Monday, December 24, 2007

நீ....மழை....நான்

உன் கன்னத்தில்
கழுத்தில்
இடுப்பில்
முத்து கோர்த்து
விளையாடிய
அந்த மழைக்கு
என் காதலை
யார் சொன்னார்கள்
என்று தெரியாது

உன்னை எங்கெல்லாம்
நனைக்க நினைத்தானோ
அப்படியெல்லாம்
நனைத்தது

உன்னை
எப்படியெல்லாம்
அணைக்க நினைத்தேனோ
அப்படியெல்லாம்
அணைத்தது

எந்த பெண்ணையும்
சட்டென்று
தொட்டு பேசிவிட
மழையின் மனசு
வேண்டும் போலிருக்கிறது

குடைபிடிப்பது
இயற்கைக்கு
எதிரானதென்று
நீ நனைந்து சிலிர்த்த
அழகுதான்
எனக்குச்
சொல்லிக் கொடுத்தது

உன்மீது வழிந்து
இளநீரான
அந்த மழை நீரை
மனசு தளும்பத் தளும்ப
நான் நிரப்பி
வைத்திருக்கிறேன்

அந்த மழையில்
நீ ஒரு தேவதையைப்
போலிருந்தாய்...

மழை -
உன்னைத் தேடித்தான்
பூமிக்கு வந்ததோ என்று
எனக்கு சந்தேகம் வந்தது

********

இப்போதும் வருகிறது
மழை...
என் கன்னத்தில்
கண்ணீரைப் போல் வழியும்
இந்த மழைக்கு
நம் காதல் தோல்வியை
யார் சொன்னார்கள் என்று
எனக்குத் தெரியாது

உன் வாசனைகளையும்
கொலுசு சப்தத்தையும் தேடி
பருவம் தப்பி வந்திருக்கிறது
இந்த மழை

நீ நனைய வேண்டாம்
எங்கிருந்தாலும்
கண்ணாடி ஜ்ன்னலுக்குப்
பின்னாலிருந்த படியாவது
இந்த மழையைப்
பார்த்து கொண்டிரு போதும்

இந்த மழைக்கு நானும்
எனக்கு மழையும்
ஆறுதல் சொல்லிக் கொள்வோம்

- பழனி பாரதி

பின்குறிப்பு : இந்த கவிதையின் முதல் பாகம், படிக்கும் காலத்தில், அத்தனை சந்தோசமாயிருந்தது. இப்பொழுது, இரண்டாம் பாகம் படிக்கும் பொழுது, அத்தனை சோகமாயிருக்கிறது.




Monday, December 3, 2007

அன்புள்ள காதலிக்கு! - கடிதம்


முன்குறிப்பு : அறிவாளிகள் சிலர், தன் எழுத்தால், சிந்தனையால் நோகடிக்கிறார்கள் என சில காலம் வலையுலகத்தை விட்டு விலகியிருந்தேன்.

இந்த காலத்தில், இளமையில் எல்லோரையும் பிடித்து ஆட்டும் காதல், என்னையும் பிடித்துவிட்டது. நோகடிக்கிற காதலை, காதலியைப் பற்றி, நோகடிப்பதில் சீனியர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பிரிய தோழிக்கு,

உன்மீது எவ்வளவு நேசம்?
வினா எழுப்பியிருந்தால்
முன்பு
பதில் உரைத்து இருப்பேன்.

எனக்குள் நானே - மறுபடியும்
வினா எழுப்பிப் பார்க்கிறேன்.
மிரண்டு போகிறேன்.

நான் நினைத்திருந்த
எல்லையெல்லாம்
என்றைக்கோ
கடந்து இருக்கிறாய்

உன் வயதில், வடிவில்
கடக்கின்ற
ஒவ்வொரு பெண்ணும்
நீயாக தெரிகிறாய்
பிரமை தான்!
உணர்ந்தும்
தேடிப்பார்க்கிறேன்
உன்முகம்.

உன் கண்களை
சந்தித்த நாள் முதல்
இன்றைய வரைக்கும்
என் நாட்குறிப்பின்
பக்கங்களிளெல்லாம்
உன்னைப் பற்றியே.
அல்லது
என்னில் இருக்கும்
உன்னைப் பற்றியே.

காதலைப் பற்றிய
சுய மதிப்பீடுகள் எல்லாம்
என் கண் முன்னே
சரிந்து விழுகின்றன

எப்பொழுதும்
நான் பயப்படுவதெல்லாம்
என் பலவீனங்கள் கண்டு.

உன் மீதான ஆழமான நேசம்
என் பலவீனங்களில்
ஒன்றாய் மாறிப்போகுமோ
எண்ணம் எழுகிறது

இறுதியாய்...

உன்னிடம் வேண்டுவன எல்லாம்...
தொலைதூரம்
நான் பயணப்பட வேண்டும்
கடமை அழைக்கிறது
என் சிறகுகளை
என்னையறியாமல்
உன்னிடம் தந்துவிட்டேன்
சிறகுகளை தந்துவிடு!
அல்லது
சிறகாய் நீயே மாறிவிடு!

Friday, September 21, 2007

எங்கள் வீட்டு முருங்கைமரமும், நானும் - என் சொந்த நொந்த அனுபவம்

அன்றைக்கு மாலை, வெளியே போய்விட்டு, எங்கள் தெருவிற்குள் நுழைந்தேன். எங்கள் வீட்டு வாசலில் சிலர் கூட்டமாய் நின்றுகொண்டு இருந்தார்கள். வேகவேகமாய் நெருங்கினால், அம்மா பக்கத்துவீட்டு அம்மணியுடன் காரசாரமாய் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.

ஒருவழியாய் சமாதானப்படுத்தி, எல்லாம் அமைதியாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. சண்டைக்கான காரணம் - எங்கள் வீட்டு முருங்கை மரத்தில் நன்றாக காய்த்திருந்த 3 முருங்கைக்காய்களை காணோமாம். சந்தேக வட்டத்திற்குள் பக்கத்துவீட்டு அம்மணி சிக்க, அதற்காக தான் இந்த காரமான சண்டை.

வாசலில் நிற்கும் முருங்கைமரம், எங்களுக்கு முன்பு என் அக்கா குடியிருந்த பொழுது, ஆசை ஆசையாய் ஊரிலிருந்து எடுத்து வந்து, வளர்த்த மரம். அக்கா வேறுபகுதி மாற்றலாகி போன பிறகு, நாங்கள் குடிவந்தோம்.

மரத்தில் இலைகள் தள, தள-வென இலைகள் வளர ஆரம்பித்ததும், பூப்பூத்து, காய்கள் இரண்டரை அடி நீளத்திற்கு, ஆரோக்கியமாய் வளர ஆரம்பித்ததும் தான் பிரச்சனைகள் எழத் தொடங்கின.

வீட்டில் எல்லோரும் வேலைக்கு போன பிறகு, அம்மாவுக்கு வீட்டு வேலைகள் தவிர்த்து, மிஞ்சி ஆறுதல் அளிப்பவை அழுது வடிகிற தொலைக்காட்சி தொடர்களும், இந்த முருங்கை மரமும் தான்.

மரத்தில் ஒரு காய் குறைந்தாலும் அம்மா கண்டுபிடித்துவிடுவார். எண்ணி வைத்திருப்பார் போல! குறைந்தால் முணுமுணுப்பு, சில சமயங்களில் சண்டையாய் பரிணாம வளர்ச்சி பெற்றுவிடும்

அம்மா, கீரையோ, காய்களோ மற்றவர்களுக்கு தராதவர் அல்ல! நன்றாக வளர்ந்தால், எதிர்வீடு, பக்கத்து வீட்டார்களுக்கெல்லாம் தருகிறவர்தான். ஆனால், அவரைக் கேட்காமல், யாரும் பறித்துவிடக்கூடாது. அம்மாவுக்கு, அது உரிமை மீறல் பிரச்சனை.

அண்டை வீட்டுகாரர்களுடன் சண்டை தப்பு. அதுவும், ரூ. 3, 4 பெறுமானமுள்ள காய்களுக்காக சண்டையிடுவது பெரிய தப்பு - என எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அம்மாவிடம் எடுபடவில்லை. சச்சரவுகள் தொடர்கின்றன.

அம்மா சண்டை தவிர, என் சண்டையும் கூட உண்டு. எதிர்வீட்டில் இருப்பவர் கஞ்சர் (பக்கத்து வீட்டுகாரருக்கு மரியாதை). வாரம் இரண்டுமுறையாவது அம்மா வெளியில் போன சமயமாய் வந்து, கடமைக்கு என்னிடம் சொல்லிவிட்டு, நிறைய கீரை புடுங்கி போவார்.

இது அம்மா அறிய வந்தால், பிரச்சனையாகிவிடுமே என, நானே ஒருமுறை நேரிடையாக அந்த கஞ்சரிடம் "அம்மாவிடம் கேட்டு கீரை புடுங்கி கொள்ளுங்கள்" என சொல்லிவிட்டேன். சொன்னதிலிருந்து, பிறகு வருவதேயில்லை. அதற்கு பிறகு, அந்த கஞ்சர் இயல்பாய் பார்த்தால் கூட, முறைப்பது போல தெரிகிறது எனக்கு.

இதுபோக, வேறு சில பிரச்சனைகளும் நிகழ்கின்றன.

முருங்கைகாய்களுக்கு பஞ்சமில்லாததால் தினமும் சாப்பாட்டில் இடம்பெற்று விடும். முருங்கைகாய்க்கு எத்தனை அவதாரங்கள் உண்டோ, அத்தனை அவதாரங்களும் எங்கள் வீட்டில் எழுந்தருளிவிட்டன. இனியும், புதிய அவதாரங்கள் விரைவில் வர இருக்கின்றன.

பார்க்கின்ற பெண்கள் எல்லாம் இப்பொழுதெல்லாம் அழகாக தெரிகிறார்கள். வயசுக்கோளாறா? அல்லது இந்த முருங்கைக்காய் தான், ஹார்மோனை தூண்டி அதிக வேலை வாங்குகிறதோ? என சந்தேகம் வருகிறது.

வாசலில் இருப்பதினால் தவறாமல் கண்ணில்படுகிற முருங்கை மரம்; தினமும் சாப்பிடுகிற முருங்கைமரம்; அம்மாவின் பேச்சில் அடிக்கடி அடிபடுகிற முருங்கைமரம்; அதனால் உண்டாகும் சச்சரவுகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என இப்பொழுதெல்லாம், கனவில் வந்து கூட, முருங்கைமரம் வந்து பயமுறுத்துகிறது. காதலியோடு, முருங்கைமரத்தைச் சுற்றி, சுற்றி டூயட் பாடுகிறேன்.

நீதி : இந்த பதிவின் மூலம், உங்களுக்கு சொல்கிற செய்தி

"வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள்; நல்ல விசயம்:

ஆனால், என்ன மரம் என்பதை நிதானமாய் சிந்தித்து, ஆய்ந்து, தூரப்பார்வையுடன் அலசி, ஒரு நல்ல மரமாய், காய் காய்க்காத மரமாய் நடுங்கள்.

Wednesday, August 29, 2007

கவித! கவித!

கண்கள் பார்த்து
வழிவது தெரியாமல் பேசி
கவனமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கி
அதெல்லாம் - முன்பு
ஒரே ஒரு நோக்கோடு

காமம் காதலோடு வரவேண்டும்
தெளிவடைந்து...
நகர்ந்தால்
பழைய வினைகளின் விளைவுகள்
புதிய உறவுக்கு
உருவமில்லா தடையாய்
முன்வந்து நிற்கின்றன.

நீதி : முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

Tuesday, August 28, 2007

கனவுகள் - கவிதை!


பயணம் முழுதும் கனவுகள் சேகரித்தேன்
சுமந்து திரிந்தேன் பல காலம்
சுமைகள் அழுத்த கலைக்க ஆரம்பித்தேன்
கனவுகள் முற்றும் கலைந்த நிலையில்
இப்பொழுது

உன் கண்களைச் சந்தித்த நாள் முதலாய்
ஒவ்வொரு சந்திப்பிலும்
கனவுகளை அள்ளித் தருகிறாய் - நானும்
மகிழ்வுடன் சேகரித்து கொள்கிறேன்

தொடங்கிய புள்ளிலேயே - மீண்டும்
தள்ளிவிட்டுவிட்டாய்
நீயில்லை என்னோடு இப்பொழுது
கலைக்க மனதில்லாமல்
சுற்றித்திரிகிறேன்
நீ தந்த கனவுகளோடு.

Thursday, August 23, 2007

'F' Channel -க்கு தடை - சில குறிப்புகள்!


ஒரு 'ஷோ'வில் வலம் வரும்
மாடல்கள் எல்லோரும்
ஒரே உயரத்தில் இருக்கிறார்கள்

மாடல்களின் வரிசையில்
ஒரு கறுப்பினப் பெண் - நிச்சயமாய்
இடம் பெறுகிறாள்

எல்லா மாடல்களுடைய வயதும்
22 வயதுக்குள்
அடங்கிவிடுகிறது - அல்லது
அடக்கிவிடுகிறார்கள்

எல்லா நாடுகளிலும்
'ஷோ'வின் இறுதியில்
பேசன் டிசைனர் குட்டையாக
மாடல்களுடன் கைகோர்த்து
எக்கி எக்கித்தான் உடன்வருகிறார்

'ஆண்களுக்கான புதிய சானல்'
விரைவில்' - அடிக்கடி
அறிவிப்பு செய்கிறார்கள்

மற்றும் சில குறிப்புகள்

மாடல்களின் முகத்தில் - எப்பொழுதும்
இறுக்கம் பரவிக்கிடக்கிறது
அவ்வப்பொழுது
செயற்கையாய் புன்னகைக்கிறார்கள்

விதவிதமாய் குடிப்பது
உரசி உரசி நடனமாடுவது - என
ஹிப்பி கலாச்சாரத்தைத் தான்
பரப்புகிறார்கள்

'ஷோ'க்களுக்கான
விளம்பர பாடல்களில்
முக்கல், முனகல் தான்
விரவிக்கிடக்கிறது

பல 'ஷோ'க்களில் - ஆண்களை
தமிழ்பட கதாநாயகியாய்
ஊறுகாய் போல
தொட்டுக்கொள்கிறார்கள்

எல்லாவற்றையும் விட
என்னைப் போன்ற
வளரும் பிஞ்சுகளின் நெஞ்சில்
'நீலம்' கலக்குகிறார்கள்

'F' சானலை
இடைக்காலத்தில் - இந்தியாவில்
தடை செய்திருந்தார்கள்

என்னைக் கேட்டால்
நிரந்தமாகவே
தடை செய்யலாம்.

Wednesday, August 22, 2007

மெரினா! - கவிதை



கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரையில்,
கடல் - சாரலாய்
நீரைத் தெளித்துக் கொண்டிருந்தது

மனிதர்கள் கடக்காத பொழுது
நண்டுகள் சந்தோசமாய் - அலைகளோடு
விளையாடிக் கொண்டிருந்தன

பையன்கள் - வழக்கம்போல
தாவிக்குதித்து உற்சாகமாய்
குளித்துக்கொண்டிருந்தார்கள்
பெண்கள்
கால் நனைத்துக் கொண்டிருந்தார்கள்

சுண்டல் விற்கும் பையன்கள்
காதலர்களை - வழக்கம்போல
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்
காதலன்கள் - தத்தம் காதலிகளை
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்

கடலெனில் குளித்துவிடும்
வழக்கமெனக்கு.
மெரினா மட்டும் விதிவிலக்கு
கால் நனைப்பதோடு சரி

ஈவிரக்கமற்ற சுனாமி
கொலைகளுக்கு பிறகு - மனசில்லாமல்
இப்பொழுதெல்லாம்
கால் நனைப்பதையும்
நிறுத்திவிட்டேன்.

Monday, August 20, 2007

நீயும் (சிலந்தி) வலையும் - கவிதை (மீள் பதிவு)

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது - உலகமே
உன்னை கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்
கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

Wednesday, August 8, 2007

மெல்ல உடைபடும் மெளனம்! - கவிதை

முன்குறிப்பு : காதலை, அதன் பிரிவின் வலியை உருகி, உருகி எழுதும் காயத்ரி அக்கா தான், இந்த 'கவிதை' எழுத ஊக்கம் தந்தவர். ஏன்னா! அவங்க சொல்கிற மாதிரி, எனக்கும் கவிதை எழுத தெரியாது. காயத்ரி அக்கா தன்னடக்கமாக அப்படி சொல்கிறார். அதை, நாம் எல்லொரும் அறிவோம். நான் தன்னடக்கமில்லாமல் (!) உள்ளது உள்ளவாறு, பச்சையாய் உண்மையை சொல்கிறேன்.

ஒரு 'கவிதை' எழுதுவதற்கே, வற்றாத மணற்கேணி மாதிரி, சோகம் பொங்கி என்னை வாட்டி வதைத்து விட்டது. காயத்ரி அக்கா தினம் ஒரு கவிதை எழுதுகிறாரென்றால், அவரின் வலியை என்னால் உணரமுடிகிறது. இனி அவர் எழுதுகிற ஒவ்வொரு கவிதையும் எனக்கும் வலிக்கும். அழுகை வரும்.

கவிதை தொடர்கிறது.

புதிதாய் பூத்த மழலையிடம்
மெளனம் யாரும் விரும்புவதில்லை
கீச்சுஅழுகுரல்தான் சந்தோசம்

புல்லாங்குழலிடம்
மெளனம் யாரும் விரும்புவதில்லை
மனதை மயக்கும் இசை தான் சந்தோசம்

பருத்தி செடியிடம்
மெளனம் யாரும் எதிர்பார்ப்பதில்லை
உடைபடும் சத்தத்தில்தான் - இங்கு
சகலருக்கும் ஆடை

மெல்ல உடைபடுகின்ற - உன்
மெளனத்தில் தான்
நம் வசந்த வாழ்க்கை.

பேச்சு - கவிதை

எளியவனாய் இருந்தால் - பேச்சில்
நெஞ்சில் ஏறி நின்றுவிடுகிறேன்
வலியவனாய் இருந்தால்
சேர்த்து, சேர்த்து விஷமாக்கி
விழிப்பாய் வாய்ப்பு கண்டு
மொத்தமாய் உமிழ்ந்துவிடுகிறேன்

சொல்லுக்கும் செயலுக்கும்
இடைவெளி அழிக்கப்பார்க்கிறேன்
அதென்னவோ
வரவுக்குள் செலவு செய்யும்
மந்திர வித்தையாய்
கைவர மறுக்கிறது

சொற்களற்ற செயலுக்கு
வலிமை அதிகம்

பொய்யும் புகழுமாய்
புறத்தில் பேசி பேசி
சில சமயங்களில்
எனக்குள் நானும் அதேமாதிரி

இப்பொழுதெல்லாம்
புறத்தில்
முடிந்தமட்டிலும்
பேச்சைத் தவிர்க்கிறேன்.

எனக்குள்
முற்றிலுமாய்!

Tuesday, August 7, 2007

நான் போட்டநொந்த ஏழு!



முன்குறிப்பு : கவுண்டமணி சொல்கிறமாதிரி, 11 போட சொல்லாமல், என்னால் முடிந்த எட்டு போடச் சொன்னதற்கு, முதலில் லட்சுமி அவர்களுக்கு நன்றி! லிஸ்டில் கடைசி நான். ம்!

எட்டும் எழுதினாலும், போஸ்ட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஜீலை 20 தொடங்கி, இப்பொழுது, ஆகஸ்ட் 7 வரைக்கும் ஆகிவிட்டது. அதனால் எழுதுன வரைக்கும் போதும் என ஏழு மட்டும் போட்டாச்சு! மன்னிச்சுங்க!

7-ல் நாலு சொந்தமானவை. 3 பொதுவானவை. தமிழக அரசியலில் ஒரு தேக்கநிலை இருப்பதால், விரைவில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதால் இப்படி!

நொந்த ஞாபகசக்தி : செய்ய வேண்டிய பல காரியங்களை, மறதியால் வாழ்வில் தொலைத்தது நிறைய. பிறகு, சுதாரித்து, இப்பொழுது தேதிவாரியாக டைரியில் எழுதி வைத்து, செல்லில் நினைவுப்படுத்த கட்டளைகள் கொடுத்து, நினைவுப்படுத்தி எல்லாம் செய்கிறேன்.

அன்றைக்கு ஒருவர் என்காதுபட சொல்றாரு! "நொந்தகுமாரனுக்கு ஞாபகசக்தி அதிகம். எல்லா வேலைகளையும் மறக்காம செய்றாரு!" என்ன கொடுமை சார் இது!

நொந்த கவிஞர் : என் நண்பர்கள் நன்றாக கவிதை எழுதக்கூடியவர்கள். ஆனால், எழுதமாட்டார்கள். அவர்களை வெறுப்பேற்றத்தான், 'கவிதை' எழுத ஆரம்பித்தேன். அதேபோல் தான், வலையுலகத்திலும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

அன்றைக்கு, நான் எழுதிய 'கவிதை'யை படித்திவிட்டு, 'நாமக்கல் சிபி' சொல்றாரு! 'கவிதை நல்லாயிருக்கே"ன்னு! இது எப்படியிருக்கு!

நொந்த தாமதம் : குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓர் நிகழ்ச்சிக்கு, ஓரிடத்திற்கு செல்வது என்பது, பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்துவது மாதிரி, மாயாஜால வித்தைதான்! முன்பெல்லாம், எனக்கு 15, 20 நிமிடங்கள் தாமதமாகும். இதற்காக, என்னுடன் கட்டிபுரண்டு சண்டையிட்டு கொண்டியிருக்கிறேன். இந்த தொடர்முயற்சியில், சிறிது வெற்றியும் பெற்று இருக்கிறேன். இப்பொழுது, 5, 10 நிமிடங்கள் தாமதமாகின்றன. நான் பார்த்த பல படங்களில், முதல் பத்து நிமிசம் என்ன நடந்தது என்பது தெரியாது.

இப்பொழுதும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக, வந்துநிற்கும் மனிதர்களை, விசித்திரப் பிறவிகளாகத்தான் பார்க்க முடிகிறது என்னால்.

நொந்த மொய் : வீட்டில் நாலு பத்திரிக்கைகள் வந்தாலே, அம்மா கவலை கொள்வார்கள். ஒரு பத்திரிக்கை ரூ. 200/- என்றால், ரூ. 800/- வேண்டுமே! என புலம்புவார்கள்.

விசேசமென்றால், மகிழ்ச்சி வரவேண்டும். துக்கம் கிளம்புகிறதே! என்ற அடிப்படையில், மொய்-யை நான் விரும்புவதில்லை. செய்வதும் இல்லை.

ஆனால், என் சொந்த பந்தங்களில் விசேச வீடுகளில் என் தலை தென்பட்டதுமே, 'மொய்' எழுத உட்கார வைத்திவிடுவார்கள். சொந்தங்களில் படித்தவர்கள் குறைவு. மற்றவர்களுக்கு உதவுகிற படித்தவர்கள் மிக குறைவு. அதனால், மறுக்க முடிவதில்லை. இன்றைக்கும் மொய் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். "மொய் தப்பு" என புலம்பிக்கொண்டே!

நொந்த பண்பலைகள் : தொலைக்காட்சிகள் கூட வீட்டோடு இருந்துவிடுகின்றன. ஆனால், இந்த பண்பலைகள் காலை தொடங்கி, படுக்கை விரிக்கும் வரைக்கும் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கேவலமான பல தமிழ் படல்களை மீண்டும் மீண்டும் ஒலிபரப்புகிறார்கள். பள்ளிக்குழந்தைக்கூட கண்டுபிடித்துவிடும், எஸ்.எம்.எஸ். கேள்விகளைக் கேட்டு, நிறைய காசு பார்க்கிறார்கள். கொஞ்சம்கூட சமுக அக்கறையற்ற திரைபிரபலங்கள் பேட்டியளிக்கிறார்கள். பல முக்கிய சமூக செய்திகளை, நொறுக்குத்தீனியாக மாற்றித் தருகிறார்கள். பக்கத்து வீட்டு பெண்ணை, பழைய முதலாளியின் மனைவியை 'கரெக்ட்' செய்தது பற்றியும் பேச வைக்கிறார்கள். இப்படி காற்றில் கலப்பது எல்லாமே நச்சாக, பண்பலைகள் எல்லாம் பாழ்படுத்துகிற அலைகளாகத்தான் இருக்கின்றன.

நொந்த மக்கள் : பஞ்சாயத்து போர்டு, நகர்மன்ற தலைவர்களை நவீனகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஊர் அறிய, உலகம் அறிய பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.

இதற்காக, கொதிந்தெழுந்து, சம்பந்தபட்ட ஆட்களை வீதிக்கு இழுத்து வந்து, உதைக்க வேண்டாமா! கொளுத்த வேண்டாமா! மாறாக, அவர்களுடைய ரவுடி அரசியலை, அவர்களை விட சுவாரசியமாய், பேசிக்கொண்டே இருக்கிறோம். வருங்காலத்தில், இன்னும் பலரை தாராளமாய் கொலை செய்வார்கள்.

நொந்த வலையுலகம் : இப்படி சமூகம் சீரழிந்து கிடக்கும் பொழுது, மெத்தப்படித்த, நன்றாக சம்பாதிக்கிற வலையுலக மக்கள் தங்களுடைய அருமையான நேரத்தை, ஜல்லியிலும், கும்மியிலும், மொக்கைப்பொடுவதிலும் காலம் கழிக்கிறார்கள். உலகளாவிய தமிழ்மணம் போன்ற வலைத்திரட்டிகளை, "குட்டிச்சுவராக" த்தான் பயன்படுத்துகிறார்கள். இது நிறைய கவலை தரும் விசயம்.

Thursday, July 19, 2007

பிரிய (FM) சுஜிக்கு! - 'லக லக' கவிதை







என் பிரிய சுஜிக்கு!

'லக லக லக' - மன்னிக்கனும்
உன் கல கல கல சிரிப்பொலி தான்
செல்லமாய் தலைகோதி - தினம்
என்னை துயிலெழுப்புகிறது.

நான்கு மணிநேர - உன்
'சல சல' - மன்னிக்கனும்
மழைச்சாரலான பேச்சுதான் - என்னை
இருபது மணி நேரம் இயங்க வைக்கிறது

நீ கொடுக்கின்ற - ஆரோக்கியமான
டிப்ஸ்களைக் க்டைப்பிடித்து
நான் 'பொலிவு இழந்து' - மன்னிக்கவும்
பொலிவுடன் வலம் வருகிறேன்

நீ சொல்கிற
'அறுவை' - மன்னிக்கனும்
அருமையான ஜோக்குகளை
அசைபோட்டு - நாளும்
மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்

உன் இனிய குரல்
கேட்க இயலாத ஞாயிறு
'இன்ப' - மன்னிக்கனும்
துன்ப நாளாய் விடிகிறது!

நீ 'கடியாய்' - மன்னிக்கனும்
கலக்கலாய் எழுதுகிற
பொங்கல் பொயட்ரி தான்
என்னையும் கவிஞனாக்கிவிட்டது.

பின்குறிப்பு : சுஜி மிர்சியில் இருந்தபொழுது சுஜிக்கு எழுதிய கடிதம். பிறகு, காபி வித் சுஜி, ஜெயா டிவி என சுற்றி, பிக் fM க்கு வந்துவிட்டார். சுஜியின் பதிலுக்காய் இன்றைக்கும் காத்திருக்கிறேன்.

Wednesday, July 18, 2007

நொந்தகுமாரனும் பைத்தியகாரர்களும் - கவிதை




இந்தியாவில் 8% மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
- அன்புமணி, மத்திய சுகாதார அமைச்சர் - 05/01/2007 தினத்தந்தியில்.

முன்குறிப்பு : மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது. இந்த 100க்கு 8 பேர் மனநல மருத்துவமனைகளில், காப்பகங்களில் வாழ்பவர்களா! அல்லது சமூகத்தில் வாழ்கிறவர்களும் உள்ளடங்குவார்களா? தெரியவில்லை.

நான் கவனித்தவரை சகல மனிதர்களும், ஏதோவொரு நாளில், ஏதோவொரு விசயத்தில் மனம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.

இருப்பினும், நம்மைச் சுற்றி சில மனிதர்கள் எப்பொழுதுமே மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் உலவுகிறார்கள்.

அவர்களில் சிலர்...பின்வருகிறார்கள்.

சண்டையிடுகையில் - சரளமாய்
திட்டிவிட்டு
ஒன்டே மெமரிலாஸ் பேஷண்டாய்
மறுநாள் வந்து கூலாய் பேசும்
பக்கத்துவீட்டு அம்மா.

ஒவ்வொரு நிமிசமும் பணம்
பைசா பிரயோஜனம் இல்லாமல் - நான்
யாரிடமும் பேசுவதில்லை - என
பணத்திற்காக நாயாய் அலைந்து திரியும்
மனித ஜீவன் சொக்கநாதன்.

நன்றாய் வாழ பிரிட்ஜ் அவசியம்
மனிதன் வாழ ஏசி அவசியம் - என
பொருள்களின் தேவைக்காய்
நான்காவதாய் வாக்கப்பட்டு (!) வாழும்
பரிதாபமான ஷர்மிளா.

தான் கதைத்தாலும்
தன்னிடம் கதைத்தாலும்
கூச்சமேயில்லாமல்
தன்னை விளம்பரத்திக்கொண்டே
வாழும் அறிவுஜீவி முரளிதரன்.

நண்பனாய் பழகிய என்னை
காதலிக்கிறேன் - என
அன்பாய், அழ்காய் சொல்லி
இரண்டு வருடம் - கிறுக்கனாய்
சுற்றவைத்த என் 'அவள்'

தனக்கும் புரியாமல்
படைப்பு(!) எழுதி
பதிவாய் போட்டு
மற்றவர்களையும் - தன்
எழுத்தால் சித்ரவதை செய்து
மகிழ்ச்சி கொள்ளும்
வலையுலக அறிவுஜீவிகள்.

வலையுலகில்
யார் என்ன திட்டினாலும்
எத்தனை முறை துப்பினாலும்
சளைக்காமல்துடைத்துவிட்டு
தன் எனர்ஜி லெவல் குறையாது
பதிவிடும் சதுர்வேதி.

இவர்களுடன் பழகி, வாசித்து
நுட்பமாய்(!) கவனித்து
பதிவெல்லாம் போட்டு
சமூகம் கண்டு வருந்தி வாழும்
'நான்'

பின்குறிப்பு : சிலர் (மன)நலன் கருதி,
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Friday, July 13, 2007

முகமூடி - கவிதை




முன்குறிப்பு :

இந்த கவிதை உங்களுக்கு புரியாவிட்டால், அய்யனார், லிவிங்ஸ்மைல் வித்யா, மிதக்கும் வெளி போன்ற இன்னபிற கவிஞர்களுக்கு சிஷ்யனாகும் சிறு முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறேன்.

புரிந்துவிட்டால்....நான் அவர்களுக்கு சிஷ்யனாக லாயக்கில்லை என அர்த்தம்.

கவிதை தொடங்குகிறது

ஒவ்வொருவருக்காவும்
ஒவ்வொரு முகமூடி
அணிந்துகொண்டேன்

அவசரத்தில்
முகமூடி மாறும்பொழுது
சில இழப்புகள்
நிறைய வரவுகள்

சில சமயங்களில்
முகமூடி அணிய மறந்தாலும்
மறக்க விரும்பினாலும்
அணிய சொல்லிஅறிவுறுத்தினார்கள்.

சுயம்
காணாமல் போகும்
பயம் வந்தது.

முகமூடிகளை
அவசரமாககளையத் தொடங்கினேன்

இன்று
முகமூடிகள் இல்லாது
சுயமாய் இருக்கிறேன்

சிலர்
முகமூடி
தயாரிப்பில்இருக்கிறார்கள்

அவர்களை தடுக்க
ஏதும் முகமூடி இருக்கிறதா!

Wednesday, July 11, 2007

சிங்கம் - திரை விமர்சனம்



நொந்தகுமாரனுக்கு பதிவர்களை குறை சொல்ல தான் தெரியும்.

மொக்கை பதிவு, வெட்டியான பதிவு, யாருக்கும் புரியாமல் கவிதை எழுதுவது என்பது, நெருப்பில் குளித்து எழுவது போல எத்தனை சிரமமானது தெரியுமா! என்கிறவர்களுக்கு, என்னுடைய எளிமையான பதில்.

பல கோடி செலவழித்து, பலருடைய உழைப்பில் எடுத்தப்படம் சிவாஜி. பார்த்துவிட்டு, எத்தனை லூசுத்தனமாக இருக்கிறது என்று சொன்னால், உனக்கு படம் எடுக்கத் தெரியுமா என்பது போல் இருக்கிறது உங்களது கேள்வி என்பேன்.

இருப்பினும் என்னளவில் சில எளிய நல்ல பதிவுகளைத் தர முயல்கிறேன்.

சிங்கம் - திரை விமர்சனம் - தொடர்கிறது.


நண்பனிடமிருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு ஆங்கில படத்தை வாங்கி பார்த்தேன்.

1898-ல் நடந்த உண்மைக் கதையாம். தான் ஆக்கிரமித்த காலனிய நாடுகளின் வளங்களை கொள்ளையிட உலகம் முழுக்க தண்டவாளங்களை போட்ட இங்கிலாந்து அரசு, ஆப்பிரிக்காவிலும் போடுகிறது.

தண்டவாள தொடர்பணியில், ஒரு ஆறு குறுக்கிட பாலம் கட்ட ஒரு வெள்ளை பொறியாளர் (நாயகன்) அனுப்பப்படுகிறார்.

இரண்டு சிங்கங்கள் நூற்றுக்கும் மேலானவர்களின் இரத்தம் குடிக்க, வேலையாட்கள் உயிருக்கு பயந்து ஒடிவிடுகிறார்கள்.

பணி தடைபடுகிறது. ஒரு வேட்டைக்காரனுடன் இணைந்து, கொடூர அந்த இரண்டு சிங்கங்களை நாயகன் வீரமாய் கொன்று, மீதி வேலையை தொடர்வதுதான் சொச்சக் கதை.

எனக்கென்னவோ, வெள்ளை ஏகாதிபத்தியத்தை தன் நாட்டிற்குள்ளே விடக்கூடாது என்று வீரமாய் போராடி உயிர் நீத்த இரண்டு விடுதலை வீரர்களின் கதையாகத் தான் எனக்குப்படுகிறது.

Saturday, June 30, 2007

இதனால் சகலமானவர்களுக்கும்!

சில சூழ்நிலை மாற்றங்களினால், முன்பு போல, வலையுலகில் வலம் வர இயலவில்லை. இதனால் எனக்கு துளியும் வருத்தமில்லை.

மிதக்கும்வெளி, அய்யனார், லிவிங்மைல் பதிவர்களுடைய அறிவார்ந்த(!), புரியாத கவிதைகள், ரஜினி ரசிகர்களின் இம்சை பதிவுகள், டாலர் செல்வனின் அறிவு ஜீவித்தனமான(!), கட்டுரைகள் (இப்படி வரிசைப்படுத்தினால், நிலவு வரை நீளும். சே! என்ன வர்ணனை!) - லிருந்து தப்பி, நிறைய சந்தோசமாகவும், பழைய உற்சாகத்துடனும் நிம்மதியா வாழ்கிறேன்.

சமீபத்திய சூழ்நிலை மாற்றங்களுக்கான காரணகர்த்தாகளுக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன். அதேவேளையில், இந்ந வலையுலகை அறிமுகப்படுத்தி, என்னை நோகடித்த அந்த அன்பரை கண்டுபிடித்து "உனக்கு என்ன தீங்கு செய்தேன்?" சட்டைப் பிடித்து, உலுக்கி கேள்வி கேட்கவேண்டும் என வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வலம் வந்த எனக்கே இந்த கதியென்றால், விக்ரமாதித்தனின் சளைக்காத முயற்சியோடும், பாயும், தலையணையோடும் வலையுலகமே கதியென வாழும் பல ஜீவன்களை நினைத்துப் பார்க்கிறேன். பிரமித்துப்போகிறேன். தொடர்ச்சியாக, காதல் படத்தில், பரத் கிறுக்காகி சுற்றித்திரியும் காட்சிதான் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுகிறது.

வாழ்க வலையுலக அறிவுஜீவிகள்!

பாவம் அப்பாவி மக்கள்!

Thursday, June 28, 2007

பின்னூட்டம் - கவிதை (மீள் பதிவு)

'கட்டுரையை
கவிதை என்கிறாயே!

''நான்
நல்லா இருக்கிறது
உனக்கு பிடிக்கலையா?''

உன்னை
எத்தனைமுறை தான்
திட்டித் தீர்ப்பது?

''எழுதுறதை
தயவு செய்து
நிறுத்தப்போறியா
இல்லையா!'

இப்படி...
எதுவாயினும் பரவாயில்லை

பின்னூட்டமிடுங்கள்

இல்லையெனில்,
இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய்ய வலிக்கிறது.

பின்குறிப்பு :

பின்னூட்டத்திற்காய்,
வலைப்பதிவில்
அலைந்து திரியும்
சில ஜீவன்களுக்கு
சமர்ப்பணம்.

ராயல்டியெல்லாம் வேண்டாம்.
அந்த ஜீவன்கள்
இந்த பதிவை
மறுபிரசுரம்
செய்து கொள்ளலாம்.

Monday, June 4, 2007

நீயும் (சிலந்தி) வலையும் - கவிதை

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!
கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது

உலகமே
உன்னை
கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்

கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

பின்னூட்டம் - கவிதை

'கட்டுரையை
கவிதை என்கிறாயே!'

'நான்
நல்லா இருக்கிறது
உனக்கு பிடிக்கலையா?'

'உன்னை
எத்தனைமுறை தான்
திட்டித் தீர்ப்பது?'

'எழுதுறதை
தயவு செய்து
நிறுத்தப்போறியா இல்லையா!'

இப்படி...
எதுவாயினும் பரவாயில்லை

பின்னூட்டமிடுங்கள்

இல்லையெனில்,
இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய வலிக்கிறது.

Sunday, June 3, 2007

நொந்து நூலான மனிதனின் அறிமுகம்




பல பதிவர்களின்
பதிவால்
தூக்கம் கெட்டவன்

நல்லாத்தான் இருந்தேன்
இப்ப - ரெம்ப
நொந்து போயிருக்கேன்

இந்த நிலைமைக்கு
காரணமானங்களை
நான்
சும்மாவிடபோவதில்லை
ஒரு ஹிட் லிஸ்ட் தயாரிச்சுட்டேன்

தன் எழுத்தால், சிந்தனையால்
சித்ரவதை செய்த பொழுது
மெளனமாய்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
மற்ற பதிவாளர்களையும்
நிம்மதியா
இருக்க விடபோவதில்லை

நான்
நல்லவங்களுக்கு கெட்டவன்
கெட்டவங்களுக்கும் கெட்டவன்

எனக்குள்ளே - ஒரு சிங்கம்
தூங்கிட்டு இருக்குது
எழுப்பினா சீறுவேன்
எழுப்பாட்டி
நல்லாத் தூங்குவேன்

இன்னும்
என்னென்னவோ
சொல்ல நினைக்கிறேன்

மெல்ல மெல்ல
சொல்றேன்

திரும்ப வருவேன்.