Wednesday, February 13, 2013

Welcome to Dongmakgol (2005) - திரைப்பார்வை

வெகுநாட்களுக்கு பிறகு போரை வெறுக்கும் ஒரு அருமையான படம் பார்த்தேன்.

****
1950 காலகட்டம்.  தென்கொரியாவும், வடகொரியாவும் எல்லையோர சண்டையில் கடுமையான போரில் ஈடுபடுகிறார்கள்.  அதில் ஒரு படைபிரிவில் வடகொரிய கம்யூனிச படை பிரிவில் 3 பேர் எஞ்சுகிறார்கள். இவர்களும், தென்கொரிய படையிலிருந்து சிதறிய இரண்டு பேரும் மலையில் இருக்கிற ஒரு கிராமத்திற்குள் வந்து சேர்கிறார்கள்.  இவர்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க படைவீரரும் விமானம் மலைமேல் விழுந்ததால் காலில் அடிபட்டு அதே கிராமத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உள்ளே வந்த இரண்டு குழுக்களும் அந்த மக்களை பணய கைதியாக வைத்து கொஞ்ச நேரம் அடித்துக்கொள்ளுகிறார்கள். அந்த மக்கள் போர் பற்றியோ, ஆயுதங்கள் பற்றிய அறிவோ இல்லாமல் வெள்ளந்தியாக இருக்கிறார்கள்.  அந்த கிராமமே ஒரு குழுவாக உழைப்பில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். படைவீரர்களுக்குள் நடக்கும் களேபரத்தில் ஒரு கையெறி குண்டை அந்த மக்களுடைய சேகரித்து வைத்துள்ள உணவுக்கிடங்கை சிதறடித்துவிடுகிறார்கள்.

உடனடியாக அந்த கிராமத்தை விட்டு வெளியேற முடியாத போர்ச்சூழல். அதனால் அவர்களுக்குள் தற்காலிகமாக சமாதானமாகி அங்கேயே தங்குகிறார்கள்.  குளிர்காலம் துவங்க இருப்பதால், இழந்த தானியங்களை ஈடுகட்ட அந்த மக்களுடன் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த மலைவாழ் மக்களின் வெள்ளந்தித்தனமும், சூழலும் போர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நண்பர்களாக்குகிறது.


இறுதியில் அமெரிக்க போர்விமானியை காப்பாற்ற ஒரு குழு கிராமத்திற்குள் வருகிறது.  மக்களை எதிரிகளை போல மோசமாக நடத்துகிறார்கள்.  பொறுக்கமுடியாமல் தென், வடகொரிய வீரர்கள் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றுவிடுகிறார்கள். அதில் எஞ்சிய ஒருவன் அமெரிக்க வான்படை இந்த கிராமத்தை எதிரியின் முகாமாக நினைத்து, மொத்த கிராமத்தையும் வெடிகுண்டுகளால் தகர்க்க இருப்பதாக கூறுகிறான்.

நிலைமையின் விபரீதம் புரிந்து, உடனடியாக அமெரிக்க போர் விமானியையும், எஞ்சிய ஒரு வீரனையும் அமெரிக்க தளத்திற்கு உடனடியாக அனுப்பி தாக்குதலை தடுக்க அனுப்பி வைக்கிறார்கள்.  ஒருவேளை இவர்கள் சென்றடைவதற்குள் அமெரிக்க வான்படை தாக்குதல் தொடுத்தால் என்ன செய்வது?  அதனால், கிராமத்தை விட்டுத்தள்ளி, அமெரிக்க குழுவிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு, ஒரு செயற்கையான முகாமை உருவாக்குகிறார்கள். இவர்கள் எதிர்பார்த்தபடியே அமெரிக்க வான்படை அணிவகுத்து வர, இவர்கள் தாக்குதலை தொடுத்து தங்கள் உயிரை தியாகம் செய்து அந்த கிராமத்து மக்களை காக்குகிறார்கள்.

****

போர் எத்தனை கொடூரமானது?  எவ்வளவு கடும் இழப்புகளை தரக்கூடியது என்பதை படம் நன்றாக வெளிப்படுத்துகிறது. போர் இல்லாத, வெறுப்பு இல்லாத, உழைப்பும், அன்பும் நிறைந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை அந்த மலைவாழ் மக்களின் வாழ்வை அழகாக காட்டியிருப்பார்.

கடந்த நூற்றாண்டில் முதலாம், இரண்டாம் உலகபோர்கள் விளைவித்த கொடூரங்களை நாம் நிறைய படித்திருக்கிறோம். வருந்தியிருக்கிறோம்.  அதில் ஒரு உதாரணம் போதுமானது.  இட்லரின் கொலைகார நாஜிச படை முதலாளித்துவ நாடுகளை ஆக்ரமித்து, பிறகு ரசியாவை வெல்ல நுழைகிறான். கிட்டத்தட்ட 2 கோடி வீரர்களையும், மக்களையும் இழந்து போரில் வெற்றி பெற்று, இட்லரின் படையை துரத்தியடித்தார்கள். 

வடகொரிய கம்யூனிச படைக்கும், தென்கொரிய படைக்குமான வித்தியாசத்தை தென்கொரிய இயக்குநராய் இருந்தாலும் சரியாக வெளிப்படுத்தியிருப்பார்.

படத்தின் தொடக்கத்தில், கம்யூனிச படை பிரிவில் இருவர் போரில் தாக்கப்பட்டு நடக்கமுடியாத நிலை  மற்ற வீரர்கள் சிரமப்பட்டு அவர்களை கரடுமுரடான பாதையில் தூக்கி வருவார்கள்.  இதில் இடைநிலை அதிகாரி ஒருவன் இப்படி தூக்கி செல்வது சிரமமான காரியம். அதனால் அடிப்பட்டவர்களை விட்டுவிட்டு சென்றுவிடலாம் என சொல்வார். அதற்கு அந்த அதிகாரி உறுதியாய் மறுத்துவிடுவார்.

தென்கொரிய படைவீரனை ஒரு உண்மைக்கனவு அவனை துன்புறுத்தும்.  படைபிரிவில் இருந்த பொழுது, ஒரு பாலத்தை அகதிகள் தங்கள் குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக கடந்து சென்றுகொண்டிருப்பார்கள்.  இந்த வீரனை அந்த பாலத்தை குண்டு வைத்து தகர்க்கும்படி மேலிருந்து கட்டளையிடுவார்கள்.  மறுப்பான். மேலதிகாரி மிரட்ட குண்டுகளை வெடிக்க வைப்பான்.

படத்தில் இப்படி பேசுவதற்கு நிறைய பகுதிகள் இருக்கின்றன. நிறைய நீளும் என்பதால், இத்துடன் முடித்துகொள்கிறேன். ஒளிப்பதிவு பளிச். பளிச். அந்த மலை கிராமத்தை அவ்வளவு பொலிவுடன் ஒளிப்பதிவு அள்ளியிருக்கிறது.  படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். 2005வரை தென்கொரியாவில் வெளியான படங்களிலேயே வசூலில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது.  நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறது.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

2 comments:

Anonymous said...

test

Raj said...

முதலில் இந்த படத்தை கொரியன் டாப் டென் என்ற வரிசையில் தான் பார்க்க ஆரம்பித்தேன். விமர்சனம் என்று தேடி பார்க்கும்போது யாருமே இந்த படத்தை பற்றி ஏன் எழுதவில்லை என்ற கோவம் இருந்தது. நீங்கள் சொன்ன அந்த உணவுகிடங்கு சிதரடிக்கப்பட்டவுடன் வரும் காட்சியமைப்பு இதுவரை உலகின் எந்த திரைப்படத்திலும் வராத ஒரு புதியதோர் முயற்சி. அதைவிட அந்த பகுதி மக்கள் நவீன ஆயுதங்களை பற்றி அறியாதவர்களாக இருப்பது நகைச்சுவையாக இருந்தாலும் அதன் தாக்கம் அந்த பெண் மறையும்போது தெரிகிறது விமர்சனத்திற்கு நன்றி.