Monday, October 13, 2008

ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும்!


ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் 100 லஞ்சம் கொடுக்க தயாராய் இருங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும். புரியவில்லையா?

மதுரையில் மூன்று நாள்களுக்கு முன்பு, ஒரு கொலை. பத்திரிக்கைகளில் விபத்து என செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சுரேஷ்குமார், வயது 32. மதுரையில் பில்ட்ரான் என்ற நிறுவனத்தில் கலெக்சன் வசூலிக்கும் பணிபுரிகிறவர். அன்றைக்கு மதுரையிலிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம் வரை கிளம்பியவர், ஹெல்மெட் அணியாமல் போயிருக்கிறார். போகும் வழியில் ஒரு செக்போஸ்டில் முருகன் என்றொரு போலீஸ்காரர் வழிநிறுத்தியிருக்கிறார்.

நிறுத்தினால் 100 ரூபாயைபிடுங்கிவிடுவார்களே என எண்ணி, நிற்காமல் செல்ல... திருடனைப் பிடிக்கக் கூட ஓடாத போலீஸ் "கைக்கு எட்டிய ரூ. 100 வாய்க்கு எட்டவில்லையே!" என பதறி, வண்டியுடனே ஓடி தன் குண்டாந்த்தடியை வண்டிக்குள் திணிக்க சுரேஷ்குமார் தடுமாறி, எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி, ஸ்பாட்டிலேயே உயிர் போய்விட்டது.

இது முதல்முறை அல்ல எனவும் மக்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே அந்த செக்போஸ்ட் வருகிற போவோரை எல்லாம் நிறுத்தி கல்லா கட்டுவதில் நிறைய பேமஸாம். இதற்கு முன்பு இதே மாதிரி தடியை விட்டு அப்பொழுது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் இது விபத்தா? கொலையா?

சுரேஷ்குமாருக்கு 4 மாதத்திற்கு முன்பாகத்தான் திருமணம் நடந்திருக்கிறது. அவர் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறாராம்.

மக்கள் கூட்டமாய் கூடி போலீஸை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். போலீசு அன்பாய் கவனித்து(!) கலைத்து அனுப்பி விட்டார்கள்.
ஒரு உயிர் அநியாயாமாக பறிக்கப்பட்டு விட்டது. இந்த செயலை செய்த முருகன் என்ற போலீசு மீது வழக்கு போட்டிருப்பார்கள் என நினைத்தால் நீங்கள் அப்பாவி. அங்கு வந்த மேலாதிகாரி இந்த கொலை பற்றி என்ன சொன்னரென்றால் ...
"அந்த அரசு பேருந்து ஓட்டுநர் கொஞ்சம் கவனமாய் இருந்திருந்தால், இந்த விபத்தை (!) தவிர்த்திருக்கலாம். மேலும், உயிர் போகும் அளவுக்கு கவனக்குறைவாக வண்டி ஓட்டியதால் சுரேஷ் மீது வழக்கு பதியப்படும்" என்றார்.

நன்றி - தினமலர்

No comments: