Saturday, June 21, 2014

திரிஷியம் (Visuals can be deceiving)

20 ஆண்டுகளுக்கு முன்பு, மம்முட்டி சிபிஐ அதிகாரியாக ஒரு கொலையை துப்பறியும் “சிபிஐயின் டைரிக் குறிப்பு” என்ற படம் தமிழ்நாட்டில் கூட 100 நாட்களுக்கு மேல் ஓடியது!  அது போல ஒரு நல்ல திரில்லர் படம்!
***
கதை எனப் பார்த்தால்

அவர் கேபிள் டிவி ஆபரேட்டர். அவருக்கு ஒரு குடும்பம். இரண்டு மகள்கள்.  சந்தோசமாக நகர்கிறது அவர்களது வாழ்க்கை.  மூத்த மகள்  மாணவர்களுக்கான ஒரு முகாம் செல்ல, அங்கு வரும் ஐ.ஜி. பையன் தனது செல்பேசியில் அந்த பெண் குளிப்பதை படம் எடுத்துவிடுகிறான். பிறகு, அந்த பெண்ணின் சொந்த ஊருக்கே வந்து, இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன் ஆசைக்கு  இணங்க மிரட்டுகிறான்.  மகள் அம்மாவிடம் சொல்ல, இருவரும் அவனுடன் நடத்தும் போராட்டத்தில் அவன் இறந்துவிடுகிறான்.  அந்த ’கொலையை’ அந்த குடும்பம் மறைக்கிறது.  இடைவேளை.  காவல்துறையின் விசாரணையில் குடும்பம் மாட்டிக்கொண்டதா? தப்பித்ததா? என்பது மீதிக்கதை!

****

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, வட சென்னையில், ஒரு பெண்மணி குளிக்கும் பொழுது, எதைச்சையாக கவனிக்கும் பொழுது, ஒரு மூலையில் செல்போன் இருந்திருக்கிறது.  அதை கணவரிடம் சொல்ல, அவர் காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார்.  அந்த செல்போன் இரண்டாவது மாடியில் வசிக்கும் ஒருவருடையது என்பது விசாரணையில் தெரிந்திருக்கிறது! இந்த மாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இப்படி ஒரு நிகழ்விலிருந்து ஒரு  கதையை எழுதியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நபருடன் பேசும் பொழுது, இப்பொழுது வரும் ஆபாச படங்கள் கூட பெரும்பாலும் செல்பேசியில் எடுக்ககூடிய படங்கள் தான் பிரபலமாக இருக்கின்றன என்ற தகவலை சொன்னார். செயற்கை அலுத்துவிட்டது! ’ரியாலிட்டியை’ விரும்புகிறார்கள் போல!

கடந்த 20 வருடங்களில் புதிய தாராளவாத கொள்கைகளினால், சமூகத்தில் ஒழுக்கம், கற்பு, நேர்மை என இன்னபிற விழுமியங்கள் எல்லாம் தேய்ந்து கொண்டே வருகின்றன.  வாழ்க்கையை ‘ரசனையுடன்’ வாழ வேண்டுமென்றால், நிறைய பணம் வேண்டும். அதற்கு எதையும் விலையாக கொடுக்கலாம் என்றும், பணம் நிறைய சம்பாதித்தவர்கள் புதிது புதிதாக ‘அனுபவிக்க’ நினைக்கிறார்கள். 

படத்தில் கூட ஐ.ஜி. பையன் கார், கிரெடிட் கார்டு என சகல வசதிகளுடன் இருக்கிறவன், தனக்கு விருப்பம் அதனால் எப்படியாவது அடைய வேண்டுமென்று நினைக்கிறான்.  அவள் ஒரு பெண். அவளை சீரழிப்பதால், அந்த குடும்பமே சீரழியும் என்பதெல்லாம் அவனுக்கு கவலையே இல்லை!  இதுதான் கவலைக்குரிய விசயம்!

திரைக்கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல முயன்றவர்கள், படத்தின் ஆதாரமான காட்சியான, ஏன் அந்த பையன் அப்படி நடந்துகொண்டான் என்பதை எங்கும் விரிவாக பேசவில்லை.  இறுதிக்காட்சியில், அப்படி தறுதலையாக நடந்துகொண்டதற்கு நாங்களும் ஒரு காரணம் என பெற்றோர்கள் பேசுகிற மாதிரி ஒரு வசனம் வரும். அவ்வளவு தான்! 

நாலாம் வகுப்பு படித்திருக்கும் நாயகன் நிறைய திரைப்படங்களைப் பார்த்து, கொலையை மறைக்கும் முயற்சிகளை சுவாரசியமாக சொல்கிறார்கள். அதை அந்த பையனின் அம்மாவான ஐ.ஜி.  மெல்ல மெல்ல அவிழ்ப்பது இன்னுமொரு சுவாரசியம்.

படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் இயல்பாக வலம் வருகிறார்கள். இரண்டு பாடல்கள் கூட மான்டேஜ்களாக வருகிறது. படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி இப்பொழுது பல மொழிகளிலும் மீண்டும் எடுக்கிறார்கள். தமிழில் கமலும், தெலுங்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடிக்கிறார்களாம்.

கன்னடத்தில் பி.வாசு இயக்குகிறாராம். மணிச்சித்திரதாழ் என்ற ஒரு அருமையான படத்தை, சந்திரமுகியாக அதன் சாரமிழக்க செய்ததைப் போல செய்துவிடுவார் என்ற பயம் எனக்கு இருக்கிறது!

மலையாளத்தில் நாயகனின் கிறிஸ்தவ பாத்திரத்தை, தமிழில் சைவ வெள்ளாளராக காட்ட இருக்கிறார்களாம்.  எப்படி வருகிறது என காத்திருப்போம்!

No comments: