Thursday, March 27, 2014

பறவைகளின் தாக்குதல்! (The Birds)

மனிதன்
சிறகு முளைத்தபின்
பூமியைக் கலைத்து விட்டு
வீட்டைக் கட்டிக் கொள்கிறான்.
பறவைகளோ
கூட்டைக் கலைத்து விட்டு
பூமியைக் கட்டிக் கொள்கின்றன.

- சேவியர்


ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற படங்களான வெர்டிகோ (Vertigo), சைக்கோ (Psycho) படங்களை சமீபத்தில் பார்த்தேன். இதன் தொடர்ச்சியாக நேற்று பறவைகள் (The Birds) பார்த்தேன்.

கதை எனப் பார்த்தால், நாலே வரிகளில் சொல்லிவிடலாம்.  நாயகனும் நாயகியும் பறவைகள் விற்கும் ஒரு கடையில் எதைச்சையாய் சந்திக்கிறார்கள்.  அந்த சந்திப்பில் நாயகனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அவன் தங்கைக்கு பிடிக்குமென்று ஒரு ஜோடி காதல் பறவைகளை வாங்கிக்கொண்டு அவனைத் தேடி அவன் வசிக்கும் சிற்றூருக்கு கிளம்பி போகிறாள்.  நாயகனை சந்திக்கிறாள். அங்கு கூட்டம் கூட்டமாய் பறவைகள் வசிக்கின்றன.  ஒரு கட்டத்தில் திடீர் திடீரென மனிதர்களை தாக்க ஆரம்பிக்கின்றன.  சிலரை கொல்லவும் செய்கின்றன. இறுதியில் காயம்பட்ட நாயகியோடு நாயகனின் குடும்பம் நகரத்திற்கு இடம் பெயர்வதோடு படம் முடிவடைகிறது.

****

கிராபிக்ஸ் உலகத்தில் இப்பொழுது வசிக்கிறோம்.  ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே (1963ல்) மிகவும் குறைவான தொழில் நுட்ப வசதியில் ஹிட்ச்காக் கலக்கியிருக்கிறார்.  எழுத்து போடும் பொழுதே பறவைகளை வைத்து பயமுறுத்த ஆரம்பித்தவர், படம் பார்த்து முடிக்கும் பொழுதோ,  இனி கூட்டமாக பறவைகளை பார்க்கும் பொழுதோ, பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும் பொழுதோ  ஒருவித பயம் வரும் அளவிற்கு உருவாக்கிவிட்டார். :)

பறவைகள் ஏன் மனிதர்களை தாக்குகின்றன என்பதை படத்தில் எங்குமே ஹிட்ச்காக் விளக்கமே தரவில்லை. எழுத்தாளர் எழுதிய கதையில் கூட கதையாசிரியர் சில ஊகங்களை தெரிவித்திருக்கிறார்.  அதையெல்லாம் ஹிட்ச்காக் வெட்டிவிட்டார்.  தான் ஒரு ஆய்வாளன் அல்ல!  படம் எடுத்து பயமுறுத்துபவன் அவ்வளவு தான்!  என்று நினைத்திருப்பார் போல! ஆனால், படம் பார்த்து பயந்தவர்கள் அவர் வாழ்நாளில் பலமுறை ஏன் பறவைகள் மனிதர்களை தாக்கியது என கேள்விகளால் துளைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இருப்பதிலேயே மனிதன் தான் ஆபத்தானவன்.  இயற்கைக்கு எதிராக எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு செய்கிறான். ஆனால், பறவைகளை, விலங்குகளை மனிதருக்கு எதிராக நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஹிட்ச்காக் அபிமானிகள் இப்படி சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. J

1 comment:

bandhu said...

நாயகி சில பறவைகளை வாங்கி கூண்டில் எடுத்து அந்த ஊருக்கு வருவார். அதன் பிறகுதான் பறவைகள் மனிதர்களை தாக்க ஆரம்பிக்கும்.. கடைசியில் நாயகி ஊரைவிட்டு அந்த வளர்ப்பு பறவைகளை எடுத்துப் போனவுடன் அமைதி திரும்புவது போல இருந்ததாக ஞாபகம்.. பார்த்து பல வருடங்களாகி விட்டதால் இது தான் நினைவில்.. இல்லையோ?