Saturday, February 26, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - கடற்கரையும் வாழ்வும்!



"உங்களுக்கென்னப்பா! ரிலாக்ஸ் பண்ண மெரினா பீச் இருக்கு!" - என்றான் ஊரிலிருக்கும் நண்பன்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளன்று கடற்கரை பக்கம் போய் காலாற நடந்துவரவேண்டும் என நினைத்து, காலண்டரில் நாள் குறித்து வைப்பேன். அலுவலக வேலைகளுக்கிடையில், காலண்டர் பக்கமே எட்டி பார்க்க முடியாதவாறு, வேலையின் சுழியில் சிக்கிக்கொள்வேன். பிறகு எங்கே கடற்கரை போவது? கடைசியாய் பார்த்து, மூன்று மாதங்களாகிவிட்டன.

சென்னையில் பலரிடம் உரையாடும் பொழுது, கேட்கும் ஒரு விஷயம். "நீங்கள் எப்பொழுது கடற்கரைக்கு போனீர்கள்?" சிலர் 3 மாதம், சிலர் 6 மாதம். ஒன்றிரண்டு பேர் வருடங்களாயிற்று என்றார்கள். மாதம் ஒருமுறை என்பது அபூர்வம் தான்.

சென்னை பல ஊர்கள் அடங்கியுள்ள ஒரு மாநகரம். கே.கே. நகரில் வாழ்பவர் அண்ணா நகரில் வேலை பார்த்தால், அவர் இந்த இரண்டு பகுதிகளை தவிர, வேறு எங்கும் பயணிப்பது இல்லை. "வேலை உண்டு, வீடு உண்டு. தொலைக்காட்சி உண்டு" என வாழ்கிறார்கள். இதைத் தவிரவும் உலகத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன என்பதே அறியாமலோ அல்லது அறிந்தோ இதே வாழ்வை தொடர்கிறார்கள்.

பெருநகர வாழ்க்கை ஒரு சபிக்கப்பட்ட வாழ்வு. சென்னைக்கு வந்த பொழுது, பெருநகர வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என சொல்லிக்கொண்டு திரிந்தேன். இப்பொழுது அப்படியெல்லாம் தத்துவ வார்த்தைகளை உதிர்ப்பதில்லை. இப்பொழுது அந்த மிகப்பெரிய இயந்திரத்தின் ஒரு சிறு பல் சக்கரமாக நானும் சுழன்றுக்கொண்டிருக்கிறேன்.

சென்னை வந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. கடந்த ஆண்டு வாழ்ந்த வாழ்வை திரும்பி பார்த்து, நொந்தே போனேன். மீண்டும் ஒருமுறை இதே தவறை இனி எப்பொழுதும் செய்துவிடக்கூடாது என மனதளவில் நூறுமுறையாவது உறுதி எடுத்திருப்பேன்.

Monday, February 21, 2011

நீயும் (சிலந்தி)வலையும்! - மீள்பதிவு!

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!
கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது

உலகமே
உன்னை
கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்

கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

****

பின்குறிப்பு : இந்த பதிவு எனக்கு பிடித்தமான பதிவு. ஆண்டுக்கு ஒருமுறை இதை மீள்பதிவு செய்வது எனது வழக்கம்.

கொசு - சில குறிப்புகள்!


கொசுவை போல
விடிய விடிய
பல இரவுகள்
என்னோடு உரையாடியவர்கள்
யாருமில்லை!

நான் படிக்காமல் நிறுத்திய
பல புத்தகங்களுக்கும்
பாதி காரணம் 'கொசு' தான்!

'குட்நைட்' காரர்கள் தான்
கொசுவை அனுப்பி வைக்கிறார்களோ
என அடிக்கடி சந்தேகம் வருகிறது!

'ஆல் அவுட்' முதலாளியின்
பூஜையறையில்
கொசுவின் படம் நிச்சயம் இருக்கும்!

நான் வாங்க நினைத்து
வாங்காமல் போன
பொருளில் ஒன்று
'கொசுவலை'

எனக்கு பிடித்த ஊர்
எங்கள் பூர்வீக கிராமம்
காரணம் - அங்கு
கொசு கிடையாது!

கனவொன்று அடிக்கடி வருகிறது
'கொசு இல்லாத
சென்னை
நிம்மதியாய் உறங்குகிறது'
கனவாகவே போய்விடுமோ!

செம 'கடியாக' இருக்கிறதோ?
என்னை எழுத தூண்டியதே
கொசு தானே!

வேன்கல்சிங் - ( Van Helsing ) - திரைப்படம்


சனியன்று சன் தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வெகுவாக ரசித்த படம்.

டிராகுலா படங்கள் ஒரு வகை, அதிரடி படங்கள் ஒரு வகை. இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தொடக்கம் முதல், இறுதி வரை விறு, விறு என நகரும் படம்.

கதை எனப் பார்த்தால்...

வாடிகன் சிட்டியை நிர்வகிக்கும் பாதிரிகள் உலகெங்கிலும் தீய சக்திகளை எதிர்த்து வரலாறு நெடுகிலும் போராடிக்கொண்டு வருகிறார்கள். (அமெரிக்கா உலகை ஆபத்திலிருந்து காக்கும் 'கதை' போல தான் இதுவும்)

இந்தமுறை டிரேசில்வானியா பகுதியில் டிராகுலாக்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டதால், டிராகுலாவை அழிக்க, கதாநாயகன் வேன்கல்சிங்-ஐ அனுப்பிவைக்கிறார்கள்.

அங்கு பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, வெற்றிகரமாக கொடுத்த பணியை செவ்வனே முடிக்கிறார்.

நடிகர்கள், ஆடை வடிவமைப்பு, கலையமைப்பு, இசை, ஆக்சன், ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் மற்றும் தொய்வில்லாத திரைக்கதை என எல்லாமும் படத்திற்கு வலு சேர்க்கின்றன.

காமிக்ஸ் கதைகள் படித்து ரசித்து கடந்து வந்தவர்கள் என்றால் இந்த படம் வெகுவாக பிடிக்கும்
டிராகுலாவின் மனைவிமார்களாக வரும் டிராகுலாக்குகளின் பளிச் முகங்கள் இதுவரை எந்த டிராகுலா படத்திலும் நான் பாராதவை.

படம் எடுத்த விதத்தில், விறுவிறுப்பில், மம்மி, மம்மி ரிடர்ன்ஸ் பாதிப்பு தெரிகிறதே என தேடினால், ஆம். மூன்று படத்திற்கும் ஒரே இயக்குநர் Stephen Sommers.