Thursday, July 3, 2014

’அத்தோ’ உணவு தெரியுமா?



வேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கேட்டால், ‘அத்தோ – குழம்பு’ என்றார்கள். மக்கள் பிஸியாக அந்த கடையில் உட்கார்ந்து சாப்பிட்டும், பார்சல் வாங்கிக்கொண்டும் சென்றார்கள்.

காவிக்கலரில் வேகவைத்த நூடுல்ஸ், கோஸை பச்சையாக சீவல் சீவலாக வெட்டி ஒரு தட்டில்! வெங்காயத்தை எண்ணையில் போட்டு வதக்கி மொறு மொறு என தயார் நிலையில்! கடலைமாவு, நல்லெண்ணெய், கொத்தமல்லி, பேஜோ (தட்டு போல எண்ணெயில் போட்ட வடகம்)
-   
  இதை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போட்டு கையால் கிளறி ஒரு சின்னத்தட்டில் வைத்து தருகிறார்கள்.இதனோடு கூடவே வாழைத்தண்டு சூப் போல தண்ணியாக தருகிறார்கள்.  அதை குழம்பு என்கிறார்கள்.

முதன்முதலாய் வாங்கிச் சாப்பிடும் பொழுது புளிப்பு, காரம் என வித்தியாசமான சுவையில் இருந்தது! முழுவதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை.  இப்பொழுது வாரம் ஒருமுறை அந்தப்பக்கம் போகும் பொழுது சாப்பிட்டு சாப்பிட்டு பழக்கமாகிவிட்டது! ஒரு பிளேட் ரூ. 35 (குழம்புடன்) இதோடு அவித்த முட்டையைச் சேர்த்தால் அசைவ அத்தோ. இறைச்சியும் சேர்க்கலாம் என்கிறார்கள். அந்த கடையில் இல்லை!

இதை பர்மாவின் தேசிய உணவு என்கிறார்கள். பர்மாவிலிருந்து 60களில் இங்கு வந்தவர்கள் சென்னையின் கடற்கரை சாலையில் நிறைய பேர் தள்ளுவண்டியில் விற்றுவருகிறார்களாம்.  வட சென்னையில் நல்ல பரிச்சயம். தென் சென்னையில் எங்கும் நான் பார்த்ததில்லை. மதுரை முனியாண்டி விலாஸ், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி எல்லாம் நாடு முழுவதும் விற்கும் பொழுது, வடசென்னையில் பரிச்சயமான இந்த உணவு, தென் சென்னையில் பார்க்கமுடியாதது ஆச்சர்யம்!

இதற்கு முன்பு வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கடற்கரை சாலையில் ஒரு கடையில் பர்மா நூடுல்ஸ் சாப்பிட்டு, புட் பாயிசன் ஆகி வயிறு அப்செட் என்றார்.  இரண்டு நாட்கள் படுத்தபடுக்கையாக இருந்தார்.   ஆகையால், கொஞ்சம் கடையின் சுத்தம் பார்த்து தான் சாப்பிடவேண்டும்.

நான் சாப்பிடும் கடை, கணவன் மனைவி இருவரும் வைத்திருக்கிறார்கள்.  தள்ளுவண்டி என்றாலும், தயாரிப்பு முறையில் சுத்தமாக வைத்திருப்பார்கள். இதுவரை 6 முறை சாப்பிட்டு இருக்கிறேன். எந்த தொந்தரவும் இல்லை!

எங்க தாத்தா கூட பர்மாவில் தொழில் செய்தவர் என்பார்கள். பர்மா உணவு பிடித்ததற்கு அது கூட காரணமோ?

No comments: