Tuesday, May 31, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - தேர்வும், 'பிட்'டும்


சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் எழுதி, பார்டரில் மதிப்பெண்கள் எடுக்க, வடை போச்சு! படிக்காமல், தெரிந்ததை எழுதுவதால் தான் இப்படி! அடுத்த முறை படித்துவிட்டு தான் எழுதினால், தேறிவிடலாம் என ஒவ்வொருமுறையும் நினைக்கிறேன். பிரசவ வைராக்கியம் போல ஆகிவிடுகிறது.

இன்று தேர்வு. 10 மணிக்கு துவங்கும் தேர்வுக்கு,பதட்டம் இல்லாம பரிட்சை எழுதலாம் என்ற எண்ணத்தில், 8.45க்கே கிளம்பிவிட்டேன். தேர்வு மையத்திற்கு, சைக்கிளில் போய் சேர அரை மணி நேரம் ஆகும். போகும் பொழுது, நினைவுக்கு வந்தது. (ஒன்றுவிட்ட) சித்தப்பா தன் பையனுக்கு வேலை கேட்டிருந்தார். நாளைக் காலையில் வந்து சந்திக்க சொல்லி, நண்பன் சொன்னதை சொல்லிவிட்டு போய்விடலாம் என‌ சித்தப்பா வீட்டுக்கு வண்டியை ஓடவிட்டேன். அங்கு தான் சோதனை எனக்காக காத்திருந்தது.

வீட்டில் சின்னம்மாவும் தம்பியும் இருந்தார்கள். நாளைக் காலையில் போய் பார்க்க வேண்டிய விவரம் சொல்லிவிட்டு, கிளம்பும் பொழுது தம்பி பாசமாய் விசாரித்தான். 'இன்றைக்கு நுழைவுத் தேர்வு. நீங்க எழுதலையா?" என்றான். "ஆமாம்! அங்க தான் போயிட்டிருக்கேன்!" என்றேன்.

"என்னண்ணே! அப்பாவை வந்து பார்த்திருக்குலாம்ல!" என்றான். "ஏண்டா?" என்றேன். "எல்லா கேள்விகளுக்கும் பதில் கையில் வைத்திருக்கிறார்" என்றான். சித்தப்பா சட்டக்கல்லூரியில் கிளார்க்- யாக வேலை செய்கிறார். யாரையாவது பிடித்து, எதையாவது செய்து, பணம் பார்ப்பது அவருக்கு இரண்டாவது வரும்படி வேலை. இப்பொழுது, கேள்வித்தாளை தேர்வுக்கு முன்னாடியே, பார்த்து யாரையோ வைத்து, பதில் தயாரித்து வைத்திருக்கிறார். சட்ட விரோதம். அதை தெரிந்த மாணவர்களிடம் கிடைத்த விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார். உள்ளே தூக்கி போட வேண்டிய ஆள்.

ஏற்கனவே சித்தப்பா இந்த வேலையை செய்து வருவது எனக்கு தெரியும். கடந்த ஆண்டு தேர்வு எழுதி முடித்த பிறகு, வெளியே வரும் பொழுது, சித்தப்பாவை எதைச்சையாக பார்த்தேன். "பரிட்சை எழுதுறேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்ல!" என்றார். "பரவாயில்லை சித்தப்பா" என்று வந்துவிட்டேன். சொந்தகாரர்களிடம் ஒரு பிரச்சனை. உதவி விட்டு, பல காலத்திற்கு சொல்லித்திரிவார்கள்.

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, "வேணாம்டா!" என தம்பியிடம் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

"என்னண்ணே அப்பா யாருக்கெல்லாமோ செய்கிறார். நீங்க பயன்படுத்தாலாமே!" என்றான். பாசவலை.

நானும் நெருக்கடியில் இருந்தேன். இந்தமுறையும் ஊத்திகிச்சு என்றால், அடுத்து எழுதி, மூன்று வருடம் படிப்பது என்பது மிக சிக்கலாகிவிடும். பார்டரில் வந்துவிடுகிறோம். கூடுதலாக நாலு மதிப்பெண் கிடைத்தால் கூட போதும். சீட் கிடைத்துவிடும் என மனதில் ஓடியது.

"சித்தப்பா எங்கேயிருக்கிறார்?" என்றேன். மணி 9.10. அங்கிருந்து 12 கி.மீ. தூரத்திலிருந்தார். அவனையும் ஒரு ஆட்டோவில் அள்ளி போட்டு கொண்டு, சித்தப்பாவிடம் போய் ஒரு 'பிட்' வாங்கி, மீண்டும் திரும்பி, அடித்து, பிடித்து, ஓடி வந்து தேர்வு ஹாலுக்கு வந்து சேர, கிரேஸ் நேரம் முடிய 2 நிமிடம் மட்டும் இருந்தது. வேர்த்து, விறுவிறுத்து தெப்பலாகிவிட்டேன்.

ஆசுவாசப்படுத்தி கொண்டு, கேள்வித்தாளை வாங்கி, எழுத துவங்கினால், பக்கத்திலிருந்தவன் அவன் பேப்பரை பார்க்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். மக்கு போல! எனக்கு அருகில் எழுதுபவர்கள் எல்லாம் எப்பொழுதுமே மக்காக தான் இருந்திருக்கிறார்கள்.

20 கேள்விகள் தாண்டுகிற‌ பொழுது, ஒரு நெருடல். நம்முடைய அறிவை கொண்டு, பதில்களை சரிபார்க்கையில், 'பிட்'டில் சில தவறுகள் இருந்ததை கண்டுபிடித்தேன். ஆகையால், நமக்கு நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு சொந்த பதிலும், தெரியாத கேள்விகளுக்கு 'பிங்கி-பாங்கி' போடுவதற்கு பதிலாக, 'பிட்'டையும் பயன்படுத்துவது என தற்காலிக முடிவு ஒன்றுக்கு வந்தேன்.

கண்காணிப்பாளருக்கு தெரியாமல், பக்கத்திலிருந்தவனுக்கு தெரியாமல், 'பிட்' அடிப்பதற்கு, போதும் போதுமென்றாகிவிட்டது. 'பிட்' அடிப்பதற்கும் 'தனித்திறமை' வேண்டும். (அடி கொய்யாலே!)

தேர்வு முடிவுகள் வந்தன. 44 எடுத்தால் சீட். நான் வாங்கிய மதிப்பெண்கள் 40. எப்பொழுதும் பார்டரில் மதிப்பெண் பெறும் நான் 4 மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருக்கிறேன். எல்லாம் 'பிட்'டின் கைங்கர்யம். சித்தப்பா மீது கோவம், கோவமாக வந்தது. பிறகு, வாங்கி எழுதிய என் மீதும் கோவம் கோவமாய் வந்தது. சித்தப்பாவை தேடிப்போனேன். அவரைச் சுற்றி என்னை மாதிரியே தோற்றுப்போனவர்கள் சோகமாக குழுமியிருந்தார்கள். இந்த முறை ஏதோ தப்பு நடந்துவிட்டது. கடந்த ஆண்டுகளின் சாதனைப் பட்டியலை சொல்லி, சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.

அவர் தந்த 'பிட்' படி 100% எழுதியவர்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என விசாரித்தேன். 32 ஆம்.

*****

நீதி : போங்கப்பா! நானே நொந்து போய் இருக்கிறேன். நீங்களே ஏதாவது பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

பின்குறிப்பு : சித்தப்பா மீது தொடர்ச்சியான புகார்கள் வந்து, நிர்வாகமே எச்சரித்து, மரியாதையாக வி.ஆர்.எஸ். ல் போக சொல்லி, வழிகாட்டியது. அவரும் வெளியே வந்துவிட்டார்.

7 comments:

Anonymous said...

:)

வலிப்போக்கன் said...

பிட்அடித்தாலும் சொந்தமாய் பிட் அடிக்கனும்.நான் பரவாயில்லைபரிட்சையே எழுதுவதில்லை.

Anonymous said...

நல்லது. வினாத்தாள் வாங்கிட்டு சொந்தமா பிட் எழுதி இருக்கணும்.. கரஸ்ல சேர்ந்த பின்னாடி தான் நாங்கெல்லாம் ஆளே இல்லாத ஹால்ல பிட் அடிக்கிறதுக்கே மனசுக்குள்ளயும் வியர்க்கும், வெளிலயும் தான்.. ம்- அதுக்கும் துணிஞ்சு தப்பு செய்ற மனசு வேணும்.. நாங்கெல்லாம் யோக்கியங்க...
-மகேந்திரன்.

rajamelaiyur said...

Ha. . Ha. . Sontha kathai. .
Nontha kathai . .

rajamelaiyur said...

Paavam sir nenga. . .

குமரன் said...

ஆறுதல் சொன்ன அனைத்து நல்ல இதயங்களுக்கும் என் நன்றிகள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

:))

எனக்கு ஒரு சந்தேகம்.

இந்த பசங்க பிட் தயாரிக்கும் நேரத்துல கூட 4 கேள்விய படிக்கலாமே னு..?

பாவம் தான் பிட் வைத்து பிழைப்போர் சங்க சிங்கங்கள்..