Thursday, July 21, 2011

மனிதர்கள் 7 - முகமறியா மாணவர்கள்!


மதுரை இரயில் நிலையம். எல்லா ரயில்களும் வந்து போய், ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர, கொஞ்சம் கொஞ்சமாக பிளாட்பாரத்தில் மக்கள் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள்.

பேருந்துக்காக முயற்சித்து கிடைக்காமல் போய், வேறு வழியில்லாமல், சென்னைக்கு செல்லும் கடைசி வண்டியான அனந்தபுரியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், இராகவ் வேர்க்க விறுவிறுக்க பிளாட்பாரத்தை வந்தடைந்தான்.

சில விநாடிகளுக்குள் ரயில் பெரிய சத்தத்தோடு வந்து சேர்ந்தது. முன்பதிவு செய்யப்படாத (Unreserve) காம்பார்ட்மெண்டிற்கு சென்று பார்த்தால், திக்கென்றிருந்தது. வாசல்வரை நின்று கொண்டிருந்தார்கள். இது கடைசிபெட்டி. முன்பெட்டிக்கு போகலாம் தான். ஆனால், நேரம் இல்லை. ஒருவேளை இதைவிட அதிகமாய் கூட்டம் இருக்ககூடிய அபாயமும் உண்டு. ரிஸ்க் வேண்டாம். ஏறிவிடலாம் என ஏறிக்கொண்டான். 200 பேர்வரை அந்த காம்பார்ட்மெண்டில் நிச்சயம் இருப்பார்கள்.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி பார்த்த பொழுது, உள்ளே சிலர் படுத்து நன்றாக தூங்கி கொண்டு வந்தனர். 4 பேர் உட்கார வேண்டிய இடத்தில் இருவர் கால் நீட்டி உட்கார்ந்திருந்தனர்.

திண்டுக்கல்லை அடையும் பொழுது, நடுநிசி. அங்கும் சிலர் ஏறினர். அதில், நான்கு கல்லூரி மாணவர்களும் ஏறினார்கள். ஏறும்பொழுது, கலகலவென பேசிக்கொண்டே ஏறினார்கள். அந்த காம்பார்ட்மெண்டின் நிலைபுரிய அவர்களுக்கு 10 நிமிடம் கூட ஆகவில்லை.விறுவிறுவென மக்களை விலக்கி, காம்பார்ட்மெண்டிற்குள் உள்ளே நுழைந்து, ஒரு மாணவன் கட்டளைகள் தர, மற்றவர்கள் அமுல்படுத்த பரபரவென செயல்பட்டார்கள்.

படுத்துக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி, உட்கார வைத்தனர். அன்பாய் கேட்டுக்கொண்டார்கள். சத்தம் போட்டவர்களை சத்தத்தால் அடக்கினார்கள். மக்கள் ஆதரவு தந்ததால், மாணவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.

அரை மணி நேரத்தில் சகலருக்கும் உட்கார இடம் கிடைத்துவிட்டது. இடம் பறிபோனவர்கள் புலம்பியும், திட்டியும் தீர்த்தார்கள். மாணவர்கள் தங்களுக்கு வாசலோரம் கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் ஜாலியாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

இடையில் ஒரு தொழிலாளி பீடிக்குடித்தார் என இருப்பதை பிடுங்க, ரயில்வே போலீசு முயற்சியில் இறங்க, பார்த்த மாணவர்கள் பைசா தராமல், பேசியே தொழிலாளியை மீட்டு வந்தார்கள்.

அடுத்து ஒரு மணி நேரத்தில், வந்த நிறுத்தத்தில் மக்கள் சிலர் ஏற வந்த பொழுது, "இவ்வளவு பேருக்கு இடம் இல்லை. சிலர் ஏறிக்கொள்ளுங்கள். இந்த ஸ்டேசனில் நிறைய நேரம் வண்டி நிற்கும். ஆகையால், முன்பெட்டி சென்றுவிடுங்கள்" என அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை மறுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு, பாதி பேர் முன்பெட்டிக்கு நகர்ந்தார்கள். ஏறிய சிலருக்கும், பொறுப்பாய் இடம் தேடி, அவர்களையும் அமர வைத்தார்கள்.

இதற்கிடையில், சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த பெண்மணி, நடக்கும் வழியில் அமர்ந்திருந்ததால், போகிற, வருகிறவர்களின் செருப்பு கால் மிதிபட்டு வலியால் சிரமப்படுவதையும் பார்த்த மாணவர்கள், அந்தம்மாவை பாதையை விட்டு விலகி அமர வைக்க முயற்சித்தார்கள். ம்ஹூம். இடம் இல்லை. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி, 'இனி இந்த இடத்தை கடக்கிறவர்கள் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது' என்றார்கள். அங்கேயே 20 நிமிடம் வரை இருந்து, மக்கள் அமுல்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்தி திரும்பவும் தங்கள் இடத்திற்கு வந்து, பேச ஆரம்பித்தார்கள்.

சென்னைக்கான தூரம் குறைந்ததால், பயணிகள் ஏறுவது நின்று போனது.கொடைக்கானல், மொபைல் போன், சினிமா, அரசியல், பெற்றோர்கள் பற்றி விடிய விடிய சளைக்காமல் பேசிக்கொண்டே வந்தார்கள்.

*****

பின்குறிப்பு : நடந்ததை எல்லாம், திரைப்படம் போல பார்த்து, மாணவர்களின் செயல் கண்டு பிரமித்து, என்னிடம் பகிர்ந்து கொண்டவர் இராகவ். அவர்கள் பேசியதை கவனித்த பொழுது, இரண்டாமாண்டு கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் என்றார்.

இருவருக்கான உரையாடல் இப்படி முடிந்தது.

நான் : தனியா செய்ய எல்லோருக்கும் தயக்கம் இருக்கும். மாணவர்களோடு சேர்ந்து, ஏன் உதவி செய்யலை?

இராகவ் : சரின்னு பட்டது. ஆனால், செய்யல!

நான் : போய்யா!.வெண்ணெய் வெட்டி!

*****

No comments: