Monday, March 17, 2014

தெகிடி - ஒரு பார்வை

இந்தியில் கஹானி, தமிழில் மெளனகுருவிற்கு பிறகு ஒரு நல்ல திரில்லர்.  கதை? துப்பறிவதற்கு படித்துவிட்டு, புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்.  நான்கு பேரைப் பற்றிய தகவல்களை சேகரித்து தந்து, ஐந்தாவது நபரிடம் காதலில் விழுகிறார்.

தகவல் சேகரித்து தரப்பட்ட நால்வரும் ஒவ்வொருவராக அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து தனது காதலி தான் என பதட்டமாகிறார். கொலைகளுக்கான பின்னணி என்ன? காதலியை காப்பாற்றினாரா? என்பது மிச்சப்படம்.

நாலுபாடல்கள், நான்கு சண்டைகள் என இழுக்காமல், இரண்டு மணி நேரத்தில் படத்தை நறுக்கென எடுத்திருப்பது அழகு.  சுபாவின் டிடெக்டிவ் நரேன், பி.கே.பியின் பரத் போல ஒரு நாயகன். நாயகனிடம் பரத்திடம் இருக்கும் கலகலப்பு இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.  ஜெயப்பிரகாஷ், ஜனனி என இருவரைத் தவிர மற்ற்வர்கள் எல்லோரும் புதுமுகங்கள். இயல்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநருக்கு முதல்படமா என ஆச்சர்யப்படவைக்கிறார். படம் நேர்த்தியாக இருக்கிறது.  பீட்சா, அட்டக்கத்தி என சினிமா மொழி தெரிந்த நபர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் குமார் இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். இந்த புதுமுக இயக்குநர்கள் இப்பொழுது காதல், திரில்லர் எடுத்தாலும் பிறகு சமூக அக்கறை படங்களை எடுப்பார்கள் என ஒரு நம்பிக்கை தான்!

வசனங்கள், காட்சிகளோடு பாடல்கள், தேவையான அளவு பின்னணி இசை, ஒளிப்பதிவு என படத்தின் வேகத்திற்கு உதவி செய்கின்றன.  படத்தின் கதையை நகர்த்தியதில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆங்கிலப்படத்தைப் போல படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கு ’பிள்ளையார் சுழி’ ஒன்றைப் போடுகிறார்கள்.  வரட்டும் பார்க்கலாம். :)

படத்தைப் பற்றி அறிந்து பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிவிடுகிறது.  பல திரையரங்குகளில் படத்தை தூக்கிவிடுகிறார்கள்.  நேற்று கூட மாலை காட்சி என தேடும் பொழுது, உதயத்திலும், சங்கத்திலும் மட்டுமே போட்டிருந்தார்கள்.  ஒரு புதுப்படத்தின் வாழ்க்கை ஒரு வாரம் என்பது சிரமம் தான். புதிய ஆட்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள்.

1 comment:

karai ks vijayan said...

தெகிடி-ன்னு ஒரு படமா...??என்ன கண்றாவியோ...எப்பிடியெல்லாம் பேரு வைக்கிறனுங்க...
ஒரு படத்துல என் குழந்தைக்கு காதுல நொழையிறமாதிரி பேரு வையுங்கன்னு கவுண்டமணிகிட்ட ஒரு பொண்ணு கேக்கும் அதுக்கு அந்த ஆளு குச்சின்னு சொல்லுவாரு அதுமாதிரி இருக்கு...