Monday, December 24, 2007

நீ....மழை....நான்

உன் கன்னத்தில்
கழுத்தில்
இடுப்பில்
முத்து கோர்த்து
விளையாடிய
அந்த மழைக்கு
என் காதலை
யார் சொன்னார்கள்
என்று தெரியாது

உன்னை எங்கெல்லாம்
நனைக்க நினைத்தானோ
அப்படியெல்லாம்
நனைத்தது

உன்னை
எப்படியெல்லாம்
அணைக்க நினைத்தேனோ
அப்படியெல்லாம்
அணைத்தது

எந்த பெண்ணையும்
சட்டென்று
தொட்டு பேசிவிட
மழையின் மனசு
வேண்டும் போலிருக்கிறது

குடைபிடிப்பது
இயற்கைக்கு
எதிரானதென்று
நீ நனைந்து சிலிர்த்த
அழகுதான்
எனக்குச்
சொல்லிக் கொடுத்தது

உன்மீது வழிந்து
இளநீரான
அந்த மழை நீரை
மனசு தளும்பத் தளும்ப
நான் நிரப்பி
வைத்திருக்கிறேன்

அந்த மழையில்
நீ ஒரு தேவதையைப்
போலிருந்தாய்...

மழை -
உன்னைத் தேடித்தான்
பூமிக்கு வந்ததோ என்று
எனக்கு சந்தேகம் வந்தது

********

இப்போதும் வருகிறது
மழை...
என் கன்னத்தில்
கண்ணீரைப் போல் வழியும்
இந்த மழைக்கு
நம் காதல் தோல்வியை
யார் சொன்னார்கள் என்று
எனக்குத் தெரியாது

உன் வாசனைகளையும்
கொலுசு சப்தத்தையும் தேடி
பருவம் தப்பி வந்திருக்கிறது
இந்த மழை

நீ நனைய வேண்டாம்
எங்கிருந்தாலும்
கண்ணாடி ஜ்ன்னலுக்குப்
பின்னாலிருந்த படியாவது
இந்த மழையைப்
பார்த்து கொண்டிரு போதும்

இந்த மழைக்கு நானும்
எனக்கு மழையும்
ஆறுதல் சொல்லிக் கொள்வோம்

- பழனி பாரதி

பின்குறிப்பு : இந்த கவிதையின் முதல் பாகம், படிக்கும் காலத்தில், அத்தனை சந்தோசமாயிருந்தது. இப்பொழுது, இரண்டாம் பாகம் படிக்கும் பொழுது, அத்தனை சோகமாயிருக்கிறது.




Monday, December 3, 2007

அன்புள்ள காதலிக்கு! - கடிதம்


முன்குறிப்பு : அறிவாளிகள் சிலர், தன் எழுத்தால், சிந்தனையால் நோகடிக்கிறார்கள் என சில காலம் வலையுலகத்தை விட்டு விலகியிருந்தேன்.

இந்த காலத்தில், இளமையில் எல்லோரையும் பிடித்து ஆட்டும் காதல், என்னையும் பிடித்துவிட்டது. நோகடிக்கிற காதலை, காதலியைப் பற்றி, நோகடிப்பதில் சீனியர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பிரிய தோழிக்கு,

உன்மீது எவ்வளவு நேசம்?
வினா எழுப்பியிருந்தால்
முன்பு
பதில் உரைத்து இருப்பேன்.

எனக்குள் நானே - மறுபடியும்
வினா எழுப்பிப் பார்க்கிறேன்.
மிரண்டு போகிறேன்.

நான் நினைத்திருந்த
எல்லையெல்லாம்
என்றைக்கோ
கடந்து இருக்கிறாய்

உன் வயதில், வடிவில்
கடக்கின்ற
ஒவ்வொரு பெண்ணும்
நீயாக தெரிகிறாய்
பிரமை தான்!
உணர்ந்தும்
தேடிப்பார்க்கிறேன்
உன்முகம்.

உன் கண்களை
சந்தித்த நாள் முதல்
இன்றைய வரைக்கும்
என் நாட்குறிப்பின்
பக்கங்களிளெல்லாம்
உன்னைப் பற்றியே.
அல்லது
என்னில் இருக்கும்
உன்னைப் பற்றியே.

காதலைப் பற்றிய
சுய மதிப்பீடுகள் எல்லாம்
என் கண் முன்னே
சரிந்து விழுகின்றன

எப்பொழுதும்
நான் பயப்படுவதெல்லாம்
என் பலவீனங்கள் கண்டு.

உன் மீதான ஆழமான நேசம்
என் பலவீனங்களில்
ஒன்றாய் மாறிப்போகுமோ
எண்ணம் எழுகிறது

இறுதியாய்...

உன்னிடம் வேண்டுவன எல்லாம்...
தொலைதூரம்
நான் பயணப்பட வேண்டும்
கடமை அழைக்கிறது
என் சிறகுகளை
என்னையறியாமல்
உன்னிடம் தந்துவிட்டேன்
சிறகுகளை தந்துவிடு!
அல்லது
சிறகாய் நீயே மாறிவிடு!