Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Friday, August 22, 2014

மெளனராகம் ரேவதியைப் போல!




பிழைப்புதான் என்னையும் சென்னைக்கு இழுத்து வந்தது.  வந்த நாளிலிருந்து என்னையையும் ஒருவனாய் ஏற்றுக்கொண்டது!

ஓடு! ஓடு! என ஓடுகிற‌ இயந்திரகதியான வாழ்க்கையும், அதனால் வரும் மனப்பதட்டமும்  எப்பொழுதும் என்னை பயமுறுத்துபவை!

பிழைக்க வந்த பிறகு, சொந்த ஊரை நினைத்துக்கொண்டிருப்பது தவறு. இத்தனை காலம் மெளனராகம் ரேவதியைப் போல தான் இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் வெட்கமாய் இருக்கிறது!

வந்த நாளில் துவங்கி, சென்னையின் அழகைப் பாதுகாக்கும், எளிய மக்களுடன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் சந்தோசமாக இருக்கிறது!

375 வயதாகும் சென்னைக்கு  எனது இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Friday, August 8, 2014

விபத்தும் கட்டுப்பாடுகளும்!





காலை 8.40 போல அந்த தனியார் பள்ளியை கடக்கும் பொழுது, திடீரென்று மின்னல் வேகத்தில் பள்ளியிலிருந்து வந்த ஒரு சிறுவன் என் பைக்கின் மீது மோதினான்.  நான் மெதுவாக வந்ததால், இருவருக்குமே எதுவும் காயமில்லை.  நான் திடீரென பிரேக் போட்டதால்,  பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதாலும் பைக் சரிந்துவிட்டது.  நான் வண்டியை தூக்கி நிறுத்தி திரும்ப கிளம்ப எத்தனிக்கும் பொழுது, அதே பையன் அதே வேகத்தில் பள்ளிக்குள் ஓடினான்.  மறந்து போன பெல்ட்டை எடுத்துக்கொண்டு  ஓடுவதாக யாரோ சொன்னார்கள். நடந்த நிகழ்வால், உடலில் கொஞ்சம் பதட்டம் வந்திருந்தது!

அந்த பையனுக்கு 12 அல்லது 13 வயதாவது இருக்கும். சாலையை கடக்கும் பொழுது இருபுறமும் அவனை பார்க்கவிடாமல் தடுத்தது எது?  பெல்ட் போடவில்லை என்றால், பள்ளியில் தணடிப்பார்கள் என்ற எண்ணம் தான் பிரச்சனை.  இன்றைக்கு ஒருவேளை நான் வேகமாக வந்திருந்தால், அந்த பையனின் நிலை?  என மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.

மாலை 3.30 போல பள்ளியை கடக்கும் பொழுது, நேரே போய் தலைமை ஆசிரியரிடம், காலையில் நடந்ததை சொல்லி, பள்ளிக்கு வந்துவிட்டால், நீங்கள் தான் பொறுப்பு. நீங்கள் எப்படி வெளியே அனுப்பலாம்?  அந்த பையனை தண்டிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை! என்றேன்.

உடனே அந்த பையனின் தோற்றம், வயதை என்னிடமே கேட்டு, யார் என விசாரித்து, இரண்டு நிமிடங்களில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.. காலையில் ‘அங்கிள் வண்டியில் மோதினாயா?’ என்றதற்கு தலையை குனிந்து ’ஆமாம்’ என்றான். ’மிஸ்கிட்ட கேட்டுட்டு போனீயா?’ ‘ஆம்’ என்றான். ’அங்கிள் இப்ப வந்து உன் மீது கம்பளைண்ட் பண்ணவரலை. இப்படி சாலையை பார்க்காமல், ஓடிவந்தால், அடிப்பட்டுவிடுமே! என்று சொல்ல வந்துள்ளார். இனி கவனமாக போவியா?’ என்றதற்கு ‘சரி’ என்றான்.

"பள்ளி வந்த பிறகு, இனி யாரும் வெளியே போக கூடாது. தவிர்க்கமுடியாமல் போனாலும் கவனமாக போகவேண்டும் என மாணவர்களுக்கு தெரிவியுங்கள்” என்றேன். சரி என்றார்கள். வந்துவிட்டேன்.

அந்த தலைமை ஆசிரியரின் பார்வை, பேச்சு எல்லாவற்றிலும் கடுமை இருந்தது.  விட்டால், என்னையே கண்டிப்பார்கள் போல தோற்றம் இருந்தது. தனியார் பள்ளிகளில் தண்டிப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.  அதனால் தான் அந்த பையனுக்கு, சாலை தெரியவில்லை. வண்டி தெரியவில்லை. பெல்ட் மட்டும் தான் கண்ணில் நின்றிருக்கிறது!

Friday, April 11, 2014

மான் கராத்தே – விமர்சனமல்ல!



புருஷ்லீ, ஜாக்கிசான் படங்கள் பார்த்து வளர்ந்த ஆட்களில் நானும் ஒருவன்.  இன்றைக்கும் ஏதாவது ஒரு சானலில் தற்செயலாய் இருவரது படங்களையும் பார்த்துவிட்டால், முடியும்வரை பார்த்துவிட்டு தான் தூங்கப்போவேன்.  சண்டையும், நகைச்சுவையும், சாகசமும் நிறைந்த ஜாக்கிசான் படங்கள் மிக விருப்பமானவை.


மற்ற மார்ஷியல் ஆர்ட்ஸை விட கராத்தே பிடித்ததற்க்கு காரணம். அதில் தான் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக எதுவும் இல்லை.  கை,காலை வைத்தே சண்டையிட்டு விடலாம்.


எப்பொழுதாவது தோணும் பொழுது, ரேஸ்கோர்ஸ் பக்கம் போவதுண்டு.   காலை 6 மணிக்கே நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஓடுவதும், குதிப்பதும், எசகுபிசகான  வார்ம் அப்களை செய்துகொண்டும் இருப்பார்கள்.  பார்க்க ஜாலியாக இருக்கும்.  அப்படி கராத்தேவும் சிலர் கற்றுக்கொண்டிருந்தனர்.  ஒருமுறை நண்பன் ஒருவன் கராத்தே குழுவில் இருந்ததைப் பார்த்து, நானும் சேர்ந்து, இரண்டொரு நாள் போய், ஆ, ஊ என என சில வார்ம் அப்களை செய்தேன்.  அதற்குப் பிறகு சில காரணங்களால் தொடரமுடியவில்லை. கராத்தே ஏக்கமாகவே இருந்தது.


இரண்டு வருடங்கள் கழித்து, வெளியூரில் சில காலம் வேலைக்காக ஒரு பள்ளியில் தங்கியிருந்தேன். காலை 5 மணிக்கே ஆ! ஊ! என சத்தம் வரும்.  எழுந்துப் பார்த்தால் கராத்தே தான்! 5ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து இருப்பார்கள்.  வெட்கப்படாமல் நானும் சேர்ந்துவிட்டேன்.  முதல் மூன்று, நான்கு நாட்கள் கொடுத்த பயிற்சியில் என்னால் நடக்கவே முடியவில்லை. ஊர்ந்து போனேன் என்று தான் சொல்லமுடியும். மூன்று மாதம் முடியும் பொழுது, அடிப்படையை கொஞ்சம் தாண்டியிருந்தேன்.  இன்னும் 10 நாட்கள் இருந்தால், மஞ்சள் பெல்ட் வாங்கியிருந்திருப்பேன். (அதுதான் முதல் பெல்ட் என நினைக்கிறேன்.) அந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டிய நெருக்கடியில் கிளம்பிவிட்டேன். கிளம்புகிற அன்று மாஸ்டர் சொன்னார்.  “நீங்கள் கற்றுக்கொண்டதை வைத்து, ஒரு ஆளை உயிரிழக்க செய்யலாம். ஜாக்கிரதை” என்றார். கராத்தே மீது முதல் முறையாய் கொஞ்சூண்டு பயம் வந்தது.


அதற்கு பிறகு கராத்தே கனவில் மட்டும் தான். பலரும் சூழ்ந்துவிட ஜாக்கிசானை விட வேகமாக சண்டை போட்ட காலங்கள் உண்டு. 


ஒருநாள் பொது விசயத்திற்காக நண்பர் ஒருவர் சிறை செல்ல, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சிறை வாசலில் காத்துகொண்டிருந்தோம்.  அப்பொழுது பேசிய பல விசயங்களில் கராத்தேவும் வந்தது.  கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார்கள்.  அவருக்கு தலையில் காயம்பட்டிருந்தது.  என்ன ஆச்சு? என்றதற்கு,  ஏரியாவில் ஒரு பொதுப்பிரச்சனை.   நாலைந்து பேர் ரவுண்டு கட்டிவிட்டார்கள் என்றார். 


”அப்ப கராத்தே?” என்றேன் வியப்பாய்!


பக்கத்தில் இருந்த நண்பர் “மான் கராத்தே தான் எப்பவும் பெஸ்ட்” என்றார்.


’அது என்ன ஸ்கூல் ஆப் ஸ்டைல்?’ என்றேன் அப்பாவியாய்!’


"தலை தெறிக்க ஓடுறதப்பா!" என்றார்கள். வெட்கமாக போய்விட்டது.

நேற்று ஒரு கனவு வந்தது. நிறுத்தி வைத்திருந்த வண்டியை ஒரு பையன் தள்ளிவிட்டுவிட, வண்டியிலிருந்து பார்ட்ஸ் கழன்றுவிட்டது.  அதை அந்த பையனின் அப்பாவிடம் வாங்கித்தர கேட்கும் பொழுது சண்டையாகி, செமத்தியாய் அடித்துவிட்டேன். (விடிகாலையில் யோசித்துப்பார்த்தால், அது என் வண்டியே கிடையாது!)


இது நடந்து கொஞ்ச நேரத்தில், ஒரு மஸாஜ் செண்டரில் ஏற்கனவே அடிவாங்கிய பையன் ஒருவன், வளர்ந்து பெரியவனாகி “ஏற்கனவே புரட்டி எடுத்தியே! உன்னை விட மாட்டேன்! என சொல்ல கெஞ்சி கூத்தாடி அங்கிருந்து வெளியே நைசாக நழுவி, ஓடியே போய்விட்டேன்.


அதனால் எப்பொழுதும் ‘மான் கராத்தே’ தான் பெஸ்ட்! :)

Friday, February 14, 2014

அவளின் காலடித்தடங்கள்!

முகநூலிலும் பதிவுகளிலும் இன்று காதல் பிரவாகம் எடுத்து ஓடுகின்றது.   கடந்த வந்த பாதையும் என் காதல்களும் மனதில் மெல்ல எழும்புகின்றன.

பள்ளிக் காலத்தில் எங்களுடன் படித்த ‘பாபி’ தான் எங்கள் வகுப்பில் உள்ள எல்லா பசங்களுக்கும் காதலி!  கொஞ்சம் சிவப்பாய், கொஞ்சம் பூசினாப்பல, யாரையும் வசீகரிக்கிற புன்னைகையுடன், நடுத்தர வர்க்கம் என்பதால் மற்ற பிள்ளைகளை விட கொஞ்சம் பளபளக்கும் ஆடைகளோடு வருவதால் அவள் தேவதை தான்.  அவளிடம் பேசும் பொழுது பையன்கள் மரியாதையுடன், குழைந்து பேசுவார்கள். தேவதையிடம் அப்படித்தான் பேசமுடியும்! என் கிட்ட பேனா கேட்டாள்! பென்சில் கேட்டாள்! என அள்ளிவிடுவார்கள்.  ஒரு நாள் பள்ளி மாறி, இறக்கை முளைத்து, போயே போய்விட்டாள்!

பருவ வயதில், என்னுடைய தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு வேகமான சூறைக்காற்றைப் போல கடந்து சென்ற ‘செல்வி’ என்னை மிகவும் கவர்ந்தாள். அவள் வேலை செய்த கடைக்கேல்லாம் போய், பொருள் வாங்குவது போல போய், சைட் அடித்திருக்கிறேன்.  அன்னாவும் ரசூலும் படத்தில் ஆண்ட்ரியாவை பகத் பாசில் பின் தொடர்வானே அதைப் போல பல நாட்கள் பின் தொடர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள் வழியில் பெயரென்ன என கேட்டதற்கு, பெயர் தானே என சர்வசாதாரணமாய் சொல்லி சென்றாள்.  அவளின் வேகம், நடை, பேச்சு, நடை என எல்லாம் பிடித்தது (பருவ வயது என்கிறீர்களா!)

அவளை காதலிக்கலாம் என நினைக்கும் பொழுது, திடீரென ஒரு நாள் மாலையும்,கழுத்துமாய் திருமணம் முடிந்து சொந்தங்களுடன் ஆட்டோவில் வந்திறங்கிய பொழுது,   தாடி வளராமலே சில நாட்கள் சோகமாய் திரிந்தேன்.

அவர்களுடைய குடும்பத்தில் உள்ள சில சிக்கல்களினால், செல்வியின் திருமணம் மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை.  அவளுக்காக வருத்தப்படுவதா, எனக்காக சந்தோசப்படுவதா என சில நாட்கள் குழம்பி திரிந்தேன்.

சில நாட்களில் நானும், அவளும் நார்மலுக்கு வந்தோம்.  அப்பொழுதெல்லாம் செல்போன் இல்லாத காலம்.  துணிந்து ஆறுதல் சொல்லி கடிதம் எழுதினேன். நான் நாலு பக்கத்திற்கு நாள் நாள் யோசித்து எழுதினால், அவள் நாலே வரியில் அடுத்த நாளே கவித்துவமாய் பதில் வரும்!

கொஞ்சம் இலக்கியமெல்லாம் வாசித்து, நண்பர்களுடன் சுற்றித்திரிந்த காலம் அது! அவளுடன் நட்பாகி, பழகி, இருவருக்கும் பிடித்திருந்தால் காதலிக்கலாம் என கற்பனையில் திட்டம் தீட்டினேன்.

நான் அவளை நெருங்க முயற்சித்த பொழுதெல்லாம் அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள். திருமண முறிவு ஆழமான காயங்களை ஏற்படுத்தியிருக்கும். எனக்கு அத்தனை புரிதலில்லை. அவள் எப்படி யோசிப்பாள் என யோசித்ததேயில்லை.

இந்த குழப்பத்திற்கும் ஒருநாள் முடிவு வந்தது.   இடையில் சில காலம் வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து போய்க்கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றி என்ன நினைத்தாலோ, வீட்டில் பார்த்த மறு திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாள். இப்பொழுது யோசித்தால், நான் அத்தனை நம்பிக்கை தரவில்லை என உணர்கிறேன்.  பிராக்டிலாக யோசித்தால், செல்வி எடுத்த சரியென்றேபடுகிறது.

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு ஒரு நாளும் கண்ணில்பட்டதே இல்லை.  இன்றைக்கும் நடிகர் சிரஞ்சிவியின் நடனத்தைப் பார்த்தால், செல்வி நினைவிற்கு வருகிறாள்.  வாழ்த்து அட்டைகளைப் எங்காவது கண்ணில் பட்டால் செல்வி தெரிகிறாள்.

இன்னும் சில காதல்கள் இருக்கின்றன.  இன்றைக்கு செல்வியின் நினைவுகள் போதும்!

Thursday, February 13, 2014

கோபமும், மன்னிப்பும்!

அன்றைக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும் பொழுது, சில பிரச்சனைகளினால் மகா எரிச்சலுடன் கிளம்பினேன்.  போகிற வழியில் நண்பனை பார்த்துவிட்டு போகலாம் என போனில் பேசினேன்.  ”20 நிமிடம் ஆகும். கொஞ்சம் காத்திரு. வந்துவிடுகிறேன்” என்றான்.

நேரே போய் அலுவலகத்திற்கு கீழே வண்டியை பார்க் செய்துவிட்டு டீ குடித்துவிட்டு வரலாம் என கிளம்பினேன்.  அப்பொழுது ஏடிஎம் வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த செக்யூரிட்டி “இங்க வண்டியை வைச்சுட்டு எங்க போறீங்க!. வண்டியை எடுங்க” என்றார்.

“எங்கே போறோம்னு உங்ககிட்ட சொல்லிட்டு தான் போகனும்னா!... இன்னும் சில வார்த்தைகள் கோபமாய் பேசிவிட்டு, விருட்டேன போய்விட்டேன்.

தேநீர் குடித்துக்கொண்டிருந்த பொழுது, நடந்தவற்றை அசைப்போட்ட பொழுது,  யார் மேலேயோ இருந்த கோவத்தை ஏன் நாம பெரியவர்கிட்ட காட்டினோம்? ரெம்ப தப்பாச்சே!  என யோசித்தேன்.  மேலே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பனுக்காக காத்திருக்கிறோம் என சொல்லியிருந்தா, முடிந்துவிட்டது.  இவ்வளவு மோசமா இதற்கு முன்னாடி இப்படி நடந்துகொண்டதில்லையே!  என நினைத்தேன்.

நேரே போய், “நான் வேறு ஒரு பிரச்சனையிலே உங்ககிட்ட கோபமாய் பேசிட்டேன்.  மன்னிச்சுங்க!  மேலே தான் என்னுடைய நண்பர் வேலை செய்கிறார்” என்றேன்.

அவர் பெருந்தன்மையாய்,  ”மன்னிப்பெல்லாம் எதுக்கு தம்பி! பக்கத்திலே பெரிய மால் இருப்பதால், அங்க பார்க்கிங் சார்ஜ் அதிகம்னு இங்க வந்து பார்க் பண்ணிட்டு போயிடறாங்க!  ஏடிஎம்ல பணம் எடுக்க வர்றவஙக வண்டியை வைக்க தடுமாறாங்க! கவனமா பாத்துக்கிட மாட்டிங்களான்னு கம்பெனி என்னை திட்டுது!” என்றார்.

அதற்கு பிறகு நண்பன் வருகிறவரை அவரிடம் பேசியதில், இரண்டு பசங்க! வளர்த்து ஆளாக்கி, திருமணம் முடித்து வைத்தும் இன்னும் செட்டிலாகலை! என் மனைவிக்கு உடம்புக்கு முடியல!  பன்னிரண்டு மணி நேரத்திற்கு இவங்க தர்ற சம்பளம் ரெம்ப கம்பி! என அவருடைய துயரக்கதையை முழுவதும் சொன்னார்.

எங்க அப்பா கூட இறப்புக்கு முன்னாடி சில காலம் செக்யூரிட்டியாக வேலை செய்தது நினைவுக்கு வந்தது.

Wednesday, February 12, 2014

லிப்ட் கதைகள் பாகம் 2

வழக்கம் போல அலுவலகம் முடிந்து வந்துகொண்டிருந்தேன்.  சென்னையின் ஒதுக்குப்புறமான பகுதி என்பதால், குறிப்பிட்ட நேரங்களில் தான் பேருந்து வரும். அதனால் மக்கள் எல்லோரிடமும் உரிமையாய் லிப்ட் கேட்பார்கள்.  நானும் அழைத்துப்போவேன்.

இன்றும் ஒருவர் கைகாட்டினார்.  ஏற்றிக்கொண்டேன்.  கிளம்பிய கொஞ்ச நேரத்தில் வண்டியில் ஒரு சின்ன தடுமாற்றம் வந்தது. கொஞ்ச தூரம் சாலை மோசமாக இருந்ததால் தானோ என கொஞ்சம் உற்றுக் கவனித்ததில் வண்டியில் தான் தடுமாற்றம் இருப்பதை உறுதிப்படுத்தினேன்.

வண்டியில் காற்று குறைவாக இருக்கிறதோ என கொஞ்சம் நிறுத்திப் பார்த்தேன். நான்கு நாட்களுக்கு முன்பு தான் காற்று அடித்திருந்தேன்.  சோதித்ததில் காற்றுப் பிரச்சனையில்லை.

திரும்பவும் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.  சிறிது தூரம் ஓடியதும், மீண்டும், அதே தடுமாற்றம்.  காலையில் கூட இந்த தடுமாற்றம் இல்லையே! என ஒரே யோசனை.  பழைய வண்டி என்றாலும் பரவாயில்லை. வண்டி வாங்கி ஆறு மாதம் தான் ஆகிறது.

சில சமயங்களில் வயதானவர்கள் உட்கார்ந்து வரும் பொழுது, ‘கிரிப்பாக’ பிடிக்கவில்லை என்றால், இந்த தடுமாற்றம் வரும்.  ஆனால், ஏறியிருப்பவரோ நடுத்தர வயது நபர் தான்.

கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருப்பதை கவனித்தேன்.  ஏதும் வித்தியாசமாகபடவில்லை.

இப்படி குழப்பத்திலேயே 20 நிமிடமும் பயணம் முடிந்து, அவர் இறங்கும் பொழுது தான் கவனித்தேன்.  கொஞ்சம் தடுமாற்றத்துடன் இறங்கினார். அதே போல, நடக்கும் பொழுதும்!  சே! ஒரு ‘குடிமகனுக்காகவா’  இவ்வளவு சின்சியரா லிப்ட் கொடுத்தோம் என நொந்தே போய்விட்டேன்.  :(

தொடர்புடைய சுட்டி :

லிப்ட் - சில குறிப்புகள்

Friday, October 25, 2013

வீடு - பேய்களும் முனிகளும்!



ஊரில் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.   ஊருக்கு போய், 4 நாட்கள் தங்கி, உடல் நலம் கொஞ்சம் தேறியதும் கிளம்பிவந்தேன்.

அதற்கு பிறகு, அண்ணன் தான் இருந்த வீட்டை காலி செய்துவிடலாம் என புதிய வீடு ஒன்றை தேடிக்கொண்டிருந்தார்.  இப்பொழுது தானே புதிய வீட்டிற்கு போனீர்கள்? இந்த வீட்டில் என்ன பிரச்சனை என்றேன்.  இந்த வீட்டில் ’பேய்’ இருக்கிறது என்றார்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்றதற்கு ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டு போனவர்கள் பக்கத்தில் சொல்லி சென்றிருக்கிறார்கள்.  நானும் ஜாதகம் பார்த்தேன்  ”இந்த வீட்டில் இருக்கவேண்டாம் கிளம்பி விடுங்கள் என சொன்னார்கள்” என்றார்.  ’அந்த பேய்தான் அம்மாவை தாக்கிவிட்டது’ என்றார்.

அம்மாவிற்கு 25 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது.  எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள் அம்மாவின் உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுவிட்டன.  வயதும் 65ஐ தாண்டிவிட்டது.  உடல் தரும் தொல்லையிலிருந்து விடுபட அம்மா இனி வாழும் காலம் வரைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என முடிவெடுத்துவிட்டார். அதனால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார். அதனால் தான் இவ்வளவு சிக்கல்! இப்படி விளக்கம் கொடுத்தாலும், பேய் கண்ணுக்கு முன்னாடி பயமுறுத்தியதே தவிர, அறிவுபூர்வமான விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை அண்ணனுக்கு!

இருக்கும் சொந்த வீட்டை விட்டு விட்டு, இப்படி வாடகை வீடுகள் தேடி அலைவதற்கும் பின்னாலும் ஒரு அமானுஷ்ய முன்கதை ஒன்று இருக்கிறது. 

எங்க அம்மாவின் பெரியம்மா ஒருவர் 98 வயது வரை உயிரோடு இருந்தார்.  அம்மாவின் அம்மா அம்மாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், பெரியம்மா தான் அம்மாவிற்கு  திருமணமே செய்து வைத்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எல்லோரும் ஆசி பெறும் பொழுது, எங்க அண்ணனும் போயிருக்கிறார். கிழவி ஆசி மட்டும் வழங்காமல், ”அம்மா குடியிருக்கும் அந்த வீட்டை இப்பொழுது எடுத்துக்கட்டாதே! உனக்கு தொல்லைகள் வரும். அம்மா இருக்கும் வரைக்கும் அந்த வீட்டில் இருக்கட்டும். அம்மாவின் காலத்திற்கு பிறகு, அந்த வீட்டை புதுப்பித்துக்கட்டி நீ குடிபோ!”  என சொல்லியிருக்கிறார்.

நான் வீட்டை பழுது பார்க்கலாம், எடுத்துக்கட்டலாம் இந்த 6 மாதத்தில் இரண்டொரு முறை பேசும் பொழுதெல்லாம் அண்ணன் தட்டிக்கழித்தார். துருவி துருவி கேட்ட பொழுது, இந்த அமானுஷ்ய கதையை சொன்னார். தலையில் அடித்துக்கொண்டேன்.

இருக்கிற வீட்டை காலி செய்துவிடுகிறேன் என சொல்லி, புதிய வீடும் கிடைக்காமல் அண்ணன் ஏகமாய் மாட்டிக்கொண்டார். கடைசி நேரத்தில், ஒருவீடு பார்த்து குடியேறினார்.

கடந்த மாதம் அண்ணிக்கு திடீரென உடல்நலம் சரியில்லை.  நடு மண்டையிலிருந்து நடு முதுகு வரை அப்படி ஒரு வலி.  நான்கு நாட்களாக தூக்கமே இல்லாமல், ஒரே அழுகை.   நகரின் முக்கிய சிறப்பு மருத்துவரை பார்த்து, பீஸ் எல்லாம் நிறைய கொடுத்து, ஸ்கேனெல்லாம் எடுத்து பார்த்ததில் ஒன்றுமேயில்லை என சொல்லிவிட்டார்கள்.

அதற்கு பிறகு அண்ணி அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அங்கேயே இருந்தார். சந்தேகம் வந்து,  போனமுறை ஊருக்கு சென்ற பொழுது, இந்த வீட்டில் ஏதும் பிரச்சனை இல்லையே! என்றேன்.  இந்த வீட்டில் ‘முனி’ இருக்கிறது என்றார். எப்படி? என்றதற்கு,  உங்க அண்ணிக்கு உடல் நலம் சரியில்லை என்றதும், மூன்று ஜாதக்காரர்களை பார்த்துவிட்டேன். மூவருமே முனி இருக்கிறது என்கிறார்கள்.  நான் ஜாதகம் பார்த்த மறுநாள் இந்த வீட்டின் உரிமையாளர் ‘இந்த வீட்டில் ஒரு தெய்வம் இருக்கிறது! செவ்வாய், வெள்ளியில் விளக்கு போடுங்கள்!” என சொல்லிவிட்டு சென்றார்.

இந்த வீட்டையும் காலி செய்ய போகிறீர்களா? என்றேன்.  மூன்று அறைகளில் பின்னாடி உள்ள அறையில் சமைக்கிறோம். அங்கு சமைக்கவேண்டாம். முன் அறையில் சமையுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். அதை செய்ய போகிறேன் என்றேன்.

இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டே தூங்கிப்போனேன்.  கனவில் முனியும், பேயும் கடுமையான சண்டை போட்டார்கள். யார் ஜெயிப்பார்கள் என வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த பொழுது, அலாரம் அடித்து பகீரென்று எழுந்தேன். கும்மிருட்டு.  விடிகாலை 6.30க்கு வைகை என்பதால், 4.30 மணிக்கு எழ நான் தான் அலாரம் வைத்திருந்தேன். 

சமையல் கட்டு அறையில் தான் குளியலறையும் இருந்தது.  குளிக்கும் பொழுது, முனி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக ஒரு பிரமை வந்தது. வெட்கம் வந்தது.

பேய்களுடனும் முனிகளின் நினைவுகளுடனும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.