Sunday, February 23, 2014

இன்று 666 நினைவுக்கு வரவில்லை?

இன்றைக்கு கண் தெரியாதவர்களை தவிர, மற்ற எல்லோரும் ‘அம்மா’வின் முகத்தை பார்க்காமல் இருக்கமுடியாது!

’அம்மா’ புகழ் வைத்தியின் தினமணி இன்றைக்கு ’அம்மா’வின் பிறந்த நாளை ஒட்டி, விளம்பரங்களினால், நன்றாகவே கல்லா கட்டியிருக்கிறது!

விளம்பரங்களில் கூட ’அம்மா’வின் விசுவாசிகள் தன் முதுகு வளைத்து “பொற்பாதம் பணிந்து’ வணங்கியிருக்கிறார்கள்.

விளம்பரங்களில் சிலர்

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ.

சிலர்
அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெ.,

சிலர்
எம்.ஜி.ஆர்., ஜெ.

சிலர்
ஜெ. மட்டும்!

உற்றுக்கவனித்தால், அதிமுகவின் பரிணாம வளர்ச்சியை கண்டுகொள்ளலாம்!

சட்டமன்றத்தில் ’அம்மா’ புகழ் பாடும் சரத்குமார், தன்னுடைய வாழ்த்துக்களில் தன் கட்சிப் பெயரைக் கூட போடவில்லை.  அம்மாவின் விசுவாசிகளையே விஞ்சிவிட்டார்!

’அம்மா’வின் பிறந்த நாளுக்கு ‘அம்மா’ உணவகத்தில் சிறப்பாக இன்றைக்கு மட்டும் இனிப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறார்கள்.

’அம்மா’ உணவகத்தில் விற்று தீர்த்த இட்லிகளின் எண்ணிக்கையை கூட்டினால், ’அம்மா’விற்கு ராசியான 9 ம் எண் வருகிறதாம். ‘அம்மா’வின் அடிப்பொடிகள் சும்மா இருக்காமல், எதையாவது சொல்கிறார்கள்.

நம் பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், பல இடங்களில்’அம்மாவின்’ முகத்தை பார்த்ததாலும் ‘66’ என திரும்ப, திரும்ப பார்த்ததினாலும், கொஞ்சம் தலை சுற்றல் வந்து, ஓமன் படத்தில் வரும் சாத்தானின் அபாய எண்ணான 666 நினைவுக்கு வருகிறது!

Wednesday, February 19, 2014

எழுவர் விடுதலையும், ஜெ.வின் பிரதமர் கனவும்!

எழுவரை விடுதலை செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! நேற்று விடுதலை விசயம் கேள்விப்பட்டதும் முகநூலில் என்னுடைய மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டேன். அவர்களுடைய விடுதலை கோரிக்கைக்கான பல போராட்டங்களில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். இந்த விடுதலைக்கு பின்னால், பல புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளின் விடாப்பிடியான போராட்டங்கள் இருந்திருக்கின்றன.

தமிழகம் முழுவதுமே மக்கள் போராடியிருக்கிறார்கள். ஜெ.வை சட்டமன்றத்தில் தீர்மானம் போட வைத்ததில் மக்கள் போராட்டத்திற்கு பங்குண்டு. விடுதலை குறித்து அரசு வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், ஜெ.வே இந்த விசயத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்.

ஜெ. விடுதலை செய்ததை பலரும் பாராட்டுகிறார்கள். தப்பில்லை.ஆனால் அமைப்புகளின், மக்களின் போராட்டங்களை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு விடுதலை செய்ததற்காக ஜெ.யின் தைரியம் பிரமாதம். அம்மா இப்படித்தான் அதிரடியாக பல பிரச்சனைகளை தீர்ப்பவர். அப்படி, இப்படி என இன்னும் என்னனென்னவோ புல்லரித்துப்போய் எழுதி, ஜெவை. பிரதமராக்கலாம் என இந்தியாவை ஜெ.வின் காலடியில் வைப்பதை நாம் அனுமதிக்கமுடியாது. நாட்டை கொள்ளையிட்டு கொண்டும், இன்னமும் மொத்தமாக கொள்ளையிட காத்திருக்கும் பல கழுகுகளுக்கு ஜெ.வைப் போல பாசிஸ்டு இருந்தால், நன்றாக இருக்கும் என காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், டுபாக்கூர் மோடியை கூட வானாளாவ புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜெ.விடம் அடிவாங்காத பிரிவினர் உண்டா?  இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட கண் தெரியாத மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய நியாய கோரிக்கைகளுக்காக போராடும் பொழுது, மிக மோசமாக நடத்தியவர் தான் இந்த ஜெ.

நாம் எப்பொழுதும் பழசை மறந்துவிடக்கூடாது!

Friday, February 14, 2014

அவளின் காலடித்தடங்கள்!

முகநூலிலும் பதிவுகளிலும் இன்று காதல் பிரவாகம் எடுத்து ஓடுகின்றது.   கடந்த வந்த பாதையும் என் காதல்களும் மனதில் மெல்ல எழும்புகின்றன.

பள்ளிக் காலத்தில் எங்களுடன் படித்த ‘பாபி’ தான் எங்கள் வகுப்பில் உள்ள எல்லா பசங்களுக்கும் காதலி!  கொஞ்சம் சிவப்பாய், கொஞ்சம் பூசினாப்பல, யாரையும் வசீகரிக்கிற புன்னைகையுடன், நடுத்தர வர்க்கம் என்பதால் மற்ற பிள்ளைகளை விட கொஞ்சம் பளபளக்கும் ஆடைகளோடு வருவதால் அவள் தேவதை தான்.  அவளிடம் பேசும் பொழுது பையன்கள் மரியாதையுடன், குழைந்து பேசுவார்கள். தேவதையிடம் அப்படித்தான் பேசமுடியும்! என் கிட்ட பேனா கேட்டாள்! பென்சில் கேட்டாள்! என அள்ளிவிடுவார்கள்.  ஒரு நாள் பள்ளி மாறி, இறக்கை முளைத்து, போயே போய்விட்டாள்!

பருவ வயதில், என்னுடைய தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு வேகமான சூறைக்காற்றைப் போல கடந்து சென்ற ‘செல்வி’ என்னை மிகவும் கவர்ந்தாள். அவள் வேலை செய்த கடைக்கேல்லாம் போய், பொருள் வாங்குவது போல போய், சைட் அடித்திருக்கிறேன்.  அன்னாவும் ரசூலும் படத்தில் ஆண்ட்ரியாவை பகத் பாசில் பின் தொடர்வானே அதைப் போல பல நாட்கள் பின் தொடர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள் வழியில் பெயரென்ன என கேட்டதற்கு, பெயர் தானே என சர்வசாதாரணமாய் சொல்லி சென்றாள்.  அவளின் வேகம், நடை, பேச்சு, நடை என எல்லாம் பிடித்தது (பருவ வயது என்கிறீர்களா!)

அவளை காதலிக்கலாம் என நினைக்கும் பொழுது, திடீரென ஒரு நாள் மாலையும்,கழுத்துமாய் திருமணம் முடிந்து சொந்தங்களுடன் ஆட்டோவில் வந்திறங்கிய பொழுது,   தாடி வளராமலே சில நாட்கள் சோகமாய் திரிந்தேன்.

அவர்களுடைய குடும்பத்தில் உள்ள சில சிக்கல்களினால், செல்வியின் திருமணம் மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை.  அவளுக்காக வருத்தப்படுவதா, எனக்காக சந்தோசப்படுவதா என சில நாட்கள் குழம்பி திரிந்தேன்.

சில நாட்களில் நானும், அவளும் நார்மலுக்கு வந்தோம்.  அப்பொழுதெல்லாம் செல்போன் இல்லாத காலம்.  துணிந்து ஆறுதல் சொல்லி கடிதம் எழுதினேன். நான் நாலு பக்கத்திற்கு நாள் நாள் யோசித்து எழுதினால், அவள் நாலே வரியில் அடுத்த நாளே கவித்துவமாய் பதில் வரும்!

கொஞ்சம் இலக்கியமெல்லாம் வாசித்து, நண்பர்களுடன் சுற்றித்திரிந்த காலம் அது! அவளுடன் நட்பாகி, பழகி, இருவருக்கும் பிடித்திருந்தால் காதலிக்கலாம் என கற்பனையில் திட்டம் தீட்டினேன்.

நான் அவளை நெருங்க முயற்சித்த பொழுதெல்லாம் அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள். திருமண முறிவு ஆழமான காயங்களை ஏற்படுத்தியிருக்கும். எனக்கு அத்தனை புரிதலில்லை. அவள் எப்படி யோசிப்பாள் என யோசித்ததேயில்லை.

இந்த குழப்பத்திற்கும் ஒருநாள் முடிவு வந்தது.   இடையில் சில காலம் வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து போய்க்கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றி என்ன நினைத்தாலோ, வீட்டில் பார்த்த மறு திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாள். இப்பொழுது யோசித்தால், நான் அத்தனை நம்பிக்கை தரவில்லை என உணர்கிறேன்.  பிராக்டிலாக யோசித்தால், செல்வி எடுத்த சரியென்றேபடுகிறது.

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு ஒரு நாளும் கண்ணில்பட்டதே இல்லை.  இன்றைக்கும் நடிகர் சிரஞ்சிவியின் நடனத்தைப் பார்த்தால், செல்வி நினைவிற்கு வருகிறாள்.  வாழ்த்து அட்டைகளைப் எங்காவது கண்ணில் பட்டால் செல்வி தெரிகிறாள்.

இன்னும் சில காதல்கள் இருக்கின்றன.  இன்றைக்கு செல்வியின் நினைவுகள் போதும்!

Thursday, February 13, 2014

கோபமும், மன்னிப்பும்!

அன்றைக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும் பொழுது, சில பிரச்சனைகளினால் மகா எரிச்சலுடன் கிளம்பினேன்.  போகிற வழியில் நண்பனை பார்த்துவிட்டு போகலாம் என போனில் பேசினேன்.  ”20 நிமிடம் ஆகும். கொஞ்சம் காத்திரு. வந்துவிடுகிறேன்” என்றான்.

நேரே போய் அலுவலகத்திற்கு கீழே வண்டியை பார்க் செய்துவிட்டு டீ குடித்துவிட்டு வரலாம் என கிளம்பினேன்.  அப்பொழுது ஏடிஎம் வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த செக்யூரிட்டி “இங்க வண்டியை வைச்சுட்டு எங்க போறீங்க!. வண்டியை எடுங்க” என்றார்.

“எங்கே போறோம்னு உங்ககிட்ட சொல்லிட்டு தான் போகனும்னா!... இன்னும் சில வார்த்தைகள் கோபமாய் பேசிவிட்டு, விருட்டேன போய்விட்டேன்.

தேநீர் குடித்துக்கொண்டிருந்த பொழுது, நடந்தவற்றை அசைப்போட்ட பொழுது,  யார் மேலேயோ இருந்த கோவத்தை ஏன் நாம பெரியவர்கிட்ட காட்டினோம்? ரெம்ப தப்பாச்சே!  என யோசித்தேன்.  மேலே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பனுக்காக காத்திருக்கிறோம் என சொல்லியிருந்தா, முடிந்துவிட்டது.  இவ்வளவு மோசமா இதற்கு முன்னாடி இப்படி நடந்துகொண்டதில்லையே!  என நினைத்தேன்.

நேரே போய், “நான் வேறு ஒரு பிரச்சனையிலே உங்ககிட்ட கோபமாய் பேசிட்டேன்.  மன்னிச்சுங்க!  மேலே தான் என்னுடைய நண்பர் வேலை செய்கிறார்” என்றேன்.

அவர் பெருந்தன்மையாய்,  ”மன்னிப்பெல்லாம் எதுக்கு தம்பி! பக்கத்திலே பெரிய மால் இருப்பதால், அங்க பார்க்கிங் சார்ஜ் அதிகம்னு இங்க வந்து பார்க் பண்ணிட்டு போயிடறாங்க!  ஏடிஎம்ல பணம் எடுக்க வர்றவஙக வண்டியை வைக்க தடுமாறாங்க! கவனமா பாத்துக்கிட மாட்டிங்களான்னு கம்பெனி என்னை திட்டுது!” என்றார்.

அதற்கு பிறகு நண்பன் வருகிறவரை அவரிடம் பேசியதில், இரண்டு பசங்க! வளர்த்து ஆளாக்கி, திருமணம் முடித்து வைத்தும் இன்னும் செட்டிலாகலை! என் மனைவிக்கு உடம்புக்கு முடியல!  பன்னிரண்டு மணி நேரத்திற்கு இவங்க தர்ற சம்பளம் ரெம்ப கம்பி! என அவருடைய துயரக்கதையை முழுவதும் சொன்னார்.

எங்க அப்பா கூட இறப்புக்கு முன்னாடி சில காலம் செக்யூரிட்டியாக வேலை செய்தது நினைவுக்கு வந்தது.

Wednesday, February 12, 2014

லிப்ட் கதைகள் பாகம் 2

வழக்கம் போல அலுவலகம் முடிந்து வந்துகொண்டிருந்தேன்.  சென்னையின் ஒதுக்குப்புறமான பகுதி என்பதால், குறிப்பிட்ட நேரங்களில் தான் பேருந்து வரும். அதனால் மக்கள் எல்லோரிடமும் உரிமையாய் லிப்ட் கேட்பார்கள்.  நானும் அழைத்துப்போவேன்.

இன்றும் ஒருவர் கைகாட்டினார்.  ஏற்றிக்கொண்டேன்.  கிளம்பிய கொஞ்ச நேரத்தில் வண்டியில் ஒரு சின்ன தடுமாற்றம் வந்தது. கொஞ்ச தூரம் சாலை மோசமாக இருந்ததால் தானோ என கொஞ்சம் உற்றுக் கவனித்ததில் வண்டியில் தான் தடுமாற்றம் இருப்பதை உறுதிப்படுத்தினேன்.

வண்டியில் காற்று குறைவாக இருக்கிறதோ என கொஞ்சம் நிறுத்திப் பார்த்தேன். நான்கு நாட்களுக்கு முன்பு தான் காற்று அடித்திருந்தேன்.  சோதித்ததில் காற்றுப் பிரச்சனையில்லை.

திரும்பவும் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.  சிறிது தூரம் ஓடியதும், மீண்டும், அதே தடுமாற்றம்.  காலையில் கூட இந்த தடுமாற்றம் இல்லையே! என ஒரே யோசனை.  பழைய வண்டி என்றாலும் பரவாயில்லை. வண்டி வாங்கி ஆறு மாதம் தான் ஆகிறது.

சில சமயங்களில் வயதானவர்கள் உட்கார்ந்து வரும் பொழுது, ‘கிரிப்பாக’ பிடிக்கவில்லை என்றால், இந்த தடுமாற்றம் வரும்.  ஆனால், ஏறியிருப்பவரோ நடுத்தர வயது நபர் தான்.

கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருப்பதை கவனித்தேன்.  ஏதும் வித்தியாசமாகபடவில்லை.

இப்படி குழப்பத்திலேயே 20 நிமிடமும் பயணம் முடிந்து, அவர் இறங்கும் பொழுது தான் கவனித்தேன்.  கொஞ்சம் தடுமாற்றத்துடன் இறங்கினார். அதே போல, நடக்கும் பொழுதும்!  சே! ஒரு ‘குடிமகனுக்காகவா’  இவ்வளவு சின்சியரா லிப்ட் கொடுத்தோம் என நொந்தே போய்விட்டேன்.  :(

தொடர்புடைய சுட்டி :

லிப்ட் - சில குறிப்புகள்

Friday, February 7, 2014

பாசமும் பிற்போக்குத்தனமும்!

அம்மாவை எனக்க்கு ரெம்ப பிடிக்கும்.  அம்மாவின் வார்த்தைகளுக்கு மிகுந்த மரியாதை தருபவன் நான். ஆனால்,  பொது விசயங்களிலும், வீட்டு விசயங்களிலும் பல சமயங்களிலும் அம்மாவிற்கும், எனக்கும் வாக்குவாதம் வரும்.  அம்மாவைப் பிடிப்பதால், அம்மாவின் பிற்போக்குத்தனமான கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது!  பாசம் உள்ள அம்மா தான் பிற்போக்குத்தனங்களையும் கொண்டிருக்கிறார்.  அம்மாவை நேசிக்கிறேன். அம்மாவிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை வெறுக்கிறேன்.  இப்படி தொடர்ச்சியாய் அம்மாவிடம் விவாதிப்பதால்,  எது பிடிக்கும்? எது பிடிக்காது? என அம்மாவிற்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு.

ஆனால் அண்ணன் அப்படியில்லை! அம்மா என்ன சொன்னாலும் அமைதியாக தலையை தலையை ஆட்டிவிட்டு, அந்த பக்கம் போய் மறந்துவிடுவான்.  நிறைய சண்டைப் போடுகிற என்னைவிட அம்மாவிற்கு அண்ணனின் மீது நிறைய வருத்தம்.  அதனால், அண்ணணைப் பற்றி நெருங்கிய சொந்தங்களிடம் புலம்பிக் கொண்டிருப்பார்.

இந்த தெளிவு ஒரு சமயத்தில் கைவரப்பெற்ற தெளிவு. பலருக்கும் இதில் குழப்பம் இருப்பதால் தான், பாசமுள்ள அம்மா/அப்பாவை எப்படி எதிர்த்து பேசுவது? என சரிக்கும் தவறுக்கும் அல்லாடி தவறான முடிவு எடுக்கிறார்கள்.

Sunday, February 2, 2014

கூடங்குளம்! - கவிதை

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நாம் வருவோம் என்ற நம்பிக்கைகளோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நாம் வரும்வரை காத்திருப்போம் என்ற உறுதியோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்கும் அது புரியுமென்ற உறுதியோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமது கைகள் அவர்கள் கைகளோடு கோர்க்கும் என்ற தோழமையோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமது வாரிசுகளின் எதிர்காலத்தையும் தமது தோள்களில் சுமந்தபடி

அவர்கள் காத்திருக்கிறார்கள்
விடியல் தேடி நாலாபுறமிருந்தும்
அவர்களின் கூடாரங்கள் நோக்கி
நாம் அணிவகுத்து வருவோம் என்ற கனவுகளோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்கும் சேர்த்து ஆண்டுகள் மூன்றாய்
அயராது போராடிக் கொண்டே

அவர்கள் காத்திருக்கிறார்கள்
தங்கள் உயிரையும் வாழ்வையும் துச்சமென முன்வைத்து.
நமது படையணிகள்
எல்லாபுறமும் சூழந்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்யுமென்ற லட்சியத்தோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
மக்கள் மகத்தானவர்கள் என்ற கம்பீரத்தோடு!

- மகேஷ்