Saturday, September 27, 2008

மொக்கை, கும்மி பின்னூட்டங்கள் - ஒரு கலகலப்பான விமர்சனம் (!)


சமீபத்தில் காயத்ரி அக்கா ஜெயங்கொண்டம் படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதன் கதை, கதாபாத்திரங்கள், டெக்னிக்கலான விசயத்தை எல்லாம் அலசியிருந்தார். மொத்தத்தில் மொக்கையான படம் என முடித்திருந்தார். அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, "படம் ஒரு மொக்கையென்றால், உங்க விமர்சனம் ஒரு மொக்கை. விமர்சனத்தில் விளையாட்டுத் தனம் இருக்கிறது" என பின்னூட்டமிட்டேன்.


அதற்கு காயத்ரி அக்கா ஏதும் பதில் சொல்லவில்லை. அதற்கு முந்தி எல்லா மொக்கை பின்னூட்டங்களுக்கும் சின்சியராக பதில் சொல்லிக் கொண்டே இருந்தவர், என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒன்றும் சொல்லவில்லை. இதனால் எனக்கு ஒரு பெரிய வருத்தமில்லை. என் பதிவுகளுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. மொக்கை பின்னூட்டங்கள் வருவதற்கு பதிலாக வராமலே இருக்கலாம். இம்மாதிரியான பின்னூட்டங்கள் பதிவிட்டருக்கு ஒரு பயனும் விளையபோவதில்லை. பின்னூட்டமிடுகிறவருக்கும் ஒன்றும் நேரப்போவதில்லை. இருவருக்கும் நேரம் தான் விரயம்.

இந்தப் போக்கு வலைப்பதிவில் பொதுவானது தான். விளையாட்டுத்தனமாய் பதிவு போடுவதும், பலரும் ஒன்று சேர்ந்து கும்மியடிப்பதும் இங்கு சகஜம் தான்.

வலைப்பதிவைப் பற்றி சில ஆச்சரியங்கள் எனக்கு எப்பொழுதும் இருக்கின்றன.

* பலருக்கு வலைப்பதிவில் செலவிட இவ்வளவு நேரம் எப்படி கிடைக்கிறது?

* இவர்கள் வாழுகிற சமூகம், பல கோடி மக்கள் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கே அல்லல்படுகிற சமூகம். வலைப்பதிவர்கள் பலரும் இதை எல்லாம் அறிந்த மக்கள் தான். ஒரு அன்றாடம் காய்ச்சிக் தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு அல்லல்படுவதே அவர்களின் பாடாய் இருக்கிறது.


அல்லல்படுகிற அவர்கள் சமூகத்தின் போக்கு புரிந்துகொள்வதும், அதற்காய் எதிர்வினை ஆற்றுவதும் நடைமுறையில் சிரமமானதாய் இருக்கிறது. ஆனால், இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் அவர்கள் போராடுகிறார்கள். ஆனால் சமூகம் பற்றி அறிந்து, இவ்வளவு நேரம் கிடைக்கிற வலையுலக மக்கள் ஏன் இதைப் பற்றி எழுத்தில் கூட எதிர்வினை ஆற்ற ஏன் மறுக்கிறார்கள்? இந்த மனநிலையை என்னவென்பது?

"ரோம் எரிந்து கொண்டிருந்த பொழுது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்" என்கிறார்கள். இவர்களை நீரோ மன்னனின் வாரிசுகள் என அழைக்கலாமா?

இவ்வளவு சொல்லியும் மொக்கையும், கும்மியும் குறையுமா என்ன? நொந்தகுமாரனால் நொந்து கொள்ளத்தான் முடியும். ஆனால், வரலாறு இவர்களை மன்னிக்காது.

பின்குறிப்பு - இனி, ஜெயங்கொண்டான் பட விமர்சனத்தைப் பார்க்கலாம். இந்த படத்தில் முக்கியமாய் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் இருக்கிறது - ஒரு சராசரி தமிழ் படத்திற்கானதிரைக்கதை, அதில் சில திருப்பங்கள், தொழில்நுட்பம் என எல்லா தகுதிகளும் இருக்கின்றன. கூடுதலாய் ஆபாசம் இல்லாமல் இருக்கிறது. பெண்கள் கதாபாத்திரங்களை ஊறுகாய் மாதிரி பயன்படுத்திக்கொள்ளாமல், உருப்படியாய் கொஞ்சம் வடிவமைத்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் உள்ள முக்கியமாக விமர்சனம் செய்யப்பட வேண்டியது என்னவென்றால்....
ஒரு நடுத்தர வர்க்கம் சார்ந்த ஒரு இளைஞன் தன் வாழ்வின் பாதையில் கவனமாய் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ரவுடி குறுக்கிடுகிறான். அவனோடு மற்ற கதாநாயகன்மாதிரி நேருக்கு நேர் மோதாமல், வீர வசனம் பேசாமல் புலம்பிக்கொண்டே ஒதுங்கி போகிறார்.


கதையின் போக்கில், கதாநாயகனோடு மோதலில், தன் மனைவியை தானே கொன்று விடுகிற வில்லன், இதற்கு காரணம் கதாநாயகன் தான், அவனை ஒழித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கிறார். கதையின் முடிவில், கதாநாயகனும், வில்லனும் கட்டிப்புரண்டு சண்டையிடுகிறார்கள். இறுதியில்... வில்லனை தன் உடல் வலுவில் ஜெயித்து, ஒரு மெஸேஜ் சொல்கிறார்.

"நான் இவ்வளவு நாள் ஒதுங்கி போனதற்கு காரணம், எனக்கென்று கமிட்மென்ட்ஸ் இருக்கின்றன. (சுற்றி இருக்கிற பொதுமக்களையும் கைகாட்டி) எல்லோரும் ஒதுங்கி போகிறார்கள் என்றால், இது தான் காரணம். அதை நீ கோழைத்தனம் என நீ கருதக்கூடாது"
இந்த வசனத்தில் உள்ள கருத்தின் மூலம் தான், நடுத்தர வர்க்கம் தன் காரியவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் மறைத்துக் கொள்கின்றன. இவை எப்படி வெளிப்படுகிறது என்றால்...மற்ற வர்க்கங்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் பொழுது, தன் பிள்ளை அமெரிக்காவிலும், லண்டனிலும் செட்டிலாவதைப் பற்றி மட்டும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் கவலைப்படுகிறது. ஆனால், தனக்கு ஒரு சின்ன பிரச்சனையென்றாலும், உலகமே தட்டிக் கேட்க வேண்டும் என்று குதிக்கும்.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். கோபம் கன்னாபின்னாவென்று வருகிறது. பிறகு ஒரு முறை நிதானமாய் எழுத முயற்சிக்கிறேன்.

5 comments:

Anonymous said...

போடா டுபுக்கு

குமரன் said...

\\"போடா டுபுக்கு"\\

அனானி அவர்களுக்கு,

மொட்டைக் கடிதாசி மாதிரி, ஏன் அனானியாக வர வேண்டும். உங்க பேரைச் சொல்லி விட்டு, என்னை திட்டலாமே!

கோழைகளுக்கு வருகிற கோபம் என்னை ஒன்றும் செய்யாது.

நீரோவின் வாரிசு என்றதும், கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

என் பதிவு ஏதோ பாதித்து இருக்கிறது என நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

Anonymous said...

நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.
ஈஸ்வரன்

குமரன் said...

//நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.
ஈஸ்வரன்//

ஈஸ்வரன்,

மொக்கை, கும்மி என்றால்...

சும்மா மாதிரி. அதற்கு நிறைய அர்த்தம் உண்டு.

நான் அறிந்த வரை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.

உள்ளடக்கமே இல்லாமல் பதிவிடுவது.

அதில் விவாதிக்க தகுதியே இல்லாத விசயங்களை, பல பின்னூட்டங்களில் விவாதிப்பது.

பதிவர்கள் தங்களுக்குள்ளே சொறிந்து கொள்வது.

பதிவர்கள் தங்களுக்குள்ளே புகழ்ந்து கொள்வது.

அனானியாக வந்து, அவர்களுக்குள்ளே உள்குத்து குத்துவது.

படிக்காமாலே, ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக எதையோ உளறிக்கொட்டுவது.

மொத்தத்தில், வலையுலகத்தை ஒரு கூட்டம் குட்டிச் சுவராக பயன்படுத்துவது மட்டும் இதன் பயன்

Balaji S said...

I am reading your blogs now only. Excellent. let me read your other titles then come to detail discussion. For the movie review your view is 100% correct.