Thursday, January 19, 2012

குங்பூ பாண்டா 2 - திரைப்பார்வை


இந்த படம் இப்பொழுது பல பிரிவுகளில் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக அசத்தலான படம். அண்ணன் மகனின் புண்ணியத்தால் 6 மாதத்திற்கொரு 3D படம் பார்த்துவிடுகிறேன். அந்த வரிசையில் இதுவும் ஒரு படம்.

***
கதை எனப் பார்த்தால்...

பழங்கால சீனாவின் ஒரு பகுதியை மயில் மன்னன் ஆண்டு வருகிறான். இளவரசன் மயில் பிறக்கும் பொழுது, 'ஜாதக பலன்' சரியில்லாமல் போக, நாட்டுக்கு பிரச்சனை என்பதால், நாட்டைவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். புறக்கணிப்பால், வெறுத்துப்போன மயில் இளவரசன் பல ஆண்டுகளுக்கு பிறகு, புதிய வகை ஆயுதமாக பீரங்கியை உருவாக்கி கொண்டு வந்து, தற்போதைய மன்னனை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்கிறது.

இந்த மயிலுக்கும் ஜாதக நம்பிக்கை இருக்கிறது. மை போட்டு பார்த்ததில் "கருப்பு-வெள்ளை நிறத்திலான ஒரு கரடியால் உயிருக்கு ஆபத்து" என சொல்லப்படுகிறது. ஆகையால், தன் வாழ்நாளில் பல கருப்பு வெள்ளை கரடிகளை தேடித்தேடி அழித்து வருகிறது. மேலும் குங்பூவை வளரவிடாமல் செய்வதற்கும் பல வேலைகளை செய்கிறது. இது தீயவனான வில்லன் கதை.

மறுபுறம், குங்பூ கலையின் தலைமையிடத்தில் டிராகன் வீரரான பாண்டா கரடி, சக நண்பர்களான பெண்புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, பறவை, பூனை குரு எல்லோரும் மயிலின் கொடுமையான ஆட்சி கண்டு கவலைகொள்கிறார்கள். மக்களைக் காப்பதும், குங்பூவை காப்பதும் டிராகன் வீரரான பாண்டா கரடியின் கடமை என்பதால், மயிலை அழிப்பதற்காக குழுவாக கிளம்புகிறார்கள்.

மயிலுடன் நடக்கும் போராட்டத்தில், தங்களுடைய பெற்றோர்கள் இந்த மயிலால் தான் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை பாண்டா கரடிக்கு தெரியவருகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு, அனைவரின் ஒத்துழைப்புடனும் தனது மன அமைதி பயிற்சியின் முறையினாலும், பலம் வாய்ந்த பீரங்கியை எதிர்கொண்டு, மயிலை வீழ்த்துகிறார்கள். இறுதியில் சுபம்.

****
முதல் படத்தைப் பொறுத்தவரையில் ஜாக்கிசான் வகை பாணியிலான நகைச்சுவை + குங்பூ படமாக ஜாலியாக அமைந்தது. இந்த படம் கொஞ்சூண்டு நகைச்சுவை, மற்றபடி ஒரு சீரியஸ் படமாக பெரியவர்களுக்கானதாக இருக்கிறது. சிறியவர்களுக்காக என படம் காண்பித்து, பெரியவர்களுக்கு எடுக்கிறார்கள்.

****
படத்தின் இறுதியில், பாண்டா கரடி தன் மன அமைதி பயிற்சியின் மூலம் பீரங்கியிலிருந்து வரும் குண்டை, அப்படியே பூப்பந்தைப் போல கையில் வாங்கி, மயிலின் படைகளை சிதறடித்து, துவம்சம் செய்வதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அது ஒரு உருவகம். இது சீனாவின் ஜென்வகை சார்ந்தது. நம் ஊரில் "கோ..தா!கொ..மா!" என கெட்ட வார்த்தையால், கைகலப்பாகி பல சமயங்களில் கொலைவரைக்கும் போய்விடுவதுண்டு. ஜென் சொல்வது என்னவென்றால், ஒருவன் ஒரு வார்த்தை சொல்வதை, ஏன் உள்வாங்கி கொண்டு கோபப்படுகிறாய்? அந்த வார்த்தை. அவன் வார்த்தை. நீ உள் வாங்காதே! உனக்கு மனக்காயமும் ஆகாது என்பதாக படித்திருக்கிறேன்.

இதில் என்ன சொல்லவருகிறார்கள் என்பது புரியவில்லை தான். ஜென் அறிந்தவர்கள் விளக்கம் சொல்லலாம்.

***

92 நிமிடங்கள் தான் படம். ஆனால், செலவோ 750 கோடி. ஜாக்கிசான், ஏஞ்சலினா போன்ற பிரபலங்கள் வாயசைத்திருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் நம் ஊரில் படம் எடுக்க பல ஆண்டுகளாகும் என நினைக்கிறேன்.

****
எனக்கு இந்த அனிமேஷன் படங்களில் பிடித்த அம்சம். நாம் நினைக்கிற கற்பனைக் காட்சியை பல கோடிகள் செலவழித்தாலும் செல்லுலாய்டில் சாத்தியப்படுத்துவது என்பது பாதியாக தான் இருக்கிறது.அனிமேஷனில் அது அருமையாக சாத்தியப்படுகிறது.

****

இந்த 3டி வகை படங்களை கொண்டு, மிருகங்களை, இயற்கையை நேசிக்க வைக்கிற படங்களை எடுத்து நன்றாக வெற்றிப்படமாக உருவாக்கமுடியும். ஹாலிவுட்காரர்கள் இந்தவகைப் படங்களை எடுப்பது சாத்தியம் குறைவு தான். அவர்கள் மனிதர்களையே நேசிப்பதில்லை. அவர்கள் நேசிப்பது எல்லாம் கல்லாவைத்தான்.

****

இந்த படம் குறித்து யாரும் எழுதியிருக்கிறார்களா என தேடிப்பார்த்தேன். குழந்தைகளுக்கான படங்களுக்கு ஏன் பதிவர்கள் விமர்சனம் எழுதுவதில்லை?

****

3 comments:

Kumaran said...

நல்ல விமர்சனம்.
நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...

விமர்சனத்திற்கு மிகவும் நன்றி. தொடர்ந்து படங்களை அறிமுகப்படுத்துங்கள்.

Anonymous said...

நல்ல பதிவு !, ஆனால் ஒரு சின்ன திருஷ்டி ... .

/// " ஜாக்கிசான், ஏஞ்சலினா போன்ற பிரபலங்கள் வாயசைத்திருக்கிறார்கள்."

வாயசைப்பது டமில் பேசும் நடிகைகளுக்கு மட்டுமே பொருந்தும் ..
குரல் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லலாமில்லையா ?

நான் அருள் மணிவண்ணன்,
எனது அண்ணன் பரிந்துரை செய்யும் படங்களை நான் விமர்சனப்படுத்துகிறேன் எனது blog இல்.
arulmoviereview.blogspot.in.
அவசியம் தங்களது கருத்தை பதிவிடவும்.
நன்றி :)