Saturday, April 2, 2011

மனிதர்கள் 2 - சந்தானம்


செல்லமாய் 'கருவாயா' என்று தான் அழைப்போம். நல்ல கருப்பு. கற்பனை குதிரையை தட்டிவிட்டு, புதிய புதிய ஜோக் சொல்வான். சத்தமாய், கல கல வென சிரிப்பான். அவன் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். சுறுசுறுப்பானவன். எங்கு கிளம்பினாலும், முதல் ஆளாக ரெடியாகி நிற்பான். எவ்வளவு கூட்டமென்றாலும், சாமர்த்தியமாய் டிக்கெட் வாங்கி வந்துவிடுவான். பால்ய சினேகிதன்.

வறுமையால், ஆறாவது படிக்கும் பொழுதே, பாதியில் நிறுத்தி விட்டு, அவனுடைய மாமா ஒருவர் நடத்தும் சிறிய பட்டறையில், எடுபிடி ஆளாக வேலைக்கு போனான். முப்பது வயதை ஒட்டிய அவனுடைய அக்கா ஒருவர் திருமணமாகாமல் இருந்தார்.

கல்வியை தான் அவனிடம் பறிக்க முடிந்தது. எப்பொழுதும் போல், வேலை முடிந்து மாலையில் எங்களுடன் வந்து ஒட்டிக்கொள்வான். வார விடுமுறை நாளில் எங்களோடு சுற்றுவான்.

***

தெருமுனையில் அவனுடைய மாமா ஒருவர் குடியிருந்தார். அவருக்கு பத்தாவது படிக்கிற பெண் இருந்தாள். அந்த பெண்ணையே சுத்தி சுத்தி வருவான். அந்த பெண் கொஞ்சம் குண்டு. அதை சொல்லியே அவனை கலாய்ப்போம். வெட்கப்பட்டு சிரிப்பான்.

ஒருமுறை வீட்டில் எதுவும் எழுதப்படாத கல்யாண பத்திரிக்கை கண்ணில்பட்டது. அவனை மாப்பிள்ளையாக்கி, அத்தைப் பெண்ணை மணப்பெண்ணாக்கி, சுபயோக சுப தினத்தில் திருமணம் நடைபெறும் என, விளையாட்டாக பத்திரிக்கை போல எழுதிக்கொடுத்தேன். அந்த பத்திரிக்கையை கந்தலாகும் வரைக்கும் பல மாதங்கள் பார்த்து, பார்த்து சந்தோசப்பட்டான்.

***

அன்று, வழக்கமாக கூடும் இடத்தில் கூடி பேசிக்கொண்டிருந்தோம். வந்தான். பேசினான். அன்று இரவு "நைட் வேலை" என சொல்லி கிளம்பினான்.

விடிகாலையில் என் அண்ணன் எழுப்பி, சந்தானம் செத்துப்போய்விட்டதாக சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.

அந்த மார்ச்சுவரியை சுற்றி, மனிதர்களின் அழும் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. வாழ்வில் முதன்முறையாக, மார்ச்சுவரிக்குள் போய் பார்த்தேன். உள்ளே அறையின் மூலையில், ஆடையே இல்லாமல், தரையில் பரவி, இன்னும் கருத்த உடம்பாய் கிடந்தான். பார்க்க, பார்க்க அழுகை பொங்கி வந்தது. விருட்டென வெளியே வந்துவிட்டேன்.

ஓராண்டிற்கு முன்பு தன் மாமாவிடம் சண்டை போட்டதால், அங்கிருந்து விலகி, இந்த வெல்டிங் பட்டறையில் வந்து சேர்ந்தான். முதல் நாள் இரவு 11 மணி அளவில் ஷாக் அடித்து, ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டானாம். ஒரு டிரைசைக்கிளில் கொண்டு வந்து, மார்ச்சுவரியில் போட்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய பட்டறைகளிலேயே வேலை செய்பவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு சாதனமும் தருவதில்லை. சிறு பட்டறைகளில் சுத்தம். தருவதே இல்லை. சொல்லும் பொழுது, 'விபத்து' என்றார்கள். அப்பட்டமான 'கொலை'. இறக்கும் பொழுது அவன் வயது 17.

சக நண்பனின் மரணம் பல காலம் தொல்லை செய்தது. அதன் பிறகு, வந்த யாராலும், அவனின் கலகலப்பான் இடத்தை இட்டு நிரப்பவே முடியவில்லை.

***

ஒருமுறை அவனும், நானும் பேசிக்கொண்டிருந்த பொழுது, விளையாட்டாய், இருவரும் திரும்பி நின்று, அவனை பின்புறமாக முதுகில் தூக்கும் பொழுது, அவனுடைய மொத்த எடையும் தாக்கி, நச்சென்று தரையில் இருந்த கல் மீது மோதி, முகத்தில் நல்ல காயமாகிவிட்டது. ஆறியதும், மாறாத தழும்பாகிவிட்டது. இப்பொழுது நிதானமாய் என் முகம் பார்த்தால், தழும்பாய் 'சந்தானம்' தெரிவான்.

***

இன்றைக்கும் எங்காவது சிறுவயது பையன் எங்கேயாவது வேலை செய்வதை பார்த்தால், 'சந்தானம்' தான் நினைவுக்கு வருகிறான்.

'குழந்தை' தொழிலாளர்கள் இல்லாத நிலை இந்த நாட்டில் உருவாக்கப்படவேண்டும்.

****

1 comment:

பால்வெளி said...

மனம் கனக்க வைக்கும் கட்டுரை.. எழுத்து நடை நன்றாக வருகிறது.. எளிய மனிதர்களை கட்டுரையில் சமூக அக்கறையோடு அறிமுகப்படுத்துவதை தொடரவும்..