Friday, September 21, 2012

பயணமும் உணவும் - சில குறிப்புகள்!

சிறுபிராயத்து பயணங்களில்
அம்மாவின் புளியோதரையும்
மணக்கும் துவையலும் சுவையானவை!

பள்ளி பருவத்து நாட்களில்
பயணங்களில்
வாந்தி வந்த கொஞ்ச காலம்
பட்டினியும், தூக்கமும் தான்
காப்பாற்றியவை!

கொண்டை ஊசி வளைவுகளுக்கு பயந்து
இன்றைக்கும்
ஊட்டி, கொடைக்கானலுக்கு
பட்டினியாய் தான் பயணிக்கிறேன்.

பேருந்து பயணத்தில்
கோழிக்குழம்பு வயிற்றை ஒருமுறை
ஏகமாய் கலக்கிய பிறகு
எப்பொழுதும் சைவம் தான்!
ரயிலெனில்
அசைவம் தைரியமாய் சாப்பிடலாம்!

கானா பாடல்கள் ஒலிக்கும்
பேருந்து இளைப்பாறும்
நெடுஞ்சாலை மோட்டல்கள்
பணம் பறிப்பவை!
'கடனுக்காக' பரிமாறப்படுபவை!
இலவசமாய் கிடைக்குதென்றாலும்
ஓட்டுநரும், நடத்துனரும்
பாவப்பட்டவர்கள் தான்!

பீகாருக்கும், தில்லிக்கும்
சென்ற நீண்ட பயணத்தில்
சோத்துக்கு திண்டாடிய அனுபவம்
மறக்கமுடியாதவை!

ரயிலில் தரும்
ஐஆர்சிடிசி உணவுகள்
போன ஜன்மத்து பாவங்களை (!)
நினைவுப்படுத்துபவை!

அதெப்படி சொல்லிவைத்தாற்போல
எல்லா பேருந்து நிலையங்களிலும்
தேநீர் கேவலமாகவே இருக்கிறது!
திண்டுக்கல் கொஞ்சம் தேவலாம்!

நல்ல உணவு
பயணத்தை சுகமாக்கும்!
நல்ல உணவு
எப்பொழுதாவது தான் வாய்க்கிறது!

முகமறியா சகபயணியிடம்
சாப்பிடுங்கள் என்றேல்லாம் - இப்பொழுது
யாரும் கேட்பதில்லை.
கேட்கவும் முடிவதில்லை!

4 comments:

Yaathoramani.blogspot.com said...

எல்லோரும் பட்ட படுகிற
பயண உணவுக் கஷ்டத்தை மிக மிக
அழகாக பதிவுசெய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

Php Mute said...

முகமறியா சகபயணியிடம்
சாப்பிடுங்கள் என்றேல்லாம் - இப்பொழுது
யாரும் கேட்பதில்லை.
கேட்கவும் முடிவதில்லை!
இந்த வரிகள் மக்களின் சகஜ தன்மை அழிந்து போனை சுட்டி நிறையவே ஜோசிக்க வைக்கிறது !
என்ன செய்வது !

வல்லிசிம்ஹன் said...

பயண ஆசையைத் தூண்டிவிடுகிற பயணப் பதிவு.
வீட்டிலிருந்து எடுத்துப் போவதே நிம்மதி. வெளிநாடு செல்லும்போதும் நான் கட்டி எடுத்துச் செல்வது புளி சாதமும் ,இட்லியும் தான்:0)
நாடு இருக்கும் நிலையில் யார் சாப்பாட்டை யார் சாப்பிடுவார்கள். உண்மையான வரிகள்.

Arunsiva said...

வணக்கம் சார்,
உங்கள் எழுத்துக்களில் யதார்த்தம் நிரம்பி வழிகிறது. அதுவும் மனிதர்களை பற்றிய
அனுபவம் எல்லாம் சூப்பர், அது போலவே இந்த பயணமும் உணவும் கூட அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு அனுபவமே உங்கள் எழுத்தில் அது கவிதையாக மாறிவிட்டது. ( என்ன, நம்ம கஷ்டமே நமக்கு கவிதை) முக்கியமா பஸ்ஸ விடுங்க ட்ரைன்லயாவது நல்ல சாப்பாடு எங்க கிடைக்குது.

சார் நீங்க இன்னும் நிறைய எழுத வேண்டும், வாழ்த்துக்கள்.