Wednesday, May 2, 2012

மருந்தும் வாழ்வும்!

உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், சொந்தபந்தங்கள் என பலரையும் நெருங்கி பார்த்தால், ஏதேனும் ஒரு நோய்க்காக தினசரி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  சிலர் சர்க்கரை நோய்க்காக; ஒருவர் ஒவ்வாமை பிரச்சனைக்கு; இன்னொருவர் தைராய்டு பிரச்சனைக்கு! இன்னொருவர் மனபதட்டத்தை தணிப்பதற்கு!  நோய் வதைக்கிறது என்றால், மருந்து எடுத்துக்கொள்வது கூடுதலாக வாட்டுகிறது.

இவர்களில் பெரும்பாலும் அலோபதி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  நானும் சில காலம் வயிறு தொந்தரவுக்காக மருத்துவம் பார்த்தேன்.  பெருநகரங்களில் இருக்கும் பெரும்பான்மையான அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசுவதேயில்லை. நோயை கண்டறிகிறார்கள்.  உடனே மருந்து சீட்டு எழுதி தந்துவிடுகிறார்கள். என்ன உணவு சாப்பிடுகிறாய்? இதை தவிர்! இதை எடுத்துக்கொள் என நோயாளியின் மீதான் அக்கறை கொண்டு எதையும் சொல்வதில்லை.  எதை வேண்டுமென்றாலும் உன் விருப்பம் போல தின்றுகொள்! இந்த மருந்து, மாத்திரைகளையும் அத்துடன் உள்ளே தள்ளிவிடு! என்பதாக தான் இருக்கிறது.  "யாரிடம் வேண்டுமென்றாலும் போ! காண்டம் பயன்படுத்து" என்கிற விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது!

அலோபதி மருத்துவத்தில், மாத்திரை, மருந்துகளின் விற்பனையில், புதிய கண்டுபிடிப்புகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தான் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஏதாவது ஒரு நோய் ஒரு மனிதனை தாக்கிவிட்டால், அவன் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகவே, மருந்து கண்டுபிடிக்கிறார்களோ என சந்தேகமே வருகிறது. ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் சிட்ஜின் என்ற மாத்திரை சரியாக 24 மணி நேரம் வேலை செய்யும் என நண்பர் சொன்னார்.

இந்த சூழ்நிலையில் சமீப காலங்களில் சில நம்பிக்கைகள் தென்பட்டன.  பல ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட நண்பரின் சித்தப்பா மாற்று மருத்துவத்தில் மருத்துவம் பார்த்திருக்கிறார்.  சில நாள்களுக்கு ஒரு மருந்து. மற்றபடி முழுவதும் உணவு கட்டுப்பாடு தான்!  இப்பொழுது அலோபதி மருந்தோ, மற்ற மருந்துகளோ இல்லாமலே உணவுக்கட்டுப்பாட்டிலேயே 6 மாதம் சர்க்கரையின் சரியான அளவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னொரு நண்பருக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தது.  இன்ஹேலர் தினசரி பயன்படுத்தி கொண்டிருந்தார்.  தினசரி மாத்திரையும் எடுத்தார்.  ஹோமியோபதி மருத்துவத்திற்கு மாறினார்.  மூச்சுப்பயிற்சிக்காக யோகா போனார். ஒவ்வாமை தரும் பொருட்களை கண்டறிந்து தவித்துக்கொண்டார்.  இப்பொழுது ஆஸ்துமாவிலிருந்து மீண்டுவிட்டார்.

மருத்துவர் காமராஜ் சொல்வது போல, மனிதர்கள் வெகுகாலம் உடல் உழைப்பில் தான் வாழ்ந்துவந்தோம்.  கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தான், நவீன வசதிகள் மனிதனின் வாழ்வை உடல் உழைப்பிலிருந்து விடுதலை செய்திருக்கின்றன.

பெருநகர வாழ்க்கை பதட்டங்களும், தாறுமாறான உணவு பழக்கமும், உடற்பயிற்சியின்மையும் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடுகின்றன.  கவனமாய் இருந்து, ஆரோக்கியத்தையும், பர்சையும் பாதுகாத்துகொள்ள வேண்டும்!

1 comment:

Swami said...

நல்ல பதிவு. உங்கள் கருத்து நூறு சதம் உண்மை. அலோபதி நோயாளிகளை நிரந்தர நோய்தன்மையோடு இருக்க செய்கிறது.
நல்ல உணவு, வாழ்க்கை முறை, மன நலம் மூன்றுமே நோய்களை விரட்டி அடித்து விடும்.சிறிய நோய்களுக்கு கை வைத்தியம் செய்தால் போதும், எல்லாவற்றுக்கும் ஆங்கில மருத்துவரிடம் ஓட வேண்டிய அவசியமில்லை.