Thursday, March 22, 2012

கூடங்குளம் : பகத்சிங்குகள் எழுவார்கள்!


கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக, கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்! அதனால் அணு உலையை இழுத்துமூடு என போராடிவருகிறார்கள்.

60 ஆண்டுகளாக துவங்கிய காலத்திலிருந்து, ஒருமுறை கூட வாய் திறக்காத இந்திய அணு சக்தி துறை இரண்டு, மூன்று சந்தேகங்களுக்கு மட்டும் பதில் சொல்லியது. பிறகு, எல்லாம் இராணுவ ரகசியம் என மற்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தது. இனி, பதில் சொல்ல முடியாது என திமிராக அறிவித்தது.

அதன்பிறகு, ஜெ.வின் ஆட்டம். போராடும் மக்களுடன் உடன் இருப்பதாக முதலில் நம்பிக்கை ஊட்டினார். அணு உலை ஆதரவாளரான சீனிவாசனை போட்டு, அணு உலை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை பெற்றார். இடைதேர்தல் முடிந்த கையோடு, தனது பாசிச முகத்தை காட்டத்துவங்கிவிட்டார். மத்திய அரசு தன் பங்குக்கு இராணுவத்தையும், ஜெ. தன் பங்குக்கு காவல்துறையையும் போராடுகிற மக்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார்கள்.

இந்திய ராணுவம் இந்தியாவை அந்திய சக்திகளிடம் காப்பாற்ற இருக்கிறது! காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்களே! இரண்டு கருத்துகளுமே நமது மனப்பிராந்தி என்பதை நடைமுறையில் நிரூபித்திருக்கின்றன. அந்த போராடும் வீரமான மக்கள் இந்த நெருக்கடியையும் நொறுக்கி, மீண்டுவருவார்கள். தள்ளி தள்ளி இருக்கிற நாம், அணு உலை எதிர்ப்பு போராட்டங்களை மாநிலம் முழுவதும் கட்டியமைக்கவேண்டும். வெகுஜன மக்கள் போராட்டங்கள் மூலம் தான் இதுவரை நமக்கான உரிமைகளை பாதுகாத்து இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

முகநூலிலும், ட்வீட்டிரிலும், தனிப்பட்ட தளங்களிலும் சமூக அக்கறையோடு எழுதுகிற நபர்கள் தாங்கள் ஏற்கிற அரசியல், அதனை நடைமுறைப்படுத்துகிற அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும். அரசு வலுவான அமைப்பாக இருக்கும் பொழுது, நாம் மட்டும் தனிநபர்களாக சிதறி இருப்பது எப்படி சரியானதாக இருக்கமுடியும்?

பகத்சிங், சுகதேவ், இராஜகுரு தோழர்களின் நினைவுநாளில், இந்த தொடர் போராட்டத்தில், திருநெல்வேலி மண்ணிலிருந்து இந்திய விடுதலைக்கு புதிய பகத்சிங்குகள் எழுவார்கள்.

2 comments:

திருவாரூர் சரவணா said...

வெளிநாட்டு கம்பெனிக்கும், கோடீஸ்வரன், அரசு அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் மின்சாரமே கிடையாது. பேசாம எல்லாரும் போய் செத்துடுங்க. அப்படின்னு விரைவில் அறிவிப்பு வரலாம்.

மிஸ்டர் பொதுஜனத்துக்கும் இது வேணும். இலவசப் பொருளை மூஞ்சில விட்டெறிஞ்சு நாங்க உழைச்சுப் பிழைக்க வழி சொல்லுங்கன்னு கேட்காத வரை இந்த கொடூர தண்டனை தேவைதான். மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை முக்கால் மணி நேரம் விட்டு முக்கால் மணி நேரம் மட்டுமே மின்சாரம்-இதுக்கும் சொரணை கெட்ட ஜனம் பழகிடுச்சு.

STARWIN said...

தமிழன் தலையில் மிளகாய்