Wednesday, December 17, 2008

பேச்சிலர் சமையல் – அத்தியாயம் 3


பேச்சிலர் சமையல் பற்றி நாம் ஏற்கனவே இரண்டு அத்தியாயங்களில் பேசியிருக்கிறோம்.

“சமையல்” – அதன் தன்மை, முறை, அதில் உள்ள சிக்கல்கள் பற்றி பேசுவது இடையிடையே வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது சமையல் – வகைகளை ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

இந்த பதிவில் – ‘ரெடிமேடு சாம்பார்’

மெட்ரோ சிட்டி பர பர வாழ்வில் பல நாள்கள் எங்களுக்கு உதவியது இந்த சாம்பார் தான்.

இந்த சாம்பார் இட்லி அல்லது தோசைக்கு தான். சாப்பாட்டுக்கு உதவாது. (சாப்பாட்டுக்கு ருசி குறைவாக இருக்கும்).

நம் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் அரைத்த மாவு எளிதாக கிடைக்கும். நல்ல பிராண்டாய் தேடிப்பிடித்து வாங்குவது நம் திறன் சார்ந்தது. எங்கள் பகுதியில் 5 இடங்களில் மாவு கிடைக்கும். ஒவ்வொரு இடமாய் வாங்கி பயன்படுத்தி, சோதித்து, ஐந்தாவது இடத்தில் கிடைத்த மாவு நன்றாக இருந்து இப்பொழுது தொடர்ச்சியாக வாங்குகிறோம்.

தேவையான பொருட்கள் : பச்சை பருப்பு அல்லது துவரம் பருப்பு அரை டம்ளர். (டம்ளரின் கொள்ளளவு - 125 மிலி). 1 தக்காளி,சாம்பார் (சின்ன) வெங்காயம் 10 துண்டுகள். இரண்டு காய்ஞ்ச மிளகாய், சிறிதளவு - மஞ்சள் பொடி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை, 5 மிலி எண்ணெய். (மூன்று பேருக்கு தேவையானதை குறிப்பிட்டிருக்கிறேன்)

செய்முறை :

செய்முறையில் எல்லா வகைகளுக்கும் சில சமையல் பாத்திரங்கள் அடிக்கடி வரும். அதையெல்லாம் வாங்கி நிரந்தரமாய் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

5 லி, 10 லி. குக்கர் ஒன்று. தோசைக்கல்

முதலில் (5லி.) குக்கரில் பருப்பை போட்டு இரண்டு முறை தண்ணீரில் கழுவி.. பிறகு, பருப்பின் அளவை விட நான்கு மடங்கு நல்ல தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 5 வெங்காய துண்டுகளை (உறித்து) சின்னதாய் வெட்டியும் போடலாம், முழுதாகவும் போடலாம். 1 தக்காளியை 4 துண்டுகளாக வெட்டி போட்டு கொள்ளவும். சிறிதளவு மஞ்சள் பொடி, தேவையான உப்பு பொட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும். பச்சை பருப்பு என்றால் 8 நிமிடம். துவரம் பருப்பு என்றால் 11 நிமிடம் வேகவிட வேண்டும்.

பிறகு, ஒரு தாளிப்பதற்கு ஒரு பாத்திரம் எடுத்து, அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சுட்டதும், சிறிதளவு கடுகு உளுந்து, கருவேப்பிலை போட வேண்டும். சட சட வெடிக்கும். அப்பொழுது காய்ஞ்ச மிளகாயை போட்டு, வெட்டி வைத்துள்ள மீதி 5 வெங்காய துண்டுகளை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு, குக்கரில் உள்ளதை இந்த பாத்திரத்தில் ஊற்றினால்... ரெடிமேடு சாம்பார் ரெடி.

பின்குறிப்பு : இதில் எங்கேனும் தவறு நடக்கும் பட்சத்தில், அது சாம்பாரில் பிரதிபலிக்கும்.

எங்களுடைய அனுபவத்தில்... இந்த சாம்பாரில்..

ஒருமுறை, குக்கரில் எல்லாம் போட்டுவிட்டு அடுப்பில் வைத்து விட்டு வந்த பின்பு 10 நிமிடம், 15 நிமிடம் ஆகிவிட்டது. விசில் வந்த பாடில்லை. போய் பார்த்தால்... அடுப்பை பற்ற வைக்கவேயில்லை.

No comments: