Thursday, January 31, 2013

8 MM - திரைப்பார்வை

மொத்த கதையும் துப்பறிவது, பாலியல் காட்சிகள் என நகர்வதால், நிறைய வல்லுறவு காட்சிகள், சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள் என ஒரு பக்கா ஹாலிவுட் மசாலாவாக எடுக்க எல்லா வாய்ப்புகள் இருந்தாலும், இயக்குநர் அதையெல்லாம் தவிர்த்து கதையம்சம் கொண்ட, உணர்ச்சிமயமான அருமையான படமாக தந்திருக்கிறார்.

*****
கதையெனப் பார்த்தால்...

ஒரு தொழிலதிபர் தனது 80 வயதில் இறக்கிறார்.  அவருடைய மனைவி அவருடைய லாக்கரை திறக்கும் பொழுது, ஒரு பிலிம் சுருள் கிடைக்கிறது. அதில் ஒரு இளம்பெண்,  பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யும் காட்சி இருக்கிறது. பதறிப்போய், இது உண்மையானதா? அல்லது சித்தரிக்கப்பட்டதா?  என அறிய தனியார் துப்பறியும் நாயகனை அமர்த்துகிறார்.

நம்மூர் கோடம்பாக்கத்துக்கு சினிமா எடுப்பது பிரதான தொழில் என்றால், துணை தொழில்களாக விபச்சாரம், ஆபாச படம் எடுத்தல் என இருப்பது போல, உலகத்துக்கே கோடம்பாக்கமான ஹாலிவுட்டிலும் பெரிய வலைப்பின்னல் இருக்கிறது.  மெல்ல மெல்ல அந்த பெண்ணின் தடயங்களை கண்டுபிடித்து, தொடர்கிற நாயகன்,  இந்த உலகத்துக்குள் ஒரு இளைஞன் மூலம் நுழைகிறார்.   நடிகையாகும் ஆசையில் ஒரு வக்கிர கும்பலிடம் மாட்டி, கொலை செய்யப்பட்டதையும், இதற்காக அந்த தொழிலதிபர் இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் கை மாற்றியிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்.

அந்த கும்பலை ஆதாரத்துடன் கைது செய்யும் முயற்சியில் தோற்றுப்போகிறார். தொழிலதிபரின் மனைவி இது உண்மை என அறிந்ததும், தன் கணவனின் பாலியல் வக்கிரத்துக்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்து வருந்தி தற்கொலை செய்துகொள்கிறார்.  நாயகன் இறுதியில் என்ன செய்தார் என்பது சொச்ச கதை.

****
மொத்த கதையும் துப்பறிவது, பாலியல் காட்சிகள் என நகர்வதால், நிறைய வல்லுறவு காட்சிகள், சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள் என ஒரு பக்கா ஹாலிவுட் மசாலாவாக எடுக்க எல்லா வாய்ப்புகள் இருந்தாலும், இயக்குநர் அதையெல்லாம் தவிர்த்து கதையம்சம் கொண்ட, உணர்ச்சிமயமான அருமையான படமாக தந்திருக்கிறார். முழுக்க முழுக்க மனித உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கொன்று, பணம், பணம் அதற்காக எதை வேண்டுமென்றாலும், எந்த உணர்ச்சியுமில்லாமல் கொல்லலாம் என்கிற ஹாலிவுட்டின் நிழல் உலகம் உண்மையில் அதிர்ச்சியானது.  இந்த படத்தை பார்த்த பிறகு, ஆபாச படங்கள் யாருக்கும் அந்த படத்தில் நடிக்கும் பெண்ணின் உணர்வுகள் பற்றி ஒரு கணமாவது சிந்திக்கவைக்கும்.

இயக்குநர் மிஷ்கின் இந்த படத்தின் மைய கருத்தை உள்வாங்கிகொண்டு தான் 'யுத்தம் செய்'  படத்தின் கதையை எழுதியிருக்கலாம். இந்த படம் சப்-டைட்டில்களுடன் கிடைக்கவில்லை. இருப்பினும் அது பெரிய பிரச்சனையாக இல்லை.

நாயகன் நிக்கோலஸ் ஏற்கனவே சில ஹாலிவுட் மாசாலா படங்களில் பார்த்திருக்கிறேன். படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். 1999 வெளிவந்த படம். இந்த பட வெற்றியில் இரண்டாவது பாகம் கூட 2005ல் வெளிவந்திருக்கிறது.

அனைவரும் பார்க்கவேண்டிய படம். வினவில் தான் இந்த படத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இந்த படத்திற்கு அருமையான விமர்சனத்தை எழுதியிருந்தார்கள். இந்த பதிவை எழுதுவதற்கு கூட அந்த விமர்சனத்தை அறிமுகபடுத்துவதற்காக தான்!

8 MM - திரைவிமர்சனம் - வினவு

Monday, January 28, 2013

எழுதப்படாத கடிதம்!

நேற்று வீட்டில் வெள்ளையடிக்க பொருட்களை ஒழுங்குபடுத்தும் பொழுது, ஒரு எழுதப்படாத இன்லாண்ட் கடிதமும், நண்பர்கள் எழுதிய மங்கலான சில கடிதங்களும் கண்ணில்பட்டன.  அன்று முழுவதும் கடிதம் குறித்த நினைவுகள் ஒவ்வொன்றாய் மேலெழும்பி வந்தன.

****

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் வீட்டுக்கு நாலு வீடு தாண்டி ஒரு குடும்பம் தனது பையனை வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே அந்தமானுக்கு பலசரக்கு கடைக்கு வேலைக்கு அனுப்பி இருந்தார்கள்.  அந்த பையனை நலம் விசாரித்து மாதம் ஒருமுறை ஒரு கடிதம் எழுத என்னை அழைப்பார்கள்.  "அன்பு மகன் வேலுக்கு" என எழுதிய கடிதம் தான் வாழ்வில் முதன்முதலில் எழுதிய கடிதமாக நினைவில் நிற்கிறது.

****

சொந்த பந்தங்கள் எல்லாம் உள்ளூரிலேயே இருந்தார்கள்.  தொலைவில் யாரும் இல்லை. அதனால் கடிதம் எழுதும் தேவையே இருந்தது இல்லை.  ஒரே ஒரு அத்தைப் பையன் மட்டும் விதிவிலக்கு.  தொடர்ச்சியாய் வீட்டிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.  சில வருடங்களுக்கு பிறகு அவரும் கடிதம் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.  அக்காவை திருமணம் செய்யும் ஆசையில் அத்தைக்கும், மாமாவிற்கும் கடிதம் எழுதி, அக்காவை வேறு இடத்தில் திருமணம் செய்ததும் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்பது விபரம் அறிந்த பிறகு புரிந்துகொண்டேன்.

****
வெளியூரில் வேலை செய்த சில காலம் தனிமையை தவிர்க்க, கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன். வேலை, படித்த கவிதை, பழகிய மனிதர்கள், சமூகம் குறித்து என 4பக்கம், 6 பக்கம் என நீளமான கடிதங்களை எழுதியிருக்கிறேன். ஒரு தோழிக்கு தினமும் அஞ்சலட்டையில் எழுதுகிற பழக்கமும் இருந்தது. அப்படி எழுதியது இரண்டு சிங்கங்கள் குறித்த இந்த விமர்சனம். அதுபோல நண்பர்களும் எழுதியிருக்கிறார்கள்.  சில கடிதங்களை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

****
அப்பொழுதெல்லாம் ராஜேஷ்குமார், பி.கே.பிக்காக வெளிவரும் மாதாந்திர புத்தகங்களில் 'பேனா நண்பர்கள்' என்றொரு பகுதி வரும்.  காதல் கோட்டை படம் போல, இது நட்புக்கோட்டை.  தினமும் ஒருவருக்காவது ஒரு கடிதம் எழுதுவேன். அவர்களும் எழுதினார்கள்.  தினம் ஒரு கடிதமாவது தபால்காரர் தருவார். இந்த காலத்தில், இந்த தெருவில் இவனுக்கு மட்டும் தினம் கடிதம் வருகிறதே என தபால்காரர் நிறைய அலுத்துக்கொள்வார்.  இன்றைக்கும் கூட அப்படி அறிமுகமான பேனா நண்பர் நல்ல நண்பராக இருக்கிறார்.

****
கணிப்பொறி வந்ததும் தட்டச்சு இயந்திரத்திற்கு வேலை இல்லாமல் போய்விட்டது போல, போன் குறிப்பாக செல்பேசி வந்தபிறகு, கடிதம் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. என்ன தான் பேசினாலும், கடிதங்கள் மனதிற்கு நெருக்கமானவை. 


மனிதர்கள் விரும்பியோ, விரும்பாமாலோ தன் குடும்பங்களை விட்டு தூர தேசங்களில் தூக்கி எறிந்திருக்கிறது.   இன்றைக்கும் யாரோ ஒரு நபர், "அன்புள்ள அம்மாவிற்கு'  'அன்புள்ள மனைவிற்கு' என கடிதம் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் எழுதிய கடிதம் எதுவென யோசித்தால், பணிநிமித்தமாய் சிங்கப்பூரில் இருக்கும் நண்பனுக்கு எழுதிய மின்னஞ்சல் நினைவுக்கு வருகிறது.  விஞ்ஞானம் முன்னேறினாலும், புதிய வடிவங்களில் கடிதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

****
திரைப்படங்களிலும் கடிதங்கள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன.  கடிதங்கள் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கின்றன. நிறைய பாடல்களில் வலம் வந்திருக்கின்றன.  கடிதத்தை வாசிக்கும் பொழுது, எழுதியவரே வாசிப்பதாய் காட்டுவார்கள்.சுவாரசியமாக இருக்கும்.  இன்றைக்கும் ஆபூர்வமாய் எனக்கு கடிதம் எழுதினால், எழுதியவருடைய முகம் எனக்கு தெரிவதற்கு திரைப்படம் தான் காரணம்!

****

நான் எழுதிப் பழகியது கடிதங்கள் வழி என்பதாலோ, என் பதிவுகள், பின்னூட்டங்கள் எல்லாம் அகம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.  அறிவை விட உணர்வுகள் மோலோங்கி நிற்கின்றன.

****
அன்பை, அறிவை, காதலைப் பேசும் உலகப்புகழ் பெற்ற பல கடிதங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதிலும் மனிதர்கள் மீண்டும் மீண்டும் அந்த கடிதங்களை விரும்பி வாசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் அடிக்கடி வாசிக்கும் கடிதம்  'இடானியாவின் கடிதம்'   மனிதர்களை 'பேசுங்கள் பேசுங்கள்' என உற்சாகபடுத்தி, செல்பேசி நிறுவனங்கள் எல்லாம் நிறைய கல்லா கட்டுகின்றன.  பிடித்த உறவுகளுக்கு அமைதியாய் கடிதம் ஒரு கடிதம் எழுதி பாருங்கள். அதன் பின், கடிதத்தின் ருசி தெரியும் உங்களுக்கு!

****

Tuesday, January 22, 2013

முகநூலும் மனிதர்களும்!

சமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி செய்து கொண்டிருந்தார்.

அவ‌ருடைய‌ சிற‌ப்பு ப‌ணி என்ன‌வென்றால், க‌ட‌ன் வாங்கிவிட்டு, எஸ்கேப் ஆகிவிடும் ந‌ப‌ர்க‌ளை க‌ண்டுபிடித்து, வ‌சூலிக்கும் ப‌ணி. தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பவர் என்பதால், அவருக்கான கமிசன் தொகை அதிகம்.

இது கொஞ்சம் சிரமமான காரியமாயிற்றே! எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்றால், அது நிறைய வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று முகநூல் வழியாக கண்டுபிடிப்பது. அதில் அவர்கள் வேலை செய்யும் ஊர், அலுவலகம் என பகிர்ந்துகொள்வதால், எளிதாய் கண்டுபிடித்துவிட முடிகிறது என்றார்.

ச‌மீப‌த்தில், ஒரு க‌ட்டுரை வாசிக்கும் பொழுது அமெரிக்காவில் வேலைக்காக‌ வ‌ரும் விண்ண‌ப்ப‌ங்க‌ளை ப‌ரிசீலிக்கும் பொழுது, முக‌நூலில் விண்ண‌ப்ப‌தார‌ர்க‌ள் என்ன‌ க‌ருத்துக்க‌ளை ப‌ரிமாறிக்கொள்கிறார்க‌ள் என‌ பார்த்தே, 80 ச‌த‌விகித‌ விண்ண‌ப்ப‌ங்க‌ளை வேண்டாம் என்ற‌ முடிவுக்கு வ‌ந்துவிடுகிறார்க‌ள் என‌ பார்த்தேன்.

ச‌மீப‌த்தில், அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர் த‌ன் அண்ண‌ன் ம‌க‌ளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்க‌ள். அவ‌ரைப் ப‌ற்றி புரிந்துகொள்ள‌ முக‌நூலில் என்ன‌ க‌ருத்துக்க‌ள் எழுதியுள்ளார். ப‌கிர்ந்துகொண்டுள்ளார் என்ப‌தை பார்த்தார்.

ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் வெளிவ‌ந்த‌ வினவில் வெளிவந்த கட்டுரையில் முக‌நூலை க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் பெண்க‌ளை தொட‌ர்பு கொண்டு, பாலிய‌ல் வ‌க்கிர‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள் என்ப‌தை ப‌டிக்கும் பொழுது, அய‌ர்ச்சியாக‌ தான் இருந்த‌து.


ச‌மூக‌ம் ப‌ல்வேறு கோளாறுக‌ளில் சிக்குண்டு இருக்கும் பொழுது, முக‌நூல் ம‌ட்டும் எப்ப‌டி ஆரோக்கிய‌மாக‌ இருக்க‌முடியும்? ந‌ல்ல‌ ச‌மூக‌த்திற்கான‌ போராட்ட‌ம் ஒவ்வொரு ம‌னிதனுக்குள் இருக்கவேண்டும்.

Friday, January 11, 2013

உணர்வுகள் - இந்த வாரம்!

முழுக்க முழுக்க வியாபாரத்திற்காக எடுக்கப்படும் படங்கள் படு மொக்கையாக வெளிவரும் பொழுது மனம் சந்தோசப்படுகிறது.  சமீபத்திய சந்தோசம் - 'அலெக்ஸ் பாண்டியன்'

விமர்சனம் - இங்கே!

இந்த படத்திற்கான விளம்பரத்தில் ஏன் அனுஷ்காவை பயன்படுத்தவில்லை என்பது இன்னுமொரு ஆச்சர்யம்!

****

'புத்தக சந்தை' விளம்பரங்கள் பார்க்க பார்க்க மனம் போக துடிக்கிறது.  இந்த முறையும் ஆயிரம் ரூபாய்க்கு மேலாக வாங்கவும் பணம் தயார் செய்துவிட்டேன்.  ஆனால், கடந்த ஆண்டுகளில் வாங்கிய புத்தகங்கள் எல்லாம், படிக்காததால், தினமும் என்னைப் பார்த்து இளக்காரமாய் சிரிக்கின்றன.  கொஞ்ச நாளைக்கு ஒளித்து வைத்துவிடலாம என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

****

பொங்கல் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு கிளம்ப தயாராகி கொண்டிருக்கிறேன். நாலு நாட்கள் ஊர்ப்பக்கம் போய் நண்பர்கள் பலரையும் பார்த்துவரலாம்.  பொங்கல் பண்டிகை உழவு சார்ந்த பண்டிகை.  காவிரி நீர்ப்பாசன விவசாயிகளில் இதுவரைக்கும் 10 பேர் வாடிய பயிரைக் கண்டு, கடன்கள் கழுத்தை நெறிக்க  தற்கொலை செய்திருக்கிரார்கள்.  நியாயமான நிவாரணத்திற்காக இரவு பகலாக முற்றுகை போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த பொங்கலை 'கருப்பு பொங்கலாக' அறிவித்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் நகரவாசிகளைப் பார்த்து 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனம் போல...

விவசாயிகள் மக்களுக்கு எல்லாவித தானியங்களையும் உயிரைத் தந்து உற்பத்தி செய்து தருகிறார்கள்.  அவர்களுக்கு கிடைப்பதோ நியாயமான விலை கூட கிடையாது.  ஆனால், அந்த விவசாயிகளுக்காக, நகரவாசிகளாகிய நாம், காவிரி நீர் தராமல் இருந்ததற்காக தெருவில் இறங்கி போராடினோமா?  முல்லை பெரியார் அணையை இடிக்கப்போகிறேன் என திமிராக அறிவித்த கேரள அரசை எதிரித்து போராடினோமா?  உனக்கு எதற்கு நான்கு நாட்கள் விடுமுறை? என்ற கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.

*****