Thursday, February 23, 2012

மனிதர்கள் 14 - எழிலன்


நேற்று பழைய அலுவலக நண்பரைச் சந்தித்தேன். எழிலன் இப்பொழுது "விசுவாசத்தை" விட்டுவிட்டார் என்ற சொன்ன செய்தி நிறைய ஆச்சரியமாயிருந்தது. விசுவாசம் என்றால் எழிலன் என என் மனதில் பதிந்திருந்தது என்பதை விட எழிலன் அதை பதித்திருந்தார் எனலாம்.

****
காலையில் அலுவலகத்தில் நுழையும் பொழுதே, கோபமாக யாரையாவது திட்டிக்கொண்டே வருவார். விசாரிக்க வேண்டாம். அவரே சொல்வார். அவர் ஒரு அந்நியனின் 'அம்பி'!

அந்நியன் படம் வந்த பொழுது, 'அம்பி' கதாபாத்திரத்துடன் சிலர் ஒப்பிட்டு சொன்னதை பெருமையாக அவரே சொன்னார்.

அமைதியாய் இருக்கும் பொழுது, 'உங்களிடம் ஒருவித பதட்டம் இருக்கிறது. மருத்துவரைப் பாருங்கள்' என்றேன். 'ஆமாம். அதற்கான தினம் ஒரு மாத்திரை எடுத்து வருகிறேன்' என்றார்.

****

பிடித்த வேலை; படித்தப் படிப்பிற்கு வேலை என சமீபத்திய படங்கள் பேசுகின்றன. எழிலன் படித்தது பி.இ. சம்பந்தமே இல்லாமல் சில ஆண்டுகளாக அந்த கட்டுமான நிறுவனத்தில், கணக்கு வழக்குகள், வங்கி வேலைகள்; கடிதப் போக்குவரத்து என நிர்வாகப்பணிகள் செய்து கொண்டிருந்தார்.

வருடங்கள் கடந்ததால், எங்கும் வேலைக்கு நகர முடியவில்லை. அவருக்கு வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே சுத்தமாக இல்லை. அதனால், நிர்வாகத்திற்கு மிகுந்த விசுவாசமாக, நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொண்டார். மற்ற்வர்களையும் தன்னைப் போலவே விசுவாசமாக இருக்க சொல்லி சிரமப்படுத்துவார்.

வேலையில் சின்சியராக இருக்கலாம். இருக்கவேண்டும். வேலை செய்வதற்கு சம்பளம் தருகிறார்கள். விசுவாசத்திற்கென்று தனியாக சம்பளம் தருகிறார்களா எனக் கேட்டால், பதில் சொல்லமாட்டார். மீண்டும் "விசுவாசம் மிக அவசியம்" என ஸ்லோகம் போல சொல்வார்.

****

தொழிலாளர்களுடன்; சக ஊழியர்களிடம்; மேஸ்திரிகளுடன் எப்பொழுது சிவாஜி படத்தில் சொல்வது போல, "ஸ்ட்ரிக்ட்; ஸ்ட்ரிக்ட்" என நடந்துகொள்வார். என்றன்றைக்குமான நிரந்தர விதிகளை உருவாக்கி, அதைப் பிடித்துக்கொண்டு தொங்குவார். எல்லொரும் எழிலனை முதுகுக்கு பின்னால் கரித்துக்கொட்டுவார்கள். மதிக்கவே மாட்டார்கள். எழிலன் கவலையே கொள்ளாமல், விசுவாசத்தின் மீது நம்பிக்கை கொண்டு, எப்பொழுதும் போல தனது இம்சைகளை தொடர்வார்.

****

சம்பள உயர்வு கேட்கும் பொழுது, தனது திறமை, அனுபவம் என பல விசயங்கள் கணக்கில் எடுத்துகொள்வதை கேள்விபட்டிருக்கிறோம். ஒருமுறை முதலாளி அறைக்குள் எதைச்சையாக நுழைந்தேன். எழிலன் தன் பல் டாக்டர் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பதாக; அது தனக்கு அவமானம் என சொல்லி, தன் சம்பளத்தை உயர்த்த சொல்லி, அநேகமாய் கெஞ்சி கொண்டிருந்தார்.

****
அவர் ஒரு வீடு வாங்க திட்டமிட்டு, பணத்தை பல வழிகளிலும் சேகரித்தார். 1 லட்சம் குறைந்தது. தன் முதலாளியிடம் கேட்டார். தருகிறேன் என்றவர், மூன்று மாத காலமாகியும் கண்டு கொள்ளவே இல்லை. நொந்துபோய், விசுவாசத்தை விட்டுவிட்டாராம் எழிலன். இது தான் எழிலன் விசுவாசம் தொலைத்த கதை.

****

Wednesday, February 22, 2012

மான்ஸ்டர்ஸ்.ஐ.என்.சி 2 (Monster.I.N.C -2)- திரைப்பார்வை


அண்ணன் பையனுக்காக வேறு ஒரு டிவிடி வாங்கிய பொழுது, இந்த படமும் சேர்ந்து இருந்தது. நேற்று எதைச்சையாய் இந்த அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். பிடித்திருந்தது.

****

கதை எனப்பார்த்தால்...

ஒற்றைக்கண், பத்துகால்கள், எட்டு கைகள் கொண்ட விதவிதமான ஜந்துக்களின் விநோத உலகம் அது. அந்த உலகத்திற்கு தேவையான சக்திக்கு தேவை குழந்தைகளின் அலறல்கள். பூமியில் மனித குழந்தைகள் வசிக்கும் அறையினுள் ஜந்துக்களை உள்ளே அனுப்பி, பயமுறுத்தி, சக்தியை தயாரிக்கிறது ஒரு நிறுவனம்.

கதையின் நாயகனான சல்லி (Sulley) தான் பயமுறுத்தலில் நம்பர் ஒன். இரண்டாம் இடத்தில் வரும் ராண்டலுக்கு (Randall) சல்லியின் மீது பொறாமை. இதற்கிடையில் இந்த காலத்து குழந்தைகள் பயப்படாததால், சக்தி சேகரிப்பது சிரமமானதாக இருக்கிறது. அதனால், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO) ராண்டலின் உதவியுடன் குழந்தைகளை கடத்தி, சித்திரவதை செய்து, அலறலில் சக்தி சேமிக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியில் ஒரு குழந்தையை கடத்தும் பொழுது, தற்செயலாய் சல்லிக்கு தெரியவர, களேபரம் தொடங்குகிறது. அந்த குழந்தையை காப்பாற்ற எடுக்கும் பரபர, சாசக போராட்டமே மீதிக்கதை.

இந்த களேபரத்தில், குழந்தைகளின் அலறலில் கிடைக்கும் சக்தியை விட, சிரிப்பில் அதிக சக்தி கிடைப்பதை சல்லி அறிகிறது. இறுதியில், குழந்தைகளை சிரிக்க வைத்து, சக்தி சேகரிப்பதாக படம் முடிவடைகிறது.

****

குழந்தைகளில் அலறலில் சக்தி சேகரிப்பது என்ற கரு தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. துவக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவையாகவும், தொய்வு இல்லாமல், விறுவிறுப்பாக நகருகிறது படம். படத்தில் பல சாகசங்களும் இருக்கிறது.

****

அந்த குட்டிப்பெண் செய்கிற சேட்டைகள் சொல்லி மாளாது. குழந்தைகள் தொட்டால், ஜந்துக்கள் தாங்கள் காலி என்று விதி இருப்பதால், குழந்தையை கண்டதும், அலறி ஓடுவது செம ரகளை.

கதையின் போக்கில் நாயகன் சல்லிக்கும், அந்த குழந்தைக்குமான பாச உணர்வை காட்டியிருப்பது அருமை.

****
வால்ட் டிஸ்னி தயாரித்து, 2001ல் வெளிவந்த‌ அச்சு அசலான ஹாலிவுட் படம். இந்த படத்தை ஜெட்டிக்ஸ்-ல் அடிக்கடி போடுவதாக அலுவலக நண்பர் சொன்னார். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

****

Wednesday, February 15, 2012

மெரினா ‍- திரைப்பார்வை


"பணக்கார குடும்பங்களின் வாழ்க்கை ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. ஏழைக்குடும்பம் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது"

‍ தஸ்தோவெஸ்க்கி

படத்தைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். இருப்பினும் கதைக்களம் பிடித்துப்போய் பார்த்தேன்.

****

கதை எனப்பார்த்தால்... ஏதும் இல்லை. குட்டிக்குட்டி கதைகள் எனலாம்.

அம்பிகாபதி எனும் சிறுவன் அம்மா, அப்பா இல்லாமல் சித்தப்பாவின் நிழலில் வாழ்கிறான். அவனுக்கு படிப்பில் ஆர்வம். சித்தப்பாவோ டாஸ்மார்க் பாரில் வேலை செய்ய வைக்கிறார். வெறுத்துப்போய் சென்னைக்கு கிளம்புகிறான். அலைந்து திரிந்து மெரினாவில் தஞ்சமடைகிறான். இறுதியில் பள்ளிக்கு செல்கிறான். இது போல இன்னும் சில குட்டிக்கதைகளும் உண்டு.

****

தஸ்தாவெஸ்க்கி சொல்வது போல, ஒவ்வொரு சிறுவனின் கதையும் தனித்துவம் வாய்ந்தவை. கதைகளை நிறைய கேட்டு, அதில் சில அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து 'வானம்' போல திரைக்கதை அமைத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு, 'பீல்குட்' மூவி போல பையன்களின் விளையாட்டு, காதலர்களின் கோபம், ஊடல், அற்பத்தனம் என மேலோட்டமாக நகர்ந்துவிட்டார். எதுவும் மனதில் ஆழ பதியவில்லை.

கதை இறுதியில் பையன்களின் கல்வி குறித்து கவலைப்படுகிறது. அரசு அதிகாரி பையன்களை பிடித்து, ஒரு நீண்ட உரை நிகழ்த்தி, பள்ளிக்கு அனுப்புவதாக படம் முடிவுடைகிறது. நாமும் நிம்மதியாய் வீடு திரும்புகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு தன்னால் தன்னுடைய இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கல்விகூட கொடுக்கமுடியவில்லை என பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டது. அடிப்படை கல்வி என்பது 10ம் வகுப்பு என நினைத்துவிடாதீர்கள். 8ம் வகுப்பு தான். இந்த லட்சணத்தில் வல்லரசு என பேசுவதெல்லாம் அபத்தம். இது தான் யதார்த்தம்.

****

இந்த படம் திரையரங்கில் வேலை செய்யும் சிறுவர்களை பற்றிய பெருமாள் முருகன் எழுதிய "நிழல் முற்றம்" என்ற‌ நாவலை நினைவூட்டியது. வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள். நல்ல நாவல். இந்த பதிவு எழுதியதற்கு கூட இந்த நாவலை அறிமுகப்படுத்தத்தான்.

****