
சமீபத்தில் மூவிஸ் நவ்-ல் இந்த படத்தைப் பார்த்தேன். பொதுவாக பேய், சாத்தான் படங்கள் நிறைய வந்தாலும், ஒரு சில படங்கள் தான் கொஞ்சமாவது கவனிக்கத்தக்கவாறு இருக்கின்றன். சிறு வயது என்பதாலும், பேய் பற்றிய பயம் இருந்ததாலும் பேய் படங்கள் பயத்தை தந்தன. இப்பொழுதும் இரண்டையும் கடந்து வந்தபிறகு, பேய் படங்கள் பயத்தை தருவதில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படம் எடுத்த விதத்தில் கொஞ்சூண்டு பயம் தந்தது.
****
கதை எனப் பார்த்தால்...
தனது 5 வயதில் கண்ணை இழக்கிறாள். இப்பொழுது அவளுக்கு வயது 20. வயலினிஸ்டாக வாழ்கிறாள். இப்பொழுது கண்ணை பரிசோதிக்கும் பொழுது, கண்கள் பொருத்தினால், பார்வை வந்துவிடும் என்பதாக தெரிகிறது. தானம் பெறப்பட்ட கண்கள் பொருத்தப்படுகின்றன.
ஆனால் கண்கள் கிடைத்தற்காக அவளால் சந்தோசப்படமுடியவில்லை. அமானுஷ்ய காட்சிகள் கண்ணில் படுகின்றன. வீட்டின் கதவைத் திறந்தால், "என்னுடைய ரிப்போர்ட் கார்டு எங்கே?" என்கிறான் 10 வயது பையன்."எனக்கு தெரியாது!" என்கிறாள். அது உயரமான பிளாட். உடனே சன்னலை திறந்து, அந்த பையன் கீழே குதிக்கிறான். சன்னலில் உள்ள கண்ணாடியை உடைத்து, கீழேப் பார்த்தால், பையனை கீழேக் காணோம். காற்றில் கரைந்துவிட்டான். மீண்டும் அதே பையன். மீண்டும், அதே கேள்வியை கேட்கிறான். இப்படி பல காட்சிகள். மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள்.கண்கள் இல்லாமல் இருந்தால், நன்றாக இருக்கும் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகிறாள்.
நண்பர்களிடம் சொன்னாலும், இவளின் மனப்பிராந்தி என்கிறார்கள். கண்கள் யாரிடமிருந்து பெற்றார்கள் என தெரிந்தால், இந்த தொல்லைகளிலிருந்து விடிவு கிடைக்கும் என நினைக்கிறாள். அமெரிக்காவில் தானம் பெற்றவர்களின் விவரங்களை வாங்குவது சாத்தியமில்லை. அவை ரகசியம்.
தன் நண்பன் ஒருவனின் மூலமாக அந்த தகவலைப் பெறுகிறால். அந்த பெண் யார்? எப்படி இறந்தாள் என மெக்சிகோ தேடிப்போகிறார்கள். அந்த பெண்ணின் அம்மாவை விசாரிக்கிறார்கள். தனது நெருக்கமானவர்கள் எல்லாம், ஒரு தொழிற்சாலை விபத்தில் செத்துப்போகிறார்கள். தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.
இறுதியில் சில களேபரங்கள் நடைபெற்று, அவள் அமானுஷ்ய காட்சிகளிலிருந்து மீண்டாளா என்பது க்ளைமேக்ஸ்.படம் முடிவடைகிறது.
*****
நாயகியாக நடித்திருந்த பெண் நன்றாக நடித்திருக்கிறார். மன உளைச்சலை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த மாதிரி ஹாரர் படங்களுக்கு ஒளிப்பதிவும், இசையும் துணை செய்யவேண்டும். துணை செய்திருக்கிறது. மற்றபடி கண்கள் பொருத்தினால், அமானுஷ்ய காட்சிகள் வருமா? என்றால் நிச்சயமாய் வராது. லாஜிக் இல்லை. சமூக படங்களிலேயே லாஜிக் இல்லாமல் இருக்கும் பொழுது, ஹாரர் படங்களுக்கு லாஜிக் நிச்சயமாய் பொருந்தாது.(!) 2008ல் வெளிவந்தபடம்.
என்னை சிறுவயதில் பயமுறுத்திய படங்கள் மைடியர் லிசாவும், யார்? படங்கள் தான். பார்த்துவிட்டு, ஜூரத்தில் உளறிக்கொட்டிருக்கிறேன். அக்கா சொன்னார்.
பார்த்தே ஆக வேண்டிய படமெல்லாம் இல்லை. மீண்டும் மூவிஸ் நவ்-ல் போடுவார்கள். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
*****