Friday, May 11, 2012

மனிதர்கள் 15 - ரேவதி

அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்து சமூக அக்கறை கொண்ட அரசு பள்ளி ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.   அவர் சில செய்திகளை பகிர்ந்துகொண்டார்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் குறைவு என்ற குறைகள் உண்டு.    தனியார் பள்ளிகளில் நிறைய குறைகள் உண்டு.

வசதி இல்லாததினாலேயே பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  என் வாழ்வில் நிறைய நல்ல மாணவ/மாணவிகள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிற்கும் பொழுது வருத்தமாக இருக்கும். 

அப்படி ஒரு மாணவி தான் ரேவதி.  1ம் வகுப்பிலிருந்து கவனித்து வருகிறேன்.  நல்ல சுறுசுறுப்பான, அறிவான பெண்.  தமிழில் கூட 100க்கு 100 வாங்குகிற பெண் அவள்.  ஒரு எழுத்துப்பிழை, சந்திப்பிழை கூட இருக்காது.  இரண்டு முறைக்கு, மூன்றுமுறை கூட சோதித்துவிடுவேன். பிழையே இருக்காது.

அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை. அப்பா போஸ்டர் ஒட்டுகிற தொழிலாளி.  அம்மா மனநிலை சரியில்லாதவர்.  யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்.  அந்த பெண்ணின் படிப்பு செலவுகளை அப்பா தவறாமல் நிறைவேற்றிவிடுவார்.  அவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நோயில் இறந்தார்.  அம்மாவிற்கும் நோய் முற்றியது.  பத்தாம் வகுப்பு முடிந்ததும், படிப்பை தொடரமுடியவில்லை.

என்னைப் போல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்து, 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தோம். நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள்.  ஆனால், அதற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை.  எங்களாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியவில்லை.

படிப்பில் ஆர்வம் இருந்தும், வாழ்க்கை நெருக்கடி திசை திருப்பிவிட்டது.  ஒரு பையன் அந்த பையனை காதலித்தான்.  வேறு வழி தெரியாமல், அந்த பையனை திருமணம் செய்துகொண்டாள்.

இப்பொழுதும் ரேவதி போல பல மாணவ/மாணவிகளை பார்த்துத்தான் வருகிறோம்.  நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் இடையில் நிற்பதும், வசதி, வாய்ப்பு இருப்பதினால், சுமாராக படிக்ககூடிய மாணவ, மாணவிகள் மாஸ்டர் டிகிரி வரைக்கும் படிப்பதையும் பார்த்து வருகிறோம். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் மக்கள் அரசு வரவேண்டும்.  கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட்டு, இலவச கல்வி வழங்கப்பட்டால், இங்கு அனைத்து மாணவர்களும் நன்றாக மேலே வருவார்கள்.

*****

1 comment:

Unknown said...

நீங்கள் சொல்வது சரிதான் சகோ, இன்று பள்ளிகளை காசாக்கும் கூடமாக மாற்றிவிட்ட அரசும் பணம் படைத்த மக்களும் இதை யோசிக்க தான் வேண்டும்........... எனக்கு தெரிந்து நன்றாக படிக்கும் என் தோழிகளும் இன்று ஒருவனுக்கு மனைவி, படிப்பு சுமராக இருந்தாலும் பணம் படைத்தவர் மட்டுமே இன்று படிப்பை தொடர முடியும் என்ற நிலை மாறத்தான் வேண்டும்.........