Friday, April 27, 2012

மிதிவண்டி


பெட்ரோல் விற்கும் விலைக்கு காய்கறி வாங்க, ஜிம்முக்கு போக என எல்லாவற்றிக்கும் பைக் எடுத்து போவது கட்டுப்படியாகாமல் போய்கொண்டிருந்தது. 

ஒரு மிதிவண்டி வாங்கிவிட்டால் உடலும், பர்சும் ஆரோக்கியமாக இருக்கும் என தோன்றியது.  வண்டி வாங்கலாம் என யோசித்து, விலை கேட்டால், மூவாயிரம் என்றார்கள்.  பெட்ரோல் விலை கூட்டிக்கொண்டே போனால், இன்னும் அதிகமாக்கிவிடுவார்கள் போல!  நம் பட்ஜெட்டில் மூவாயிரம் என்பது பெரிய தொகை. வாங்கலாம் என யோசித்தே சில மாதங்கள் ஓடிப்போயின!

இதற்கிடையில் நண்பன் ஒருவன் வேலை நிமித்தமாக ஒரு வருடத்திற்கு வெளிநாடு போக, வண்டியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி என்னிடம் தந்துவிட்டு போனான். 6 மாதங்கள் ஓடிவிட்டன.  நான் நினைத்தப்படி வண்டியை தினமும் ஓட்டமுடியவில்லை.  காரணம் எல்லா தேவைக்கான இடங்களும் தூரம் தூரமாய் இருப்பதால், வண்டியில் போய்வருவதற்கான நேரம் பிரச்சனையாயிருந்தது.

****

சிலநாட்கள் ஓட்டாமல் விட்டதால், வண்டியில் கொஞ்சம் தூசி சேர்ந்திருந்தது.  துடைக்க, துடைக்க வண்டி குறித்தான நினைவுகள் மெலெழும்பி வந்தன.

****
சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம்.  ஊரின் கடைசியில் இருக்கும் திரையரங்கில் வாரம் ஒருமுறை 'அஜல் குஜல்' படம் பார்த்து பரபரப்பாய் திரிந்த காலம். இரண்டு மணி நேரம் படம் பார்த்தால், 3 நிமிடம், 4 நிமிடம் பிட்டு ஓட்டுவார்கள். நாம் நிறைய பாவம் (!) செய்திருந்தால், ஒரு சின்ன பிட்டு கூட கிடைக்காது.  நொந்து போய் வரவேண்டியது தான்.

இதிலெல்லாம் மனம் திருப்தி அடையவில்லை.  நண்பர்களிடையே வசூலைப் போட்டு,  பிளேயரை வாடகைக்கு எடுத்து படம் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம்.  எடுத்தோமா பார்த்தோமோ என்றெல்லாம் உடனே பார்க்கமுடியாது.  இரண்டு சாத்வீகமான படங்களை குட்டிப்பசங்களுக்கு, பக்கத்துவீட்டு அம்மாக்களுக்கு படம் காண்பித்துவிட்டு, அவர்கள் அனைவரும் 2 மணிக்கு மேலே அசந்து தூங்க போன சமயத்தில், நாம் விசேஷமான படம் பார்க்கமுடியும்.  அப்படி பார்த்துவிட்டு, நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி!  தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு 3 நாள் சோகமா இருந்தார்.

****

அன்று ஞாயிறு காலை.  டீனேஜ் வயது. எங்கள் தெருவில் குடியிருந்த ஈஸ்வரி, பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.  நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தோம்.  திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள்.  வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம்.  யாரும் இல்லை.  நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை.  நான் தைரியமாய் போனேன்.  தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை.  அதற்குத்தான் அழைத்திருக்கிறாள்.  ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம்.  கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா!  மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!

****

சென்னையில் வாடகைக்கு வண்டி தருவதை பார்க்கமுடியவில்லை.  எங்கள் ஊரில் வண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ.  15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.  அதனால் ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி. அதனால், ஒரே வண்டியில் 5 பேர் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம்.  20 அடி உயரத்தில்  இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து,  15 அடி ஆழம் வரை போய், வெளியே வருவது ஆனந்தம்.  இப்படி 3 மணி நேரமாவது ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை பாடாய்படுத்தினோம்.

****

மிதிவண்டி வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தது! இப்படி மிதிவண்டி பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!  பிறிதொரு சமயம், இன்னும் சொல்கிறேன்!

***

7 comments:

Kumaran said...

நல்ல பகிர்வு..நன்றிங்க.

Anonymous said...

சுவாரசியமான எழுத்து. ஆனால் சட்டென்று முடிந்து விட்டது போல் தோன்றியது. இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

மகேந்திரன்.

Anonymous said...

சுவாரசியமான எழுத்து. ஆனால் சட்டென்று முடிந்து விட்டது போல் தோன்றியது. இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

மகேந்திரன்.

tech news in tamil said...

மீண்டும் மிதிவண்டி நினைப்பு

குமரன் said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட குமரன், மகேந்திரன், தமிழன் அவர்களுக்கு நன்றி.

மகேந்திரன் அவர்களுக்கு,

சென்னை பெருநகர வேகத்தில், நீளமாய் எழுத நினைத்தே பல பதிவுகள் எழுதமுடியாமல் போய்விடுகிறது. அதனால் ஒரு பக்க அளவிற்கு எழுதவதை வழக்கப்படுத்தி கொண்டுள்ளேன். மற்றொருமொரு காரணம் பதிவுலகில் உள்ள மக்களும் ஒரு பக்க அளவிற்கு மேல் எழுதினால் படிப்பார்களா என தயக்கமும் உள்ளது.

Unknown said...

மிதிவண்டியைப் பற்றிய பதிவைப் படித்ததும் எனக்கு 3 சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

1. பள்ளிக் காலத்தில், நான் என் (அண்ணனின்) சைக்கிளை ஜேம்ஸ்பாண்ட் சினிமா ஸ்டில்ஸ் பார்க்க சென்று தொலைத்து பின், வீட்டுக்கு வந்து உடை மாற்றிக் கொண்டு தியேட்டருக்குப் போக பூட்டு உடைக்கப்பட்டு என் சைக்கிள், அருகில் ஒரு ரௌடி (அதிமுக - அப்போது தான் எம்ஜிஆர் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்). விடாமல் (அவனிடம் இருந்த பயத்தை விட வீட்டில் அதிகம்) அவன் பின்னாலேயே சென்று வேறோர் தியேட்டர் மானேஜர் மத்தியஸ்தம் செய்து, மீட்டு வந்தது.

2. கமலின் தேவர் மகன் (அர்ச்சனா) பார்த்துவிட்டு ரஜினியின் பாண்டியன் (கங்கா) கூட்டம் எப்படி? என்று பார்க்க ரயில்வே டிராக் கடக்கும் போது ரயில்வே போலீசில் மாட்டிக் கொண்டு, அங்குள்ள போலீஸ்காரர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, மறுநாள் இன்ஸ்பெக்டர் வரும்முன் நான் வந்து சைக்கிளை எடுத்துச் சென்றுவிட்டேன். மாட்டிக் கொண்ட நண்பன் ரூ. 100 அபராதம் கட்டி மீண்டு வந்தான். இன்ஸ்பெக்டர் ’நான் எப்படி வண்டி எடுத்துக் கொண்டு சென்றேன்?’ என்று கத்தினார் என்றான்.

3. ஈரமான ரோஜாவே படத்திற்கு சைக்கிள் டிக்கெட் கியூவில் போட்டுவிட்டு டீ சாப்பிட்டு வருமுன் என் சைக்கிள் வைத்து வேறு யாரோ டிக்கெட் வாங்கிச் சென்றது.

சைக்கிள் பால்யத்தின் கொடை! இப்போது சிறுவர்கள் உபயோகிக்கும் சைக்கிள்களே பைக்கை விட விலை அதிகமாயிருக்கின்றது!

Unknown said...

மிதிவண்டியைப் பற்றிய பதிவைப் படித்ததும் எனக்கு 3 சம்பவங்கள்
நினைவுக்கு வந்தன.

1. பள்ளிக் காலத்தில், நான் என் (அண்ணனின்) சைக்கிளை ஜேம்ஸ்பாண்ட்
சினிமா ஸ்டில்ஸ் பார்க்க சென்று தொலைத்து பின், வீட்டுக்கு வந்து உடை
மாற்றிக் கொண்டு தியேட்டருக்குப் போக பூட்டு உடைக்கப்பட்டு என் சைக்கிள்,
அருகில் ஒரு ரௌடி (அதிமுக - அப்போது தான் எம்ஜிஆர் தொண்டர்களை
கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்). விடாமல் (அவனிடம் இருந்த
பயத்தை விட வீட்டில் அதிகம்) அவன் பின்னாலேயே சென்று வேறோர்
தியேட்டர் மானேஜர் மத்தியஸ்தம் செய்து, மீட்டு வந்தது.

2. கமலின் தேவர் மகன் (அர்ச்சனா) பார்த்துவிட்டு ரஜினியின் பாண்டியன்
(கங்கா) கூட்டம் எப்படி? என்று பார்க்க ரயில்வே டிராக் (அப்போது
வடகோவையில் மேம்பாலம் இல்லை) கடக்கும் போது ரயில்வே
போலீசில் மாட்டிக் கொண்டு, அங்குள்ள போலீஸ்காரர் ஒருவர் சொன்னதைக்
கேட்டு, மறுநாள் இன்ஸ்பெக்டர் வரும்முன் நான் வந்து சைக்கிளை எடுத்துச்
சென்றுவிட்டேன். மாட்டிக் கொண்ட நண்பன் ரூ. 100 அபராதம் கட்டி மீண்டு
வந்தான். இன்ஸ்பெக்டர் ’நான் எப்படி வண்டி எடுத்துக் கொண்டு சென்றேன்?’
என்று கத்தினார் என்றான்.

3. ஈரமான ரோஜாவே படத்திற்கு சைக்கிள் டிக்கெட் கியூவில் போட்டுவிட்டு டீ
சாப்பிட்டு வருமுன் என் சைக்கிள் வைத்து வேறு யாரோ டிக்கெட் வாங்கிச்
சென்றது.

சைக்கிள் பால்யத்தின் கொடை! நம் பால்யத்தின் நினைவுகளில் எல்லாம்
சைக்கிளும் ஒரு பகுதியாயிருக்கின்றது. இப்போது சிறுவர்கள் உபயோகிக்கும்
சைக்கிள்களே பைக்கை விட விலை அதிகமாயிருக்கின்றது!