Tuesday, December 30, 2008

ஆரம்பமே கோளாறாய் இருக்கிறது – பகுஜன் சமாஜ் கட்சி!



உத்திரபிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் குமாரி மாயாவதி அம்மையாருக்கு, சின்ன சின்ன ஆசையில் ஒரு ஆசை நாட்டின் பிரதமராவது. தமிழகத்தில் ஏற்கனவே ஒரு செல்வி அம்மையார் இருப்பதால், இவரை குமாரி என அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்

ஒரு மாநிலத்திலேயே இருந்தால், பிரதமராக முடியாது என்று நினைத்தவர் பல மாநிலங்களுக்கும் தன் கட்சியை பரவ செய்வதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்.

பிரதம வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் உத்திரபிரதேசத்தின் பங்கு அதிகம். ஏனென்றால்...இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம். மக்கள் தொகை அடிப்படையில் அங்கு தான் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம். மக்களைவையில் 85 எம்பிக்கள். ராஜ்யசபாவில் 31 எம்பிக்கள். (தமிழ்நாடு சார்பாக - மக்களவையில் 39. ராஜ்யசபாவில் 18 எம்பிக்கள்).

பிரதமர்களின் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இந்தியாவை ஆண்ட பல பிரதமர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இதன் அடிப்படையில் தான்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சகோதரத்துவ மாநாட்டை சென்னையில் நடத்தி முடித்தார். சிதறிக்கிடக்கும் தலித் அமைப்புகளை ஒன்று சேர்த்து வலுவான கட்சியாக மாற்ற போகிறார்களாம்.

இந்த மாநாட்டுக்கு பிறகு, இரண்டு நிகழ்வுகள் பகுஜன் சமாஜ் கட்சியைப் பற்றி அறிமுகத்தை அறிய முடிகிறது..

ஒரு நிகழ்வு – ஒரு பொறியாளர் கொலை. மாயாவதி அவர்களுடைய பிறந்த நாள் ஜனவரி 15யாம். இதற்காக அவருடைய கட்சி 1000 கோடி என இலக்கு வைத்து வசூலை தொடங்கியிருக்கிறார்களாம்.

ப.ஜ. கட்சியின் எம்.எல்.ஏ. சேகர் திவாரியினுடைய ஆட்கள் வசூல் வேட்டையில்... அவுலியா மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் குப்தாவின் வீடு புகுந்து, அவருடைய மனைவியை குளியறையில் தள்ளி அடைத்து, கேட்ட பணத்தை கொடுக்கதாததால் அவரை அடித்தே கொன்றுவிட்டார்கள்.

உத்திர பிரதேச அரசும் இந்த கொலையில் சேகர் திவாரிக்கு சம்பந்தம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த எம்.எல்.ஏ. சிறையில் இருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்வு உ.பியை கலக்கி கொண்டிருக்கிறது. மாயாவதியை ராஜினாமா செய்ய சொல்லி, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு செய்தி. இவர் தனது கட்சியை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல ஆசைப்பட்டது எல்லாம் சரி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 800 கோடிக்கு திட்டம் போட்டிருக்கிறார்களாம். அந்த செய்தியை தமிழ்நாட்டில் எல்லா தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தின் கீழே பகுஜன் கட்சி பெயர் இருக்கும் எனப் பார்த்தால்... உத்திரபிரதேசத்தின் அரசு விளம்பரமாக இருக்கிறது.

அடப்பாவிகளா! தமிழ்நாட்டிலும் பார்க்கிறோம். அடிக்கல் நாட்டப்பட்டதோடு பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். 800 கோடி திட்டம் 80 கோடி அளவிற்காவது நிறைவேற்றப்படும் என்பது ஒரு கேள்விக்குறி. இவர்கள் போடும் திட்டத்தின் நிலை இப்படியிருக்க... தன் கட்சியை வளர்க்க மக்கள் வரிப்பணத்தை இலட்சகணக்கில் வாரி இறைப்பது எந்த விதத்தில் சரி?

ஏற்கனவே இங்குள்ள கட்சிகள் எல்லாம் மோசமாக இருக்க, உத்திரபிரதேசத்தில் இறக்குமதியாகும் கட்சியும் இன்னும்
மோசமாக இருந்தால்? சிரமம். நாட்டையும், நாட்டு மக்களையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது.

No comments: