Tuesday, August 21, 2012

மனிதர்கள் 16 - சித்ரா

பெண் தேடும் படலத்தில் பாரதி, இராஜீ அவர்களுக்கு பிறகு, நண்பர் சுறுசுறுப்பானார்.  இன்னும் சில நாள்கள் போகட்டுமே என்றேன். வழக்கம் போல என் பேச்சை காதில் வாங்கிகொள்ளவே இல்லை.

மதுரையில் அச்சகம் வைத்து இயக்கும் ஒரு நண்பர் சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஒரு தகவல் மையம் நடத்தி வந்தார். அவரை அணுகியதில், சித்ரா என்ற திருச்சி பெண் விவரங்கள் இருக்கிறது. பார்க்கிறீர்களா எனக் கேட்டார்.  புகைப்படத்தையும், பயோ டேட்டாவையும் வாங்கிகொண்டோம்.

டிகிரி படித்திருந்தார். அப்பா இறந்துவிட்டார். போட்டோவில் முகம் தெளிவாய் இருந்தது. அந்த பாஸ்போர்ட் புகைப்படத்தில் சித்ரா மெலிதாய் என்னைப் பார்த்து சிரித்தார். முதல் அளவில் தேறியதும், தொடர்பு கொண்டு பேசினோம்.

அந்த பெண்ணுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்திருப்பதாகவும், பேச்சு இப்போதைக்கு இல்லை. சில நாள்கள் கழித்து பேச்சு வந்துவிடும் என மருத்துவர் சொல்லியிருக்கிறார்.  வந்து பாருங்கள் என பெண்ணின் அம்மா பேசினார். என்ன பிரச்சனை? என்றதற்கு 'தைராய்டு' என்றார்கள். 

அண்ணி ஒருவர் ஹோமியோபதி மருத்துவர். அவரிடம் கருத்து கேட்டதற்கு கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் என்றார்.

'எனக்கு தெரிந்து மூவருக்கு திருமண்த்திற்கு முன்பு வந்த தைராய்டு பிரச்சனையால், குழந்தை இல்லை' என்று ஒரு மருத்துவ குண்டை தூக்கிப்போட்டார் அண்ணன்.

அறுவை சிகிச்சை செய்த விவரத்தை கொஞ்சம் அனுப்பிவையுங்கள். மருத்துவரிடம் கருத்துக்கேட்டுவிட்டு பெண் பார்க்க வருகிறோம் என்றோம். பெண்ணின் அம்மாவோ நீங்கள் பார்க்க வரும்பொழுது, நான் கையோடு தருகிறேன் என்றார். நேரே வர வைப்பதில் அவருடைய முனைப்பு தெரிந்தது.

நண்பரிடம் சொல்லி வேண்டாமே என்றேன்.  அவர் கோபித்துக்கொண்டார்.  சரி! குழந்தை இல்லையென்றால் என்ன! பெண் பார்க்க திருச்சி கிளம்பினோம். நண்பர், நான், இன்னொரு நண்பரின் துணைவியார் அந்த சமயத்தில் திருச்சியில் ஒரு தேர்வு எழுத வந்திருந்தார். அவரை அங்கு போய் பிக்கப் பண்ணிகொண்டோம்.

இந்த மெயின் கதையில், சில கிளைக்கதைகளும் இருந்தன. 

பெண்ணின் அப்பா ஒரு அரசு அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர்.  அவர் பணியில் இருந்த பொழுது, இதய வலியால் இறந்து போனார். பணியில் இருக்கும் பொழுது, இறந்து போனதால், அவருடைய துணைவியாருக்கு அந்த அலுவலகத்திலேயே வேலை தந்திருந்தார்கள்.

அதற்கு பிறகு, அங்கு வேலை செய்த இன்னொரு ஓட்டுநரோடு பழக்கம் ஏற்பட்டு அவரோடு வாழ்ந்துகொண்டிருந்தார்.  அவர் ஏற்கனவே திருமணமானவர். அதனால் சட்ட ரீதியாக இரண்டாவது திருமணம் செய்யமுடியாது.  அப்படியே திருமணம் ஆகாமல் அவர் இருந்திருந்து, திருமணம் முடித்தால், கணவனை இழந்தவர் என்ற அடிப்படையில் தான் இவருக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது. அதனால் அந்த தகுதியை இழந்துவிடுவார்.  நான் தெளிவாக சொல்கிறேனா?!

அங்கு நாங்கள் போயிருந்த பொழுது, பெண்ணின் அம்மாவின் இரண்டாவது கணவர் அங்கு இருந்தார்.  உடன் அவருடைய முதல் மனைவியும் அங்கு இருந்தார்.

அந்த அம்மாவின் வாழ்க்கையின் சிக்கலை யதார்த்தமாய் புரிந்துகொள்ளமுடிந்தது. 

எந்தவித சிக்கலும் இல்லாத குடும்பங்கள் சாதி, மறுப்பு திருமணத்திற்கு முன்வருவது என்பது எண்ணிக்கையில் குறைவு தான். நம்முடைய சமூக நிலைமை அப்படி!

வாழ்க்கையில் முதன் முதலாக பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டோம். பெண் தான் எடுத்து வந்தார். நான் முகத்தையே பார்க்கவில்லை. கூச்சமாய் இருந்தது. :)

நண்பரும், நண்பரின் மனைவியும் உள்ளே போய் பேச்சுக்கொடுத்தார்கள். அந்த பெண்ணால் சுத்தமாக பேசவே முடியவில்லை.  மருத்துவ அறிக்கையை வாங்கிகொண்டு கிளம்பினோம்.

"அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மதுரையில் தான் செய்தோம். அதனால் அந்த மருத்துவரையே போய் பாருங்கள்" என அழுத்தி அழுத்தி சொன்னார். அடுத்த நாள் நண்பரும், நானும் போனோம்.  அந்த பெண்ணுக்கு இன்னும் சில நாள்களில் பேச்சு வந்துவிடும்.  எல்லாமே பாசிட்டாவாக பேசினார். எங்களுக்கு என்ன்மோ, பெண்ணின் அம்மா சொல்லி வைத்து பேசியது போல தெரிந்தது. நன்றி கூறி விடைபெற்றோம்.

அந்த சமயத்தில், என்னிடம் யாராவது ஐஸ் வைத்து பேசினாலே ஜலதோசம் பிடித்தது அதனால், ஒரு பிரபல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்.  அவரிடம் விவரம் சொல்லி, அறிக்கையை தந்தேன். அமைதியாக படித்துவிட்டு, வேறு வரன் பாருங்கள் என முடித்துக்கொண்டார்.  விவரம் ஏதும் சொல்லவில்லை.

நண்பர் ஒருவர் ஸ்கேன் சென்டரில் வேலை செய்கிறார். அவரிடம் கொடுத்து அங்கு இருக்கும் மருத்துவரிடம் விவரம் கேட்டதற்கு, "அந்த பெண்ணிற்கு புற்றுநோய். முதல் இடத்தை ( ) கண்டுபிடிக்க முடியாது. இரண்டாவது இடமான தொண்டையில் கண்டறியப்பட்டு அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள்.  இன்னும் எத்தனை மாதங்களுக்கு தாங்கும் என சொல்லமுடியாது" என்றார். கடைசில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படத்தின் இறுதிக்காட்சி போல படு மோசமாக அமைந்துவிட்டதே என நொந்தே போனேன்.

அந்த பெண்ணின் நிலை புரிந்து நிறைய வருத்தமாகிவிட்டது. அந்த அம்மாவிற்கு தன் மகளுக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை முடித்து பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பை புரிந்துகொள்ளமுடிந்தது.

அந்த மருத்துவ அறிக்கையோடு 'மன்னியுங்கள்' என சுருக்கமாய் கடிதம் எழுதி அனுப்பினோம். சித்ரா இப்பொழுது எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. :(

No comments: