Wednesday, October 8, 2008

இறப்புச் சடங்கில் கலந்து கொண்ட நொந்த அனுபவம்!


சென்னையில் பலரும் ஒரு விசயத்தை ஒப்புக்கொள்வார்கள். 'பக்கத்து வீட்டுகாரர்களுடன் ஒட்டாமல் வாழ்வதை'. இதை செய்தித்தாள்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


சமீபத்தில் கூட ஒரு சென்னையின் புறநகரில் ஒரு வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்து, கொள்ளையடித்து போய்விட்டார்கள். அடுத்த நாள் வரை யாரும் பார்க்க்வில்லை எனசெய்திகள் படித்தோம்.

இந்த விசயம் நம் விசயத்தில் நடந்துவிடக்கூடாது என முடிவெடுத்தேன். அதை அமுல்படுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமும் வாய்த்தது. எங்களுக்கு எதிரே உள்ள வீட்டைஉள்ள வீட்டில் ஒரு வயதான அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அன்றைக்கு இரவு உயிர் பிரிந்தது.

அந்த வீட்டு குழந்தை என் அண்ணன் குழந்தையோடு எங்கள் வீட்டில் வந்து விளையாடும். இது போதாதா! இறப்புச் சடங்கில் கலந்து கொள்வோம் என முடிவெடுத்தேன். உறவைப்பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

சாமியானா பந்தல் போடப்பட்டு, காலையில் 20 பேர் குழுமியிருந்தார்கள். 9 மணிக்கு வேலைக்கு கிளம்பிய பொழுது, அங்கு நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். "எப்ப தூக்குவாங்க?"மாலை 4 மணி என்றார்.

அலுவலகம் போனதும், முதல் வேலையாக 4 மணிக்கு போவதற்கு பர்மிசன் வாங்கினேன். வேலையெல்லாம் அவசரம் அவசரமாய் முடித்துவிட்டு 4 மணிக்கு போய் வீட்டுக்குப்போய் சேர்ந்தேன்.


50 பேர் வரை குழுமியிருந்தார்கள். வண்டிகள் நிறைய நிறுத்தி வைத்திருந்தார்கள். போய் வண்டியை நிறுத்தும் பொழுது, ஒரு வண்டியை பதட்டமாய் தட்டிவிட்டுவிட்டேன். வரிசையாய் 4 வண்டிகள் சரிந்தன. டெத் வீட்டில் வந்திருந்த எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். தர்ம சங்கடமாய் போய்விட்டது.

பிறகு, ஒருவாறு சமாளித்து சோகமாய் முகம் மாறி, கூட்டத்தோடு கலந்து நின்றேன். "எப்பத் தூக்குவாங்க?" என கேட்டால், 5 மணி என்றார்கள். வரிசையாய் நிறைய சடங்குகள் செய்துஅவர்கள் தூக்கி நகரும் பொழுது, மணி மாலை 6.

வண்டியில் போகலாமா என யோசித்தேன். மரியாதையாக இருக்காது. நடந்தே போவோம் என முடிவெடுத்து, போனேன். தூக்கும் பொழுது, 60 வரை இருந்தவர்கள், வண்டி நகரும்பொழுது, மொத்தம் 10 பேர் மட்டுமே உடன் வந்தனர். அந்த தெரு மக்களில் நான் ஒருவன் மட்டுமே! சென்னை அப்படித்தான். நாம்தாம் மாற்றிக்காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வந்த 10 நபர்களில் இறந்தவர்களின் மகன்கள் இருவர். ஒருவர் ஒரு மகனைத் தாங்கிபிடித்தவாறு வந்தார். வண்டி இழுத்துக்கொண்டு வந்தவர் ஒருவர். மீதம் 6 பேர். அதில் மூவர்அந்த வண்டியை அலங்கரித்த பூ தோரணங்களை இழுத்து, இழுத்து உதிர்த்துக் கொண்டே வந்தனர். அப்படியே மூன்று குரங்குகள் செய்கிற சேட்டை தான் நினைவுக்கு வந்து போனது.


மீதி மூவரில் இருவர் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தனர். அதில் ஒருவர் இறந்த அம்மாவின் தம்பியாம். மீதம் இருந்த ஒருவர் மட்டுமே நடந்து வந்தார். கொஞ்ச தூரம் போனதும்,என்னருகே வந்தவர் ஒரு ஏரியாவை சொல்லி இங்கிருந்து எப்படி போவது என்றார். இங்கிருந்து குறிப்பிட்ட தூரம் ஷேர் ஆட்டோ. பிறகு, எல்லா பகுதிக்கும் பஸ் உண்டு என்றேன்.பேசிக் கொண்டே ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. ஏறிப் போயேவிட்டார்.


இப்பொழுது நான் தன்னந்தனியாக சோகமாய் நடந்து போனேன். இப்படியே திரும்பி போய்விடலாமாஎன நினைப்பு வந்தது. சே! அது மரியாதையாக இருக்காது. வந்தது வந்துவிட்டோம். கடைசி வரை போய்விடுவோம் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

இரண்டு கி.மீ. சுடுகாடு போய் சேர்ந்தோம். அப்படியே யூ டர்ன் எடுத்து, காலாற நடந்து வந்தேன். கரு கரு வென சூழ்ந்து நின்றிருந்த மேகம், இடி மழையுடன் பெய்ய ஆரம்பித்தது. மனிதர்களை நினைத்து, அவசர அவசரமான வாழ்வை நினைத்து நொந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன்.

பின்குறிப்பு : இப்படி தெருவில் யாரும் வராத பொழுது, உறவினர்கள் யாரும் வராத பொழுது, உடன் சென்றேனே! பலன். அதற்கு பிறகு வந்த நாட்களில் அந்த இறந்த போன அம்மாவின் மகன் பார்வையில் ஒரு பழகிய சிநேகம் பார்வையில் வந்திருக்க வேண்டும் அல்லவா! ம்ஹீம். சுத்தமாக இல்லை. சென்னை மக்கள் திருந்த பல காலமாகும்.

3 comments:

Anonymous said...

சோதனை

rapp said...

:(:(:(

பாபு said...

சென்னை மக்கள் திருந்த பல காலமாகும்.


repeeattu