Friday, November 19, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - ஜெயிலும், செல்போன்களும்!


சிறுவயதிலிருந்தே...சிறை பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு. சிறையைப் பற்றி திரைப்படங்களில் பிலிம் காட்டுவது, சண்டையைப் போல, டான்ஸை போல டுபாக்கர் தான் என நினைத்திருக்கிறேன். எப்படியாவது உள்ளே போய் பார்க்கவேண்டும் என பலநாள் ஆசைப்பட்டிருக்கிறேன்.

என் சிறுவயதில்... அப்பா, சொந்தங்கள் கலந்து கொண்ட ஒரு விசஷேத்தில்.. சொந்தங்களுக்குள் உற்சாகப் பானத்தில் (!) பேச்சில் தொடங்கி, கைகலப்பாகிவிட்டது. அப்பா விலக்கிவிடும் முயற்சியில் இருந்தபொழுது, காவல்துறை அப்பாவையும் அள்ளிக்கொண்டு போய், வழக்கில் ஒரு அக்கியுஸ்டாகிவிட்டது. இரண்டு நாள் சிறையில் இருந்தார். சிறுவயது என்பதால்அப்பாவை பார்க்க என்னை அழைத்துப்போகவில்லை. இரண்டு நாளில் ஜாமீனில் வந்துவிட்டார். பிறகு, மூன்று, நாலு ஆண்டுகள் மாதந்தோறும் வாய்தா, வாய்தா என அலைந்து திரிந்தார். இது ஒரு சோகம்.

அப்பாவுக்கு இன்னொரு சோகம் . ஒவ்வொரு வாய்தாவின் பொழுதும், "குடிகாரங்க குடிச்சுப்புட்டு, சண்டை போட்டா...எல்லோரும் தான் இருந்தாங்க! நீங்க மட்டும் ஏன் விலக்கிவிட்டீங்க?" என அம்மா ஒரு ரவுண்டு திட்டி முடிப்பார். பிறகு, வேறு எந்த நிகழ்வும் நடக்காததால், சிறை பார்க்கும் அனுபவம் நிகழவே இல்லை.

****

கடந்த வாரம் அறை நண்பர் "ஒரு அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டு, என் நண்பர் புழல் சிறையில் இருக்கிறார். நீங்கள் உடன் வருகிறீர்களா?" என்றார். வாய்ப்பு கிடைக்கும் பொழுது, நிச்சயம் பார்த்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவன் உடனே கிளம்பினேன்.

நண்பருக்காக, ஒரு பிரெட் பாக்கெட், கொஞ்சம் வாழைப்பழங்கள், பிஸ்கெட், ஒரு பாக்கெட் சிகரெட் என வாங்கிக்கொண்டோம். புழல் சிறையின் வாசலை அடைந்ததும், அங்கு இரு போலீசார் பொதுமக்கள் வாங்கி வருகிற எல்லாவற்றையும் வாங்கி பரிசோதித்து கொண்டு இருந்தனர். அதில் ஒருவர், "செல்போன் ஏதும் கொண்டுவரக்கூடாது. கொண்டு வந்திருப்பவர்கள் எதிரே பெட்டிக்கடையில் வாங்கி கொள்வார்கள். போய் கொடுத்துவிட்டு வாருங்கள்" என்றார்கள்.

போய் கொடுத்தால், ஒரு போனுக்கு வாடகையாக ரூ. 10- என வசூலித்தனர். இதில் எவ்வளவு காவல்துறைக்கு என்று தெரியவில்லை என நண்பர் கமெண்ட் அடித்தார். பிறகு, மீண்டும் போய் வரிசையில் நின்றோம். எங்களிடம் வாங்கி...பிரிட்டனியா பிஸ்கெட்டை கீறி, உள்ளே பார்த்தனர். சிகரெட் பாக்கெட்டை உடைத்து பார்த்தனர். அந்த பிரைட் பாக்கெட்டை பிதுக்கி, பிதுக்கி... சாப்பிடமுடியாத அளவுக்கு, என்ன பாடுபடுத்த முடியுமோ, அவ்வளவும் செய்தனர். உடல் முழுக்க தடவிப்பார்த்தனர். திருப்தி அடைந்ததும், அனுப்பி வைத்தனர். "ஏன் சார் இவ்வளவு செக்கப்?" என்றதற்கு, "செல்போன், சிம் கொண்டு போய்விடக்கூடாது" என்றார்கள்.

வரிசையில் நின்று, விண்ணப்பம் பூர்த்தி செய்தோம். 10 விண்ணப்பங்கள் சேர்ந்தவுடன், ஒரு சிவப்பு டவுசர் போட்ட நபர் வந்து வாங்கி, சிறைக்குள்ளே கொண்டு போனார்.15 நிமிடம் கழித்து வந்து, ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொடுத்த விண்ணப்பங்களை கொண்டு வந்து, பெயர்களை சத்தம் போட்டு தப்பு, தப்பாக படித்தார். (படிப்பறிவு கம்மி. எழுதியவரும் சரியாக எழுதவில்லை). சம்பந்தபட்டவர்கள் வாங்கி கொண்டு போனார்கள். ஒரு வயதான் அம்மா " நான் கொடுத்து ஒன்றரை மணி நேரம் ஆச்சு! இன்னும் வரவில்லை" என்றார்! பகீரென்றது.

ஒரு மணி நேரம் கழித்து, எங்கள் விண்ணப்பம் வந்தது.( டவுசர் போட்ட நபர் கொண்டு போய், கொண்டு வந்து கொடுப்பது அதர பழசான முறை) வாங்கி கொண்டு போய் பார்த்தோம். அங்கு வாசலில் ஒரு அம்மா, மீண்டும் ஒரு முறை பரிசோதித்தார். ஒரு நோட்டில் கையெழுத்திட சொன்னார். போட்டோம்.

அந்த அறைக்குள்ளே நுழைந்தோம். அது நீண்ட பெரிய அறை. இரும்பு வேலியால் தடுத்திருந்தார்கள். அந்த பக்கம் 50 பேர். இந்த பக்கம் 75 பேர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். சிலருக்கு கண்ணீர் பெருகியது. அந்த சத்தத்திலும் சிலர் நிறைய நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இரு வேலிக்கும் இடையில் 3 அடி தூரம் நிச்சயம் இருக்கும். பிறகு நண்பரை பார்த்து, சத்தமாக நலம் விசாரித்தோம். பிறகு, வாங்கி வந்ததை, அந்த வேலியின் கடைசியில், மூன்று இடைவெளியில் சேர் போட்டு அமர்ந்திருந்த, ஒரு அதிகாரியிடம் தந்தோம். நாம் எவ்வளவு தருகிறோமோ, அதில் பாதியை மட்டும், சிறைவாசியிடம் தந்தார். மீதி, அவரே வைத்துக்கொண்டார். நம்மிடம் பாதி பிடுங்கியதை, இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலை வைத்து, சிறைவாசிகளிடமே விற்பார்களாம். எப்பேர்ப்பட்ட கொள்ளை.

...நிற்க. இதிலிருந்து, என்ன நொந்த கருத்து சொல்ல வருகிறாய் என்கிறீர்களா?

கடந்த நவம், 12 தேதியில், ஞானசேகரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ, "தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள், கஞ்சா போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைகளில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவை எப்படி நுழைந்தன? இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்றார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்:

சிறைகளுக்குள் கஞ்சா போன்ற பொருள்கள் கடத்தப்படுவது வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்து நடந்து வருகிறது. சிறைக்குள் பார்வையாளர்கள் வரும் போது அவர்கள் கொண்டு வரும் பொருள்களுக்குள் மறைத்து வைத்து கொடுக்கப்படுகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இப்போது வரையிலான காலத்தில் மொத்தம் தமிழகத்திலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து 261 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 93 நபர்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக இருந்த காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செல்போன்கள் இருப்பதைக் கண்டறியும் கருவிகள் சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

போன்கள், கஞ்சா வைத்திருப்போருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்படுகிறது. இன்னும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆராய்ந்து வருகிறது என்றார் அமைச்சர் துரைமுருகன்.

****

சிறை பார்த்த அனுபவத்தில்... பொதுமக்கள் எல்லாம் செல்போனை எல்லாம், கிரிமினல் போலீசை தாண்டி... உள்ளே கொண்டு செல்ல வாய்ப்பே இல்லை.

இதுவரை சிறையை பலமுறை அதிகாரிகள் பரிசோதித்ததில்...பல ஆபாச டிவிடிகள், பென் டிரைவர்கள், டிவிடி பிளெயர்கள், கஞ்சா, அபின், குட்கா என பல பொருட்கள் சிக்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு, நிறைய புகார்கள் வருகிறதே என லஞ்ச ஒழிப்பு துறை சோதிக்க சென்றால், அரை மணி நேரம் வெளியே காக்க வைத்து, பிறகு, உள்ளே அனுப்பியிருக்கிறார்கள். பலே திருடன்கள்!

இப்படி எல்லா திருட்டு வேலைகளும் காவல்துறை செய்துகொண்டு, பொதுமக்கள் மீது பழிபோடுவது இருக்கிறதே! இது அநியாயம்.

7 comments:

Anonymous said...

அப்ப சினிமாவில் காட்டும் சிறை சாலைகளெல்லாம் பொய்யா?
டுபாக்குர் பசங்க.

Anonymous said...

அப்ப சினிமாவில் காட்டும் சிறை சாலைகளெல்லாம் பொய்யா?
டுபாக்குர் பசங்க.

Anonymous said...

கவலைப்பாடாதீஙக நொந்தகுமார் சமுக அக்கறையோடு சில பதிவுகள் போடுங்க சிக்கீரமே சிறைக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலாம்

Anonymous said...

கவலைப்பாடாதீஙக நொந்தகுமார் சமுக அக்கறையோடு சில பதிவுகள் போடுங்க சிக்கீரமே சிறைக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலாம்

பயணமும் எண்ணங்களும் said...

அடுத்தமுறை உங்கள உள்ளே விடுவாங்களா தெரியலையே இப்படி உண்மைய சொன்னா?.

ராஜ நடராஜன் said...

சிறைகளில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவதில் தவறில்லை என்பது எனது கருத்து.இவர்களுக்கான குடும்பத்தவர்களுடனான கலந்துரையாடல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தினங்களில் சிறைக்காவலர்கள் முன்பு பேச அனுமதிக்கலாம்.குறைந்தபட்சம் அரதப்பழசான கம்பிபோன்களாவது பேசுவதற்கு அவசியம்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் என்று மேலை நாடுகள்,மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டப்படுத்துவதற்கு இவையெல்லாம் கூட காரணங்கள்.

நொந்தகுமாரன் said...

கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றி.

மொக்கைகளை, கும்மிகளை கண்டு கோபப்பட்டு பதிவுலகிற்கு வந்தவன். ஆகையால், ஒவ்வொரு பதிவும் சமூக அக்கறையோடு தான் வரும்.

நடராஜன்,
சிறைவாசிகள் அதிகாரிகள் முன்னிலையில் சிறையில் பேசலாம் என்பதை வரவேற்கிறேன். இப்பொழுது, அரசியல் செல்வாக்கிலும், பண செல்வாக்கிலும் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் நிதர்சனம். இதில் பேசாமல் பாதிக்கப்படுவது, ஏழைகளும், முற்போக்குவாதிகளும் தான்.