைதா வகைகள், மசாலா அதிகமுள்ள அயிட்டங்கள், அசைவ வகையறாக்கள் இரவு உணவில் தவிர்த்துக்கொண்டு, எளிதாய் ஜீரணிக்க முடிகிற இட்லி, இடியாப்பம் வகைகள் சாப்பிட பழகினேன். காலையில் சோம்பல் இல்லாமல் விரைவாக எழ முடிந்தது.

பகுதி வெற்றி - 4

மேலே சொன்ன பகுதி வெற்றிகள் எல்லாவற்றையும் செய்து போராடினால் கூட சோம்பல் பலமுறை ஜெயித்தது. மேலும் தீவிரமாய் சிந்தித்து, 2கி.மீ அருகேஉள்ள பூங்காவில் காலையில் ஒட ஆரம்பித்தேன். அதிலும் சில நாள்கள் தோல்வியாகி, உற்சாகம் வருவதற்கு ஒரு பெண்ணை தொடர்ந்து ஓட ஆரம்பித்தேன். அது சில நாள்கள் பலன் இருந்தது. அந்த பெண் ஏதோ காரணத்தினால், வராமல் போய்விட, நானும் ஓடுவது தற்காலிகமாய் நிறுத்திவிட்டேன்.

வெற்றி

இறுதியில் வெற்றி பெற்றேன். இப்பொழுதெல்லாம், 5 மணிக்கு எழுந்து, 5.30 மணிக்கு போய் 6.15 வரையும் அருகில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்து6.30க்கெல்லாம் வீட்டில் வேலை செய்யத் தொடங்குகிறேன்.
நான் செய்தது எல்லாம்

* செல்லில் அலார்ம் வைப்பது. யாரும் அமர்த்தாமல் பார்த்துக்கொள்வது.

* தண்ணீர் நிறைய குடிப்பது.

* பாதிவயிறு சாப்பிடுவது.

* எளிதாய் ஜீரணிக்க கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது.

* ஜிம்முக்கு தொடர்ச்சியாய் போவது.

இன்னமும் சொல்வேன்.

பின்குறிப்பு : சமையல் பற்றி பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போகிறேன் என நினைக்கிறேன். நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

Monday, October 13, 2008

ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும்!


ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் 100 லஞ்சம் கொடுக்க தயாராய் இருங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும். புரியவில்லையா?

மதுரையில் மூன்று நாள்களுக்கு முன்பு, ஒரு கொலை. பத்திரிக்கைகளில் விபத்து என செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சுரேஷ்குமார், வயது 32. மதுரையில் பில்ட்ரான் என்ற நிறுவனத்தில் கலெக்சன் வசூலிக்கும் பணிபுரிகிறவர். அன்றைக்கு மதுரையிலிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம் வரை கிளம்பியவர், ஹெல்மெட் அணியாமல் போயிருக்கிறார். போகும் வழியில் ஒரு செக்போஸ்டில் முருகன் என்றொரு போலீஸ்காரர் வழிநிறுத்தியிருக்கிறார்.

நிறுத்தினால் 100 ரூபாயைபிடுங்கிவிடுவார்களே என எண்ணி, நிற்காமல் செல்ல... திருடனைப் பிடிக்கக் கூட ஓடாத போலீஸ் "கைக்கு எட்டிய ரூ. 100 வாய்க்கு எட்டவில்லையே!" என பதறி, வண்டியுடனே ஓடி தன் குண்டாந்த்தடியை வண்டிக்குள் திணிக்க சுரேஷ்குமார் தடுமாறி, எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி, ஸ்பாட்டிலேயே உயிர் போய்விட்டது.

இது முதல்முறை அல்ல எனவும் மக்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே அந்த செக்போஸ்ட் வருகிற போவோரை எல்லாம் நிறுத்தி கல்லா கட்டுவதில் நிறைய பேமஸாம். இதற்கு முன்பு இதே மாதிரி தடியை விட்டு அப்பொழுது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் இது விபத்தா? கொலையா?

சுரேஷ்குமாருக்கு 4 மாதத்திற்கு முன்பாகத்தான் திருமணம் நடந்திருக்கிறது. அவர் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறாராம்.

மக்கள் கூட்டமாய் கூடி போலீஸை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். போலீசு அன்பாய் கவனித்து(!) கலைத்து அனுப்பி விட்டார்கள்.
ஒரு உயிர் அநியாயாமாக பறிக்கப்பட்டு விட்டது. இந்த செயலை செய்த முருகன் என்ற போலீசு மீது வழக்கு போட்டிருப்பார்கள் என நினைத்தால் நீங்கள் அப்பாவி. அங்கு வந்த மேலாதிகாரி இந்த கொலை பற்றி என்ன சொன்னரென்றால் ...
"அந்த அரசு பேருந்து ஓட்டுநர் கொஞ்சம் கவனமாய் இருந்திருந்தால், இந்த விபத்தை (!) தவிர்த்திருக்கலாம். மேலும், உயிர் போகும் அளவுக்கு கவனக்குறைவாக வண்டி ஓட்டியதால் சுரேஷ் மீது வழக்கு பதியப்படும்" என்றார்.

நன்றி - தினமலர்

Wednesday, October 8, 2008

இறப்புச் சடங்கில் கலந்து கொண்ட நொந்த அனுபவம்!


சென்னையில் பலரும் ஒரு விசயத்தை ஒப்புக்கொள்வார்கள். 'பக்கத்து வீட்டுகாரர்களுடன் ஒட்டாமல் வாழ்வதை'. இதை செய்தித்தாள்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


சமீபத்தில் கூட ஒரு சென்னையின் புறநகரில் ஒரு வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்து, கொள்ளையடித்து போய்விட்டார்கள். அடுத்த நாள் வரை யாரும் பார்க்க்வில்லை எனசெய்திகள் படித்தோம்.

இந்த விசயம் நம் விசயத்தில் நடந்துவிடக்கூடாது என முடிவெடுத்தேன். அதை அமுல்படுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமும் வாய்த்தது. எங்களுக்கு எதிரே உள்ள வீட்டைஉள்ள வீட்டில் ஒரு வயதான அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அன்றைக்கு இரவு உயிர் பிரிந்தது.

அந்த வீட்டு குழந்தை என் அண்ணன் குழந்தையோடு எங்கள் வீட்டில் வந்து விளையாடும். இது போதாதா! இறப்புச் சடங்கில் கலந்து கொள்வோம் என முடிவெடுத்தேன். உறவைப்பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

சாமியானா பந்தல் போடப்பட்டு, காலையில் 20 பேர் குழுமியிருந்தார்கள். 9 மணிக்கு வேலைக்கு கிளம்பிய பொழுது, அங்கு நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். "எப்ப தூக்குவாங்க?"மாலை 4 மணி என்றார்.

அலுவலகம் போனதும், முதல் வேலையாக 4 மணிக்கு போவதற்கு பர்மிசன் வாங்கினேன். வேலையெல்லாம் அவசரம் அவசரமாய் முடித்துவிட்டு 4 மணிக்கு போய் வீட்டுக்குப்போய் சேர்ந்தேன்.


50 பேர் வரை குழுமியிருந்தார்கள். வண்டிகள் நிறைய நிறுத்தி வைத்திருந்தார்கள். போய் வண்டியை நிறுத்தும் பொழுது, ஒரு வண்டியை பதட்டமாய் தட்டிவிட்டுவிட்டேன். வரிசையாய் 4 வண்டிகள் சரிந்தன. டெத் வீட்டில் வந்திருந்த எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். தர்ம சங்கடமாய் போய்விட்டது.

பிறகு, ஒருவாறு சமாளித்து சோகமாய் முகம் மாறி, கூட்டத்தோடு கலந்து நின்றேன். "எப்பத் தூக்குவாங்க?" என கேட்டால், 5 மணி என்றார்கள். வரிசையாய் நிறைய சடங்குகள் செய்துஅவர்கள் தூக்கி நகரும் பொழுது, மணி மாலை 6.

வண்டியில் போகலாமா என யோசித்தேன். மரியாதையாக இருக்காது. நடந்தே போவோம் என முடிவெடுத்து, போனேன். தூக்கும் பொழுது, 60 வரை இருந்தவர்கள், வண்டி நகரும்பொழுது, மொத்தம் 10 பேர் மட்டுமே உடன் வந்தனர். அந்த தெரு மக்களில் நான் ஒருவன் மட்டுமே! சென்னை அப்படித்தான். நாம்தாம் மாற்றிக்காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வந்த 10 நபர்களில் இறந்தவர்களின் மகன்கள் இருவர். ஒருவர் ஒரு மகனைத் தாங்கிபிடித்தவாறு வந்தார். வண்டி இழுத்துக்கொண்டு வந்தவர் ஒருவர். மீதம் 6 பேர். அதில் மூவர்அந்த வண்டியை அலங்கரித்த பூ தோரணங்களை இழுத்து, இழுத்து உதிர்த்துக் கொண்டே வந்தனர். அப்படியே மூன்று குரங்குகள் செய்கிற சேட்டை தான் நினைவுக்கு வந்து போனது.


மீதி மூவரில் இருவர் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தனர். அதில் ஒருவர் இறந்த அம்மாவின் தம்பியாம். மீதம் இருந்த ஒருவர் மட்டுமே நடந்து வந்தார். கொஞ்ச தூரம் போனதும்,என்னருகே வந்தவர் ஒரு ஏரியாவை சொல்லி இங்கிருந்து எப்படி போவது என்றார். இங்கிருந்து குறிப்பிட்ட தூரம் ஷேர் ஆட்டோ. பிறகு, எல்லா பகுதிக்கும் பஸ் உண்டு என்றேன்.பேசிக் கொண்டே ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. ஏறிப் போயேவிட்டார்.


இப்பொழுது நான் தன்னந்தனியாக சோகமாய் நடந்து போனேன். இப்படியே திரும்பி போய்விடலாமாஎன நினைப்பு வந்தது. சே! அது மரியாதையாக இருக்காது. வந்தது வந்துவிட்டோம். கடைசி வரை போய்விடுவோம் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

இரண்டு கி.மீ. சுடுகாடு போய் சேர்ந்தோம். அப்படியே யூ டர்ன் எடுத்து, காலாற நடந்து வந்தேன். கரு கரு வென சூழ்ந்து நின்றிருந்த மேகம், இடி மழையுடன் பெய்ய ஆரம்பித்தது. மனிதர்களை நினைத்து, அவசர அவசரமான வாழ்வை நினைத்து நொந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன்.

பின்குறிப்பு : இப்படி தெருவில் யாரும் வராத பொழுது, உறவினர்கள் யாரும் வராத பொழுது, உடன் சென்றேனே! பலன். அதற்கு பிறகு வந்த நாட்களில் அந்த இறந்த போன அம்மாவின் மகன் பார்வையில் ஒரு பழகிய சிநேகம் பார்வையில் வந்திருக்க வேண்டும் அல்லவா! ம்ஹீம். சுத்தமாக இல்லை. சென்னை மக்கள் திருந்த பல காலமாகும்.

Tuesday, October 7, 2008

மாண்புமிகு முதல்வர் அவர்களே!


தமிழகம் முழுவதும் மின்சார வெட்டு அதிகமாகி கொண்டே போகிறது. சிறு தொழில் செய்கிற ஒரு சிறு முதலாளி "மின்சார வெட்டால், ஏதும் உற்பத்தி செய்ய முடியவில்லை. அரசு ஏதாவது மான்யம் தருகிறதா" என அப்பாவியாய் கேட்டார்.

மின்சார வெட்டு விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால், சமீபத்தில் நமது மின்சார துறை அமைச்சர் வீராசாமி அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியாது போனால், அதற்குமின்சார வெட்டுதான் முக்கிய காரணமாக இருக்கும்" என்கிறார்.

நாங்கள் இருக்கும் பகுதி சென்னையின் புறநகர் பகுதி. காலையில் 9 முதல் 11 மணி வரையும், மதியம் 2 முதல் மாலை 4 மணிவரையும் மின்சாரம் வெட்டு இருக்கும். நேற்று முதல் இரவு 9 முதல் 11 மணிவரை மின்சாரத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள். ஆக மொத்தம் தினமும் 6 மணி நேரம்.


சென்னையின் புறநகர் பகுதியே இப்படி இருக்கிறது என்றால்... கிராமங்களை நினைத்தால் பரிதாப நிலைதான்.

அலுவலகம் சென்றுவிடுவதால், பகல் நேர வெட்டால் பாதிப்பு ஏதும் நமக்கு தெரிவதில்லை. நேற்று இரவு 9 மணிக்கு மின்சார வெட்டு ஆனதும், மெழுகுவர்த்தி கடை கடையாக ஏறி பத்தாவது கடையில் மெழுகுவர்த்தி கிடைத்தது. கிடைக்கும் பொழுது மணி 10.15.

ஆகையால், மாண்புமிகு முதல்வர் அவர்களே!

மின்சாரம் தான் தரவில்லை!

நல்ல மெழுகுவர்த்தி கொடுக்க வழி செய்யுங்கள்!

Saturday, October 4, 2008

பேச்சிலர் சமையல்!

வேலைக்காக தன் சொந்த ஊர், மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு, சிறு நகரங்களில், மெட்ரோ சிட்டிகளில் வாழும் பல இலட்சகணக்கான இளைஞர்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனை சாப்பாடு.
சென்னையில் 10 ஹோட்டல்கள் ஒரு ஏரியாவில் இருந்தால்... ஒன்று மட்டுமே ஏதோ தோறும். நல்ல ஹோட்டலாய் பார்த்து, பார்த்து சாப்பிடுவதற்கு நேரமும் இருப்பதில்லை. போதுமான பணமும் இருப்பதில்லை.
விளைவு. அல்சர். ஒரு குறிப்பிட்ட காலம் பிறகு தான் இந்த பிரச்சனை எழும். ஆனால், வந்துவிட்டால் பல்வேறு அவஸ்தைகள். அதற்கு பிறகு ஒரு வேளை கூட கவனம் இல்லாமல் இருக்க முடியாது. காரல் இல்லாமல், உறப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொல்லை தான்.
பல்வேறு பேச்சிலர் நண்பர்கள். பல்வேறு பிரச்சனைகள். இதிலிருந்து தப்பிக்க அறையிலேயே சமைப்பது என்ற முடிவுக்கு வரும் பொழுது, என்னசமைப்பது. எப்படி சமைப்பது என்ற பிரச்சனை எழுகிறது.
எங்களுக்கும் இந்த பிரச்சனை வந்து, ஒரு சுபயோக சுபதினத்தில்(!) ஏற்கனவே சமைத்த அனுபவத்தை மூலதனமாக வைத்து சமைக்கத் தொடங்கினோம். அதிலும் பல்வேறு பிரச்சனைகள். ஒரு புரிதலுடன் பரஸ்பரம் பேசி, விவாதித்து வெற்றிகரமாய் சமைத்து அதில் சமையலில் பல அனுபவங்கள் கண்டோம்.

மேலும், சமைக்கத் தொடங்கியதும், சமையலில் எங்களுக்கு இருந்த அறிவு மிக குறைவு என அப்பொழுது தான் புரியத் தொடங்கியது. எலுமிச்சைப் பழ சோறு கிண்டலாம் என செய்ய ஆரம்பித்தால், செய்முறையில் எங்கோ தப்பி... சட்டி முழுக்க கருப்பாய் ஏதோ லேகியம் போல ஆகிவிட்டது.

கருப்பட்டியில் டீ போடலாம் என யோசித்து, போட்டால் பால் திரிந்தது. "கெட்டுப்போன பாலை கொடுத்திட்ட! கடைக்காரனோடு மல்லுக்கட்டி, புதுப்பால்வாங்கி திரும்பவும் முயற்சித்தால், மீண்டும் திரிந்தது. பிறகு தான் தெரிந்தது "கருப்பட்டியில் பால் திரியும்" என்பது.கறிக் குழம்பு வைக்க ஆரம்பித்து... 99% சதவிகித வேலைகள் முடித்து, கொஞ்சம் வற்றியதும் இறக்கி வைக்க வேண்டிய வேலை மட்டும் பாக்கி இருக்கும்.ஏதாவது பேச ஆரம்பித்து ஆர்வத்தில் பேச்சு நீளும் பொழுது, ஒரு கருகிய வாடை அடுப்படியிலிருந்து வரும். போச்சு..அருமையான கறிக்குழம்பு... கருகிய குழம்பாய் மாறியிருக்கும்.

கடைகளில் நிறைய புத்தகங்கள் விற்கிறார்களே! என வாங்கி பார்த்தால், ஏற்கனவே சமையலில் புலியாய் இருப்பவர்களுக்கு பயன்படுகிற புத்தகங்கள் தான்அதிகம். அல்லது வெரைட்டிக்காக புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை புது முயற்சிகள் செய்தாரோ! அதைவிட அதிகமாய் முயற்சிகள் செய்தோம். பல தோல்விகள். சில வெற்றிகள். அவற்றை பகிர்ந்துகொள்ளும் விதமாக மாதம் ஒரு பதிவோ, அல்லது இரண்டோ எழுத உத்தேசம். மற்றபடி... உங்கள் பதில்கள் கண்டு. பதிவர்கள் பலர் இந்த பிரச்சனைகளைஎதிர்கொண்டு இருப்பீர்கள். நீங்களும் இது சம்பந்தமாக கருத்து சொல்லலாம்.