Saturday, February 26, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - கடற்கரையும் வாழ்வும்!



"உங்களுக்கென்னப்பா! ரிலாக்ஸ் பண்ண மெரினா பீச் இருக்கு!" - என்றான் ஊரிலிருக்கும் நண்பன்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளன்று கடற்கரை பக்கம் போய் காலாற நடந்துவரவேண்டும் என நினைத்து, காலண்டரில் நாள் குறித்து வைப்பேன். அலுவலக வேலைகளுக்கிடையில், காலண்டர் பக்கமே எட்டி பார்க்க முடியாதவாறு, வேலையின் சுழியில் சிக்கிக்கொள்வேன். பிறகு எங்கே கடற்கரை போவது? கடைசியாய் பார்த்து, மூன்று மாதங்களாகிவிட்டன.

சென்னையில் பலரிடம் உரையாடும் பொழுது, கேட்கும் ஒரு விஷயம். "நீங்கள் எப்பொழுது கடற்கரைக்கு போனீர்கள்?" சிலர் 3 மாதம், சிலர் 6 மாதம். ஒன்றிரண்டு பேர் வருடங்களாயிற்று என்றார்கள். மாதம் ஒருமுறை என்பது அபூர்வம் தான்.

சென்னை பல ஊர்கள் அடங்கியுள்ள ஒரு மாநகரம். கே.கே. நகரில் வாழ்பவர் அண்ணா நகரில் வேலை பார்த்தால், அவர் இந்த இரண்டு பகுதிகளை தவிர, வேறு எங்கும் பயணிப்பது இல்லை. "வேலை உண்டு, வீடு உண்டு. தொலைக்காட்சி உண்டு" என வாழ்கிறார்கள். இதைத் தவிரவும் உலகத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன என்பதே அறியாமலோ அல்லது அறிந்தோ இதே வாழ்வை தொடர்கிறார்கள்.

பெருநகர வாழ்க்கை ஒரு சபிக்கப்பட்ட வாழ்வு. சென்னைக்கு வந்த பொழுது, பெருநகர வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என சொல்லிக்கொண்டு திரிந்தேன். இப்பொழுது அப்படியெல்லாம் தத்துவ வார்த்தைகளை உதிர்ப்பதில்லை. இப்பொழுது அந்த மிகப்பெரிய இயந்திரத்தின் ஒரு சிறு பல் சக்கரமாக நானும் சுழன்றுக்கொண்டிருக்கிறேன்.

சென்னை வந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. கடந்த ஆண்டு வாழ்ந்த வாழ்வை திரும்பி பார்த்து, நொந்தே போனேன். மீண்டும் ஒருமுறை இதே தவறை இனி எப்பொழுதும் செய்துவிடக்கூடாது என மனதளவில் நூறுமுறையாவது உறுதி எடுத்திருப்பேன்.

1 comment:

Anonymous said...

யா!