Thursday, March 27, 2014

பறவைகளின் தாக்குதல்! (The Birds)

மனிதன்
சிறகு முளைத்தபின்
பூமியைக் கலைத்து விட்டு
வீட்டைக் கட்டிக் கொள்கிறான்.
பறவைகளோ
கூட்டைக் கலைத்து விட்டு
பூமியைக் கட்டிக் கொள்கின்றன.

- சேவியர்


ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற படங்களான வெர்டிகோ (Vertigo), சைக்கோ (Psycho) படங்களை சமீபத்தில் பார்த்தேன். இதன் தொடர்ச்சியாக நேற்று பறவைகள் (The Birds) பார்த்தேன்.

கதை எனப் பார்த்தால், நாலே வரிகளில் சொல்லிவிடலாம்.  நாயகனும் நாயகியும் பறவைகள் விற்கும் ஒரு கடையில் எதைச்சையாய் சந்திக்கிறார்கள்.  அந்த சந்திப்பில் நாயகனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அவன் தங்கைக்கு பிடிக்குமென்று ஒரு ஜோடி காதல் பறவைகளை வாங்கிக்கொண்டு அவனைத் தேடி அவன் வசிக்கும் சிற்றூருக்கு கிளம்பி போகிறாள்.  நாயகனை சந்திக்கிறாள். அங்கு கூட்டம் கூட்டமாய் பறவைகள் வசிக்கின்றன.  ஒரு கட்டத்தில் திடீர் திடீரென மனிதர்களை தாக்க ஆரம்பிக்கின்றன.  சிலரை கொல்லவும் செய்கின்றன. இறுதியில் காயம்பட்ட நாயகியோடு நாயகனின் குடும்பம் நகரத்திற்கு இடம் பெயர்வதோடு படம் முடிவடைகிறது.

****

கிராபிக்ஸ் உலகத்தில் இப்பொழுது வசிக்கிறோம்.  ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே (1963ல்) மிகவும் குறைவான தொழில் நுட்ப வசதியில் ஹிட்ச்காக் கலக்கியிருக்கிறார்.  எழுத்து போடும் பொழுதே பறவைகளை வைத்து பயமுறுத்த ஆரம்பித்தவர், படம் பார்த்து முடிக்கும் பொழுதோ,  இனி கூட்டமாக பறவைகளை பார்க்கும் பொழுதோ, பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும் பொழுதோ  ஒருவித பயம் வரும் அளவிற்கு உருவாக்கிவிட்டார். :)

பறவைகள் ஏன் மனிதர்களை தாக்குகின்றன என்பதை படத்தில் எங்குமே ஹிட்ச்காக் விளக்கமே தரவில்லை. எழுத்தாளர் எழுதிய கதையில் கூட கதையாசிரியர் சில ஊகங்களை தெரிவித்திருக்கிறார்.  அதையெல்லாம் ஹிட்ச்காக் வெட்டிவிட்டார்.  தான் ஒரு ஆய்வாளன் அல்ல!  படம் எடுத்து பயமுறுத்துபவன் அவ்வளவு தான்!  என்று நினைத்திருப்பார் போல! ஆனால், படம் பார்த்து பயந்தவர்கள் அவர் வாழ்நாளில் பலமுறை ஏன் பறவைகள் மனிதர்களை தாக்கியது என கேள்விகளால் துளைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இருப்பதிலேயே மனிதன் தான் ஆபத்தானவன்.  இயற்கைக்கு எதிராக எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு செய்கிறான். ஆனால், பறவைகளை, விலங்குகளை மனிதருக்கு எதிராக நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஹிட்ச்காக் அபிமானிகள் இப்படி சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. J

Saturday, March 22, 2014

பகத்சிங்கை வாசியுங்கள்! மற்றதை அவன் பார்த்துக்கொள்வான்!

கடந்த 2009ல் பகத்சிங்கின் நினைவுகளில் இட்ட பதிவை நினைத்துப் பார்க்கிறேன்.

எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டு...
சராசரி மனிதனாய்
வாழமுடிகிறது!

உனது சுட்டெரிக்கும்
பார்வையையும்
உன் வாழ்க்கை
எனக்குள் எழுப்புகிற
குடைச்சல்களை தான்
என்னால்
என்றும்
எதிர்கொள்ள முடியவில்லை!

***

பகத்சிங்
பிறந்தது : 27.09.1907
தூக்கிலிடப்பட்ட நாள் : 23.03.1931 (வயது - 23)

***
கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த வரலாறுகளில் மிகுந்த மன எழுச்சியை தந்தது பகத்சிங் மற்றும் அவர்களுடைய தோழர்களின் வரலாறு தான்!

சூரியன் மறையாத சம்ராஜ்யம் எங்களுடையது என பெருமை பீத்திய வெள்ளை அரசாங்கம், பகத்சிங், சுகதேவ், இராஜகுரு மூவரையும் மறுநாள் காலை  தூக்கில் போடுவதாக அறிவித்துவிட்டு, எழும் போராட்டங்களுக்கு தனது அரசாங்கம் தாங்காது என பயந்து முதல்நாள் மாலையிலேயே தூக்கில் போட்டது!  உடல்களை கூட உறவினர்களுக்கு தராமல், திருடனைப் போல இரவோடு இரவாக நதிக்கரையில் உடல்களை எரித்தது.

ஒருமுறை ஒரு அரசியல் ஏட்டைப் பற்றி ஒருவர் சொல்லும் பொழுது, இந்த புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு, எளிதாக கடந்து போய்விடமுடியாது.  தீயை முழுங்கியது போல, சும்மா இருக்கவிடாது! என்றார். அவர் சொன்ன வார்த்தைகள் பகத்சிங்கின் வாழ்க்கைக்கு மிக சரியாக பொருந்தும்! 

பகத்சிங்கை வாசியுங்கள்! பிறகு உங்களால் பழைய சுயநலமான வாழ்க்கையை தொடரமுடியாது! உங்கள் வாழ்க்கையின் திசையை சரியாக கொண்டு செலுத்துவான்!


நாளை அவர்களுக்கு நினைவு நாள்! பகத்சிங்கும் அவர்களுடைய தோழர்களும் கண்ட கனவை நனவாக்குவோம்!

Thursday, March 20, 2014

செயின் அறுப்பு - சில குறிப்புகள்

தெருவில் அக்கம் பக்கத்து வீடுகளில் கிசுகிசுவென பெண்கள் கூடிப்பேசிக்கொண்டிருந்தார்கள்.  விசாரித்த பொழுது, ஏரியாவில் குடியிருக்கும் ஒரு அம்மா ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார்.  இன்று காலையில் ரத்தத்தை ஒருவன் கொடுத்துவிட்டு, பதிலாக கழுத்தில் கிடந்த 20 பவுன் செயினை மிரட்டி வாங்கி ஓடிவிட்டானாம்.  ஒரு செய்தித்தாளில் 30 பவுன் என திருடன் மீது பழி சுமத்தியிருந்தார்கள்.

20 பவுன் என்றால், இன்றைய விலையில் குறைந்த பட்சம் 4 லட்சம்.  வங்கியில் காத்திருந்து பல ரிஸ்க் எடுத்து கொள்ளையடிப்பதை விட, இது திருடர்களுக்கு எளிதான வழிதான்.   இத்தனை பவுனை கழுத்தில் பல பெண்களும் சில ஆண்களும் எதற்காக மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்?  3 பவுன் அல்லது 5 பவுன் வரை அழகுக்கு என சொல்லலாம். 20 பவுனுக்கு ஒரு கட்டை செயினை கழுத்தில் அணிந்திருப்பது அழகு என்று சொல்ல முடியுமா?  பந்தா தான்!

முன்பெல்லாம் பர்சை அடிப்பவர்கள் இப்பொழுது செல்போன் திருடர்களாய் மாறி இருப்பது போல, தங்கம் விலை ஏறிய பிறகு, செயின் அறுப்பது மிக இயல்பாகிவிட்டது.  முன்பு பவுன் பத்தாயிரத்துக்குள் இருந்த பொழுது, இத்தனை செயின் அறுப்புகள் நடந்ததில்லை.   தங்கம் விலை இருபதாயிரத்துக்கும் மேலாக எகிறிய பிறகு, அறுப்புகள் அதிகமாகிவிட்டன.

சில மாதங்களுக்கு முன்பு, திருவெற்றியூரில் பேன்சி கடை நடத்தி வரும் ஒரு அம்மாவிடம், கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை ஒரு திருடன் இழுக்க, அந்த அம்மா திருடனுடன் மல்லுக்கட்ட, கடைசியில் அந்த அம்மாவின் கழுத்தில் உணவுக்குழாயே அறுந்துவிட்டது.  அவனும் நகையுடன் ஓடிவிட்டான்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்,  பெண்கள் கழுத்தில் தங்க செயினை அணியாதீர்கள் என அறிவுரை சொன்னார்.  அவ்வப்பொழுது இப்படி பல இடங்களில், பல வகைகளில் செயின் அறுப்புகள் செய்திகளில் வந்தாலும், பலரும் தங்கத்தை தவிர்க்கிற மாதிரி தெரியவில்லை.

இன்று ஒரு பெண் எல்.ஐ.சி முகவரை சந்தித்து, பாலிசி பணம் தரும் பொழுது, கழுத்தில் இரண்டு செயின்களை கனமாக போட்டிருந்தார்.  அறிவு 6 + 6 - 12 பவுன் தேறும் என சொல்லியது.  அண்ணியிடம் இது பற்றி பேசிய பொழுது, அந்த பெண் காதல் திருமணம் முடித்தவர்.  சொந்தங்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக போட்டிருக்கலாம் என்றார்.  இந்த செண்டிமெண்டல்லாம்  அறுக்கப்போகிற திருடனுக்கு தெரியுமா என்ன?

பந்தாவிற்காக செயினை போட்டு வலம்வருகிறார்கள்.  யாராவது அறுத்தால் மட்டும் “திருடன். திருடன்” என கத்துகிறார்களே!  அந்த இடத்தில் இருந்தால் நீங்கள் திருடனைப் பிடிக்க உதவுவீர்களா?  நான் கண்டிப்பா மாட்டேன். :)

பின்குறிப்பு : ஒரு ஊரில் வங்கியில் பணிபுரியும் அம்மாவிடம் செயின் பறிக்கிறார்கள்.  பின்பு, பித்தளை என தெரியவருகிறது.   ஒரு ஸ்டேட்ஸ்க்கு தங்கம் போல பித்தளையை/போலியை போட்டு திரிபவர்கள், இப்படி பறிபோனால்,  தங்கம் இல்லை என உண்மையை சொல்வார்களா? அல்லது தங்கம் என கதைவிடுவார்களா? :)

Wednesday, March 19, 2014

ரம்மி - சுமாரான ஆட்டம்!

1987 என காலத்தை எடுத்துக்கொண்டதற்கு என்ன காரணமாக இருக்கும்? அப்ப காதலில் உறுதியாய் இருந்தார்கள் என சொல்ல வருகிறாரா?  அல்லது சாதி வெறி அப்பவெல்லாம் தலைவிரித்து ஆடியது என்கிறாரா?

இந்த கதையை சம காலத்திலும் எடுக்கலாம்.  சாதிவெறி சமகாலத்திலும் வெறியுடன் தான் கிராமங்களில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது! பா.ம.கவும் அதன் கூட்டணியான சாதி அமைப்புகளும் தமிழகத்தில் தான் இருக்கின்றன. கெளரவ கொலைகளை நிகழ்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

‘காதல்’ படம் போல எடுக்க நினைத்து, படம் சுமாராக வந்து இருக்கிறது!  ’காதல்’ படத்தில் இருந்த கதை, காட்சிகளில் இருந்த நேர்த்தி இல்லை!

இரண்டு காதல் ஜோடிகள் என்பதால், எந்த காதலிலும் அழுத்தமில்லை.  கண்டதும் காதல் என்பதாக தான் வேகவேகமாக நகர்த்துகிறார்கள்.

சாதி வெறியையும் அழுத்தமில்லாமல் சொல்லியிருப்பதால், படத்தில் காதலன் ஒருவர் எரிக்கப்படும் பொழுது மனம் பதைபதைக்கவில்லை.

கதை எழுதி, காட்சிகளைப் பிரிக்காமல், காட்சிகளாகவே சிந்தித்து, கதையை கோர்ப்பார்கள் போல! துண்டு, துண்டான காட்சிகளாக பல இடங்களில் தெரிகிறது.

இந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பிடிக்காத ஒன்று - வரிவிலக்கு இல்லையா! உடனே ஆங்கிலத்தில் பெயரை வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சில லட்சங்களை வரிவிலக்காக கொடுத்தால் தான் பெயரிலாவது ’தமிழ்’ இருக்கும்!

Tuesday, March 18, 2014

தில்லானா மோகனாம்பாள் - சில குறிப்புகள்

வைத்தி மட்டும் இல்லையென்றால் கதை கிளம்பிய இடத்திலேயே நின்றிருக்கும்! என்ன ஒரு உடல்மொழி வைத்திக்கு! கலக்கிட்டார். கரகாட்டகாரனில் வைத்தி இல்லாதது பெரும் மனக்குறை!

விசம் தடவிய கத்தியை எறிந்ததும் சிக்கல் சண்முகம் துடிதுடித்து அந்த இடத்தையே கலவரப்படுத்துவது வியப்பாக இருக்கிறது.  நாலைந்து துப்பாக்கி குண்டை இதயத்திலும், அதன் அருகிலும் வாங்கி, நாலு பக்கம் வசனம் பேசும் இந்த காலத்தில், சிவாஜியின் துடிப்பு மிகை நடிப்பாக தான் மனதில் படுகிறது! :)

தேவசாசி வழிவந்தவள் மோகனாம்பாள் என்பது அவளின் அம்மாவின் நடத்தையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது! மோகனாம்பாளுக்கு அப்பா இல்லாதது எதைச்சையானதா என்ன?

பெண் பித்தர்களாக வரும் சிங்கபுரம் மைனரும், மதன்பூர் மகாராஜவும் தனது மனைவியரின் அன்பில்/மிரட்டலில் உடனே திருந்திவிடுகிறார்கள்.  100% சினிமாத்தனம்.  காசுள்ளவர்களின் பெண்பித்து உடனே திருந்திவிடக்கூடியதா என்ன? துவக்கத்தில் வரும் உள்ளூர் சண்டியர் நாகலிங்கத்தையாவது விட்டுவைத்தார்களே!

கண்டதும் காதல் என்பதில் எப்பொழுதும் ஐயம் உண்டு.  இதில் மோகானாம்பாள் சிக்கல் சண்முகத்தின் வாசிப்பில் மெய்மறந்து காதல் கொள்வது இயல்பாகபடுகிறது!

வித்வான்களுக்கு உலக அறிவு இருக்கட்டும். உள்(ளூர்) அறிவு கூட குறைவு தான் என்பதை செவிலியருடான காட்சி வைத்தது அருமை!

சிக்கல் சண்முகத்திற்கு பொருத்தமான ஜோடி தான் மோகனாம்பாள்! நான் அழகில் சொல்லவில்லை!

Monday, March 17, 2014

தெகிடி - ஒரு பார்வை

இந்தியில் கஹானி, தமிழில் மெளனகுருவிற்கு பிறகு ஒரு நல்ல திரில்லர்.  கதை? துப்பறிவதற்கு படித்துவிட்டு, புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்.  நான்கு பேரைப் பற்றிய தகவல்களை சேகரித்து தந்து, ஐந்தாவது நபரிடம் காதலில் விழுகிறார்.

தகவல் சேகரித்து தரப்பட்ட நால்வரும் ஒவ்வொருவராக அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து தனது காதலி தான் என பதட்டமாகிறார். கொலைகளுக்கான பின்னணி என்ன? காதலியை காப்பாற்றினாரா? என்பது மிச்சப்படம்.

நாலுபாடல்கள், நான்கு சண்டைகள் என இழுக்காமல், இரண்டு மணி நேரத்தில் படத்தை நறுக்கென எடுத்திருப்பது அழகு.  சுபாவின் டிடெக்டிவ் நரேன், பி.கே.பியின் பரத் போல ஒரு நாயகன். நாயகனிடம் பரத்திடம் இருக்கும் கலகலப்பு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.  ஜெயப்பிரகாஷ், ஜனனி என இருவரைத் தவிர மற்ற்வர்கள் எல்லோரும் புதுமுகங்கள். இயல்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநருக்கு முதல்படமா என ஆச்சர்யப்படவைக்கிறார். படம் நேர்த்தியாக இருக்கிறது.  பீட்சா, அட்டக்கத்தி என சினிமா மொழி தெரிந்த நபர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் குமார் இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். இந்த புதுமுக இயக்குநர்கள் இப்பொழுது காதல், திரில்லர் எடுத்தாலும் பிறகு சமூக அக்கறை படங்களை எடுப்பார்கள் என ஒரு நம்பிக்கை தான்!

வசனங்கள், காட்சிகளோடு பாடல்கள், தேவையான அளவு பின்னணி இசை, ஒளிப்பதிவு என படத்தின் வேகத்திற்கு உதவி செய்கின்றன.  படத்தின் கதையை நகர்த்தியதில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆங்கிலப்படத்தைப் போல படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கு ’பிள்ளையார் சுழி’ ஒன்றைப் போடுகிறார்கள்.  வரட்டும் பார்க்கலாம். :)

படத்தைப் பற்றி அறிந்து பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிவிடுகிறது.  பல திரையரங்குகளில் படத்தை தூக்கிவிடுகிறார்கள்.  நேற்று கூட மாலை காட்சி என தேடும் பொழுது, உதயத்திலும், சங்கத்திலும் மட்டுமே போட்டிருந்தார்கள்.  ஒரு புதுப்படத்தின் வாழ்க்கை ஒரு வாரம் என்பது சிரமம் தான். புதிய ஆட்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள்.

Friday, March 14, 2014

பிச்சை போடுபவர்களின் தொல்லை!

வழக்கமாய் இரவு சாப்பிடும் கையேந்தி பவனில்...

ஒரு முப்பது வயது இளைஞர் ஒரு பெரியவரிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் போனதும், இருவரும் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் போன இரண்டு மூன்று நிமிடங்கள் கடைக்காரர் தடுமாறித்தான் போய்விட்டார். எனக்கு நாலு இட்லி வைத்து தருவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டார்.

அந்த கடை ஓனரின் பையன் வந்ததும், அவரே அதற்கான காரணத்தையும் சொன்னார்!  ”வயதான ஒருத்தர் பிச்சை கேட்டார்னு, நாலு இட்லியை ஒருத்தன் வாங்கி கொடுத்துவிட்டு, அவன் பேசின பேச்சு இருக்கே!  சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் பேசிக் கொன்னுட்டான்! வாழ்க்கையிலே இனி யார்கிட்டேயும் அந்த பெரியவர் பிச்சை கேட்கமாட்டார்”

”எதுவும் அட்வைஸ் பண்ணிணாரா!” என்றேன்.

சாப்பிட ஏதாவது வாங்கி தாங்க சார்!” என கேட்டதும்,

நான் ஒண்ணும் ராஜா இல்லை! சாதாரண ஆள் தான்! என்னை ஏன் சார்னு சொல்ற!”

“சரிங்க!

“என்ன சரி?

பதில் சொல்ல முடியாமல் ”ஙே” என பிச்சைக்காரர் முழிக்க...

நானும் உங்கூட பிச்சை எடுக்க வரட்டுமா? இப்படி எல்லோரும் பிச்சை எடுக்க வந்துட்டா, யார் தான் வேலை செய்யறது!”

இப்படியே பேசிக்கொண்டே வாங்கிக்கொடுத்த நாலு இட்லி சாப்பிட்டு முடிக்கும்வரை பேசிக்கொண்டே இருந்தாராம்.

’சரக்கு தான் காரணமா?’ என்றேன்.

”ஆமாம்!” என்றார் கடைக்காரர்.

நிறைய நாளைக்கு பிறகு வாய்விட்டு நிறைய நேரம் சிரித்தேன்! :)