Monday, March 25, 2013

மனிதர்கள்17 ‍ - சித்ரா

ஒரு பெண் ஸ்கூட்டியில் வேகமாக என்னை கடந்து போகிறார். அவருடைய துப்பட்டா கழுத்தோடு ஒட்டி கிடக்கிறது.  அதன் இருமுனைகளும் காற்றில் படபடக்கிறது. வண்டியின் பின் சக்கரத்தை தொட்டுவிடும் முயற்சியை செய்துகொண்டே இருக்கிறது.

கொஞ்சம் வேகமெடுத்து, "துப்பட்டாவை கொஞ்சம் பாருங்க!" என சொல்லிவிட்டு மீண்டும் மெதுவாய் பயணிக்கிறேன்.  காலையிலிருந்து இப்படி சொல்வது இரண்டாவது முறை!

இப்படி யார் சென்றாலும் சித்ரா உடனே நினைவுக்கு வருகிறாள்.

****

சித்ரா இரண்டாமாண்டு கல்லூரி மாணவி.   துறுதுறுவென இருப்பவள்.  ஒரு கலாட்டா திருமணத்தில் இருவரும் அறிமுகமானோம்.

சித்ராவின் அக்கா உடன் வேலை பார்க்கும் என் (பெரியம்மா பையன்) தம்பியை காதலித்து, இருவரும் அலைபாயுதே ஸ்டைலில் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொண்டார்கள். காதலை ஆதரிப்பவன் என்பதால் என்னிடம் உதவி கேட்டான்.

ஒரு நெருக்கடியில் இருவரும்  வீட்டில் தெரிவித்த பொழுது, வேறு வேறு சாதி என்பதால் ஏக களேபரமாகிவிட்டது.  இரு வீட்டாரும் ஏற்கமறுத்தார்கள்.

பிறகு, பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு குடும்பமும் கொஞ்சம் மனம் இறங்கி வந்தார்கள்.  இதில் தம்பியின் பக்கம் இருந்து எல்லா வேலைகளையும் செய்தது நான்.  பெண்ணின் தரப்பில் சித்ரா. அதனால் இருவரும் அடிக்கடி சந்திக்கவேண்டிய தேவை இருந்தது.


சித்ராவிற்கு மூத்த அக்காவை சொந்தக்காரனுக்கு கட்டிக்கொடுத்து, அவன் செய்த கொடுமையால் பிரிந்து வந்து தன் பையனுடன் வீட்டில் இருக்கிறார்.  இரண்டாவது அக்காவின் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்பு சித்ராவிடமும், குடும்பத்திடமும் இருந்தது.

பேச்சுவார்த்தை எல்லாம் சுமூகமாக நடந்து, நானே தலைமை ஏற்று ஒரு முருகன் கோவிலில் கல்யாணத்தை முடித்து வைத்தேன்.(அது தனியாக எழுதுகிற அளவுக்கு ஒரு கதை).

பின்பு ஒரு நாள் சாவகாசமாய் வீட்டிற்கு போயிருந்த பொழுது, அவரின் அப்பா பெருமையாக சொன்னார். என் சின்னப் பொண்ணை தைரியமாக ஒரு பையனை போல வளர்த்து இருக்கிறேன் என்றார்.

*****

இவையெல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரிலிருந்து தம்பி செய்தி சொன்னான்.

சித்ரா டிவிஎஸ் 50ல் போய், துப்பட்டா சக்கரத்தில் சிக்கி, கீழே விழுந்து, பின் மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தான்.

***

இரண்டு நாள்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்தேன். மருத்துவமனையில்  சித்ராவை பார்த்தேன்.  இரண்டு ஆண்டுகளில் நிறைய மாற்றம்.  விபத்தும் தன் பங்குக்கு முகத்தை மாற்றியிருந்தது. துறு துறுவென்று வளைய வந்த சித்ராவை ஆளுமை சிதைந்த நிலையில் பார்க்க நிறைய சங்கடமாக இருந்தது.

தன் குடும்பத்து ஆட்களையே சித்ராவால் அடையாளம் காணமுடியவில்லை.  என்னை சுத்தமாகவே தெரியவில்லை.  எப்பொழுது சரியாகும் என்றதற்கு, தொடர்ச்சியான மருத்துவம், ஓய்வுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் என்றார்கள்.

****

அறையிலிருந்து வெளியே வந்தேன். ஒரு பெண் என்னை வேகமாக கடந்து சென்றாள். துப்பட்டா ஒரு பக்கமாய் நன்றாக சரிந்து, மருத்துவமனை தரையை கூட்டிக்கொண்டே சென்றாள்.

*****

Sunday, March 17, 2013

ஈழம் : போராட்ட செய்திகள் இனிமையானவை!

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக செய்தி சானல்களை பார்க்க அவ்வளவு ஆசை ஆசையாக இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு பிறகு, ஈழ மக்களின் வாழ்வு புனரமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கை குறித்து இலங்கை அரசின் மீது, அமெரிக்கா ஐக்கிய நாட்டு சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர இருக்கிறது.

இதை ஒட்டி தமிழகமெங்கும் மாணவர்களும், அனைத்து தரப்பினரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராடி வரும் செய்திகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பார்க்க பார்க்க அவ்வளவு அருமையாக இருக்கிறது.

ஆனால் போராடுபவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்தால்...

அமெரிக்க தீர்மானத்தின் தரம் படு மொக்கையானது. சாரமில்லாமல் வெறும் சக்கையானது.  இலங்கை உள்ளூர் ரவுடி என்றால் அமெரிக்கா உலக ரவுடி. உலகத்தில் போர்க்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டுமென்றால், முதலில் தண்டிக்கப்பட வேண்டிய ஆள் அமெரிக்கா தான். இப்பொழுது அமெரிக்காவையே நீதிபதியாக மாற்றுவது அபத்தமானது.

அடுத்து, இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பது...

அமெரிக்க தீர்மானமே மொக்கையானது.  இனப்படுகொலையில் இலங்கை முதல் குற்றவாளி என்றால், இரண்டாவது குற்றவாளி இந்தியா.  ஈழத்து மக்களின் ரத்தக்கறை படிந்தவர்களையே தீர்மானத்தை ஆதரி என்பது இந்தியாவை போர்க்குற்றத்திலிருந்து நாம் தப்பிக்க வைக்கிறோம். மேலும், இந்திய அரசை அம்பலப்படுத்த வேண்டும்.

இருப்பினும் பரவாயில்லை.  இப்பொழுது தானே போராட துவங்கி இருக்கிறோம். சரி தவறு என விவாதித்து சரியான பாதைக்கு விரைவில் வந்துவிடுவோம்.  அதனால், நம்பிக்கை இருக்கிறது.

மக்கள் எழுச்சியில் போகிற போக்கில் பல்வேறு குப்பைகள் அடித்து செல்லப்படும் என்பார்கள். இந்த போராட்டத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய காண கிடைக்கின்றன. நேற்று நாரயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள்.  கருணாநிதி மத்திய கூட்டணியிலிருந்து கழன்று கொள்வேன் என வீராவேசம் காட்டியிருக்கிறார்.

இந்த மக்கள் போராட்டம் வலுக்க வலுக்க எதிரிகள் யார், நண்பர்கள் யார் என நன்றாக புலப்படும்.  விரைவில் சரியான திசைவழியில் பயணப்படுவோம்.

Saturday, March 2, 2013

அமைதி!

அமைதி!

மின்சாரமற்ற, சத்தங்கள் அடங்கிய பொழுதுகளில், மனம் கடந்து வந்த பாதைகளை அசைப்போடுகிறது.

வாழ்க்கை சாரமற்று சக்கையாய் இருப்பது மெல்ல புரிகிறது. பயந்துபோய், கையில் உள்ள செல்பேசியில் பண்பலையை சத்தமாய் அலற வைக்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் நிம்மதியாய் இருக்கிறது.

****

படிக்காத பொழுது நிறைய தெரிஞ்சுகிட்டோம் என நினைக்கிற மனது, மனிதர்களையும், புத்தகங்களையும் தொடர்ந்து வாசிக்கும் பொழுது தான், நாம் புரிந்துகொண்டது ரெம்ப குறைச்சல் என உறைக்கிறது!

****
அன்பு சகலத்தையும் தாங்கும்,
அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்,
அன்பு சகலத்தையும் நம்பும்,
அன்பு சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருகாலும் ஒழியாது 1 கொரி 13 :7 , 8

காத்திருந்த வேளையில், உள்ளே மருத்துவர் யாரோ ஒரு தம்பதியினரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நன்றாக தான் இருந்தது!

*****
- முகநூலில் பகிர்ந்தவை!