Sunday, August 3, 2014

ஒரு குறும்படமும் சில குறிப்புகளும்!நேற்று மாலை கே.கே நகரில் “Children of Heavan’ படமும், ‘செடி’ என்கிற குறும்படமும் திரையிட்டார்கள். குழந்தைகளின் ரசனையை வளர்ப்பதற்கு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மாலையில் வெளியிடப்போவதாகவும் அறிவித்தார்கள். வாழ்த்துக்கள்!

‘செடி’ யின் கதை! சைக்கிளில் வித்தைக் காட்டும் கழைக்கூத்தாடி. தன் ஏழு வயது மகளை வைத்து நடத்து வித்தைக் காட்டி பிழைப்பு நடத்துகிறார்.  மகளை வைத்து பயிற்சி எடுக்கும் பொழுது, தலையில் அடிபட்டுவிடுகிறது.  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்,  ஸ்கேன் எடுக்க 700 கேட்கிறார்கள்.  கடன் தர யாரும் தயாரில்லை.  தெருவில் வித்தைக் காட்டி பணத்தை தேத்தி கொண்டு வரும் பொழுது, ஒரு மருத்துவர் இரக்கப்பட்டு, பிள்ளைக்கு ஸ்கேன் செய்து, ஏதும் பயப்படும் இல்லை என சொல்லிவிட்டு, பிள்ளையை படிக்க வை! என புத்திமதி சொல்கிறார்.  இவரும் மனம் மாறி, படிக்க வைக்க முடிவெடுக்கிறார்.

படம் முடிவடைந்ததும், அதை இயக்கிய சுப்புராஜ், தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 2007ல் எடுக்கப்பட்ட படம் இது.  கழைக்கூத்தாடி மணி என்பவரிடம் ஒரு வருடம் பயிற்சி செய்து, இயக்குநரே அந்த முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  காதல், திருமணம், மனைவியின் இறப்பு என 53 நிமிடங்கள் படம் எடுத்து, எல்லா குறும்பட போட்டிகளும் அரை மணி நேரத்திற்குள் இருந்தால் தான் வெளியிடுவோம் என சொன்னபடியால், 53 நிமிட படத்தை எடிட் செய்து, 15 நிமிட படமாக மாற்றியிருக்கிறார்கள்.

கூடுதலாக, இந்த கழைக் கூத்தாடிகள் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை.  படித்தாலும் 12ம் வகுப்பு வரை பிரச்சனையில்லை.  அதற்கு பிறகு உதவிகள் பெற, சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் தேவைப்படுகிறது.  ஆனால், தமிழக அரசு இவர்களின் பேச்சில் தெலுங்கு அதிகம் கலந்து இருப்பதால், ஆந்திர அரசை கேளுங்கள் என கைகாட்டிவிட்டதாம்.  ஆந்திர அரசை கேட்டால், உங்கள் பேச்சில் தெலுங்கை விட ‘ஒரிய’ மொழி அதிகமாக இருக்கிறது என சொல்லி, ஒரிசா அரசை போய் பார்க்க சொல்லிவிட்டார்களாம். ஒரிசா அரசிடம் போனால், அவர்கள் குஜராத்தை கைகாட்டியிருக்கிறார்கள்.  இப்படியே இந்நியா முழுவதும் சுத்தில் விட்டிருக்கிறார்கள். யாரும் சான்றிதழ் தந்தபாடில்லை! – என்றார்.

“நீங்கள் எடுத்த கதையை விட, இந்த கதை நன்றாக இருக்கிறதே!  இதையே படமாக எடுத்திருக்காலாமே!” என்றால், ‘இந்த செய்திகள் எல்லாம் படம் எடுத்தபிறகு தெரிந்துகொண்டவை’ என்றார்.

படத்தின் பேசுபொருளைப் பொறுத்தவரை, குழந்தைகளின் படிப்புக்கு பெற்றோர்கள் தடை போடுவதை பேசுகிறது.  வளருகின்ற நாடுகளின் இந்தியாவும் ஒன்று.  பிரதமர் இன்றைக்கு கூட பூடான் அரசுக்கு 6000 கோடி கடன் தர அறிவிப்பு செய்திருக்கிறார்.  ஆனால், பின் தங்கிய நாடுகளில் கல்விக்கு ஒதுக்கும் நிதியை விட, இந்திய அரசு  மிக குறைவாகவே ஒதுக்குகிறது என கல்வியாளர்கள் விமர்சனமாய் தெரிவிக்கின்றனர்.   அரசு கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து கழன்று கொண்டதால் தான் கடந்த இருபது வருடங்களில் புற்றீசல் போல தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகிவிட்டன.

ஆகையால் இந்த காலக்கட்டத்தில் பெற்றோர்களுக்கு புத்திமதி சொல்வதை விட, அரசுக்கு புத்திமதி சொல்வது தான் மிக அவசியமாக இருக்கிறது!
மற்றபடி, வடிவத்தை பொறுத்தவரை, நடிப்பு, ஒலி, ஒளி என எல்லாவற்றிலும் முதல் படத்திற்கே உரிய அமெச்சூர்தனம் நன்றாகவே தெரிகிறது!

தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்க இயக்குநருக்கு வாழ்த்துக்கள்!

1 comment:

ரூபன் said...

வணக்கம்
தெளிவான விளக்கம். பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-