Friday, August 24, 2012

ஆதரவு இல்லம்! - திரைப்பார்வை

தமிழில் வந்த பேய்படங்கள் குறைவு.  விட்டாலாச்சார்யா தந்த படங்கள் எல்லாம் பயமுறுத்துவதற்கு பதிலாக கிச்சு கிச்சு மூட்டுபவை.  இன்னும் சில படங்கள் எரிச்சல் மூட்டுபவை.  சில படங்கள் மனதை தைக்காமலே கடந்து போய்விட்டன!

சின்னஞ்சிறு வயதில் 'மைடியர் லிசா' நிறைய பயமுறுத்திய படம்.  டீனேஜில் பார்த்த மறுவெளியிடுகளில் பார்த்த ஓமன், எக்ஸார்சிஸ்ட் போன்ற ஆங்கிலப்படங்கள் தான் நன்றாகவே பயமுறுத்தின.

நல்ல அமானுஷ்ய படத்திற்காக பல ஆண்டுகள் ஏங்கிகொண்டிருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு நல்ல படம் ஒன்றை பார்த்தேன்.  பதிவர் கருந்தேள் அறிமுகப்படுத்தியிருந்தார்.  அவருக்கு எனது நன்றிகள்.

****

கதை எனப் பார்த்தால்...

லாரா ஒரு ஆதரவு இல்லத்தில் வளர்கிறாள்.  பத்து வயதில் தத்தெடுக்கப்படுகிறாள். 

மீண்டும் 37 வயதில் அதே ஆதரவு இலலத்திற்கு தன் (மருத்துவர்) கணவன்,  ஏழு வயது பையனுடன் வருகிராள்.  இப்பொழுது ஆதரவு இல்லம் இயங்கவில்லை.  சில குழந்தைகளை (disabled children) தத்தெடுத்து முன்பு போலவே ஆதரவு இல்லமாக இயக்குவதாக திட்டம். 

இதற்கிடையில் அவளின் ஏழு வயது பையன் சிமோன் தனது நண்பர்கள் சிலரைப் பற்றி சொல்கிறான்.  அது நகரத்தை விட்டு விலகி, கடற்கரையோரமாக இருக்கும் தனிவீடு. அங்கு அப்படி யாரும் உண்மையில் இல்லை.  அவன் கற்பனையாக சொல்கிறான் என அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

ஒருநாள் அந்த பையன் லாராவிடம் "நீ எங்க அம்மா இல்லை!  நான் சீக்கிரமே சாகப்போகிறேன்! என் நண்பர்கள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்!' என்கிறான். சிமோன் ஹெ.எச்.ஐ. வியால் பாதிக்கப்பட்டவன்.  தத்தெடுக்கப்பட்டவன் தான்.  இந்த உண்மை அவனுக்கு எப்படி தெரிய வந்தது என லாரா அதிர்ச்சியடைகிறார்.

இதற்கிடையில், குழந்தைகளை தத்தெடுப்பதற்காக ஒரு 'கெட் & கெதர்' (A casual social gathering) சந்திப்பு நிகழ்கிறது.  அந்த சமயத்தில் அம்மாவுடன் சண்டையிட்ட சிமோன் காணாமல் போகிறான்.  கடத்திவிட்டார்களா?  அருகில் உள்ள கடலில் விழுந்துவிட்டானா என எல்லாவிதத்திலும் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருபக்கம் காவல்துறை, விளம்பரம் மூலமாக தேடுகிறார்கள்.  இன்னொரு பக்கம் ஆவிகளுடன் பேசுபவர்களின் மூலமும் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.  9 மாதங்கள் கடந்துவிடுகின்றன.

இறுதியில் சிமோன் கிடைத்தானா? அந்த வீட்டில் சிமோன் சொன்ன நண்பர்கள் யார்?  என எல்லாவற்றிக்கும் பதில் கிடைக்கிறது.  அதற்கு பிறகு லாரா எடுக்கும் ஒரு முடிவு மிக அதிர்ச்சியானது.

****

படத்தில் கதாபாத்திரங்கள் குறைவு.  அதில் லாராவை தவிர மற்றவர்கள் வருகிற நேரம் மிக குறைவு.   வசனங்கள் கூட குறைவு தான்.  ஆனால் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது லாராவின் நடிப்பும், திரைக்கதையும் தான்!  ஒளிப்பதிவும், இசையும் படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

2007ல் வெளிவந்த ஸ்பானிஷ் படம்.  ஆங்கில சப்-டைட்டிலுடன் யூ டியூப்பில் கிடைக்கிறது.  இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த படம் பார்த்தேன்.   அந்த நிமிடம் முதல் எழுது! எழுது! என லாரா விரட்டிக்கொண்டே இருந்தார்.  இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொண்டதும் கொஞ்சம் ஆசுவாசுமாய் இருக்கிறது!  இனி, லாரா உங்களை துரத்துவார்! :-)

****

படத்தின் பெயர். El Orfanato ஸ்பானிஷில்!  The Orphanage  ஆங்கிலத்தில்  தமிழில் அநாதை இல்லம் என்று தான் மொழிபெயர்த்திருக்கவேண்டும்.  படத்தின் இறுதியில் தன் குழந்தை சிமோன் மீதான ஆழமான அன்பில் எடுக்கும் இறுதி முடிவு 'அநாதை இல்லம்' என எழுதவிடாமல் தடுத்து,  'ஆதரவு இல்லம்' என எழுதவைத்தது.

****

மலையாளத்தில் இயக்குநர் பாசிலால் எடுக்கப்பட்ட மணிசித்திரதாழ் படத்தில் அமானுஷ்யம் உண்டு. அதை ரசிக்கமுடியும்.  அதை தமிழில் பி.வாசு சந்திரமுகியாக எடுத்தபொழுது,  அமானுஷ்யத்தை கழுத்தை நெறித்து கொன்றிருப்பார்.

****

இந்த படத்தை பாராட்டி எழுதுவதால், எனக்கு சொர்க்கத்தின் மீதோ, நரகத்தின் மீதோ சுத்தமாக நம்பிக்கை இல்லை.  மண்ணிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குவது தான் எனது கனவு.

****

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// மண்ணிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குவது தான் எனது கனவு. ///

அருமை...

நன்றி... வாழ்த்துக்கள்...

Anonymous said...

அமானுஸ்யங்களை நானும் நம்புவதில்லை. ஆனால் அவற்றை கதைகளிலும், படங்களிலும் பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு உண்டு .. க்ரட்ஜ் போன்ற படங்களைப் பார்த்து இரசித்து இருக்கின்றேன். இந்தப் படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். பார்த்துவிட்டால் போச்சு

ஹாலிவுட்ரசிகன் said...

ரெண்டு ரெகமெண்டேஷன். கட்டாயம் பார்க்கணும். :-)

//மண்ணிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குவது தான் எனது கனவு.//

சூப்பர்!!!

Doha Talkies said...

நல்ல படம் இது..
The others படம் கூட இதே போல் தான் இருக்கும்.
விமர்சனம் அருமை.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

குமரன் said...

The Orphanage இரண்டு வருடத்திற்கு முன் z cinema வில் பார்த்த படம். ரொம்ப நல்ல படம்.திரும்பவும் நினைவு படுத்தியதற்கு நன்றி. நானும் ஒரு படத்தை பற்றி உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். after shock என்ற சீன மொழி படம். ரொம்ப அருமையான படம் வார்த்தைகளால் சொல்ல முடியாத படம், நிலநடுக்கத்தை அப்படியே கண் முன்னாடி கொண்டுவந்த படம், படம் என்றால் நம்மமுடியவில்லை, நிலநடுக்கத்தில் தன் கணவன் கட்டிட இடிபாடுகளில் இறந்து விட இடிபாடுகளில் சிக்கிய தன் 2 குழந்தைகளை பார்த்து கதறுகிறாள் அம்மா. 2 குழந்தைகளில் 1 குழந்தையை தான் காப்பாற்றமுடியும் என்று சொல்லுகிறார்கள். பையனா? பெண்ணா? என்று கேட்கும் போது அந்த அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் பையனை காப்பாற்றுங்கள் என்று சொல்லி விடுகிறார். இடிபாடுகளில் சிக்கிய அந்த சின்ன பெண் தன் அம்மா சொல்லுவதை கேட்டு அதிர்ந்து போகிறாள். மா என்ற சொல்லோடு அமைதியாகிறாள். மீதி கதையை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சஸ்பென்ஸ் போய்விடும். நம் ஊரில் உலக தரமான படம் என்று சொல்லிக்கொண்டு எடுக்கும் படங்களில் உலக தரம் எங்கு இருக்கு என்று தேட வேண்டிருக்கு. உலக தரம் என்பது என்னை பொறுத்தவரை படத்தின் கதை தரத்தில் இருக்கிறது. பணத்தை போட்டு பிரம்மண்டபமாக எடுக்கும் படத்தில் இல்லை. அந்த காசை வேறு எதிளிலாவது போடலாம் சரிதானே?

- மது, மின்னஞ்சலில்!