Saturday, May 18, 2013

வீட்டுச் சாப்பாடே சாலச்சிறந்தது!

நேற்று நண்பனுடன் அவனுடைய மாமாவை சந்திக்க போயிருந்தேன். அவர் தனது நண்பர்களுடன் தனது மாசாலா நிறுவனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிலிருந்து சில தகவல்களை பகிர்கிறேன்.

****

குழந்தைகளுக்கு கூட தன்னுடைய மசாலா பொருட்களை பயன்படுத்தவேண்டும் என தரமான பொடியை தரவேண்டும் என்ற கனவுடன் இந்த மசாலா துறைக்கு வந்தேன். இந்த இரண்டு வருடங்களில் அந்த கனவை மொத்தமாக தகர்த்துவிட்டார்கள்.

காரமே இல்லாத சொத்தை மிளகாய்த்தூளை அரைத்து, நிறைய உடல் தொந்தரவுகளை தரும் சிவப்பு ரசாயன பொடியை கலந்து சிவிரென சிகப்புதூளாக விற்கிறார்கள்.  அதை கிலோ ரூ. 40 என‌ மிக மலிவான விலைக்கு விற்கிறார்கள். அவர்களோடு நாம் போட்டி போடவே முடியாது.

பல கல்லூரி கேன்டின்களுக்கு மசாலா விற்றுக்கொண்டிருக்கிறேன். கேன்டின் கான்டாராக்டர்கள் பொடியை மலிவா கொடு! என்று தான் பேசுகிறார்களே தவிர, தரமான பொருளை கொடு என கேட்பதே இல்லை. இதைத்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களாக தரமான பொருளை விற்கவேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்து, சில லட்சங்கள் நட்டம் அடைந்தது தான் மிச்சம்.

எந்த கடைக்காரரும் தரமான பொருளை தாருங்கள் என கேட்பது இல்லை.  தனக்கு கூடுதலாக கமிசன் கிடைக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள்.  பிரபலமான நிறுவன பொருட்கள் தவிர, குறைவாக கமிசன் கிடைக்கும் தரமான பொருட்களை கடைக்காரர்கள் வாங்கி விற்பதே இல்லை.

ஒருமுறை அப்பளம் வாங்கி விற்கலாம் என விசாரித்தால், அப்பளத்தின் மொறுமொறுப்புக்கு சோடா பவுடர் போடுவதாக சொன்னார்கள்.  அது இல்லாமல் மொறுமொறுப்பு சாத்தியமே இல்லையாம்.  அப்பளம் விற்கும் திட்டத்தையே கைவிட்டேன்.

நேற்று ஒரு கேன்டின்காரரிடம் ஊறுகாய் எங்கு வாங்குகிறீர்கள்? என கேட்டதற்கு, கிலோ ரூ. 26க்கு வாங்குகிறேன் என்றார். எங்கோ ஆந்திராவின் கிராமப்புற பகுதியில் குடிசைத் தொழில் செய்பவர்களிடமிருந்து வருகிறதாம்.  எண்ணெய், மிளகா பொடி என விற்கும் விலைக்கு ரூ. 26க்கு தயாரிக்கவே முடியாது. எதைப்போட்டு தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.

இப்படி ஒருமணி நேரம் கலப்படம், வணிகம், சந்தை என இந்த சந்தை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக சொன்னார்.  எந்தவித தரக்கட்டுப்பாடும் கிடையாது. அவ்வப்பொழுது ஏதாவது ஒரு அதிகாரி போனைப் போட்டு, லஞ்சம் வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்களாம். கேட்டு முடிந்ததும் கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் போனது.

முன்பெல்லாம் சொந்த பந்தங்களுக்கு என்னுடைய மசாலா பொடியை கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சந்தைகளின் விதிகளுக்கு தகுந்தவாறு நானும் மாறிக்கொண்டதால் (கலப்படம் செய்வதால்)இப்பொழுது சொந்த பந்தங்களுக்கு பொடியை தருவதில்லை என்றார். :(

இத்தனையையும் பார்த்து, இப்பொழுதெல்லாம் வெளியில் சாப்பிடுவதே இல்லை. வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடுகிறேன்! என்றார். எனக்கும் அதுதான் ரெம்ப சரியென்றுபட்டது!

இரண்டு நாள்களுக்கு முன்பு, சொந்தக்கார பெண் கேட்டரிங் படித்துவிட்டு, ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பயிற்சிக்காக போய்க்கொண்டிருக்கிறார். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஹோட்டலில் சமைக்கிற விதம் குறித்து சொன்னதும், தலைச்சுற்றல் வந்தது. அதை இன்னொரு நாள் பகிர்கிறேன். :)

6 comments:

துளசி கோபால் said...


அட ராமா.....:( எங்கும் எதிலும் கலப்படமா:((((

வீட்டுச்சாப்பாட்டுக்கும் தரமான பொருட்களை வாங்கி நாமேகொஞ்சம் கொஞ்சமா தயாரிச்சு வச்சுக்கறதுதான் பெஸ்ட்!

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

Anonymous said...

veetu sappadu Divine!

Jayadev Das said...

வீட்டில் சமைத்தாலும் அரிசி விளைவிக்க போடும் பூச்சி மருந்து, உரம், காய்கறிகளில் உள்ள விஷம் பழங்களைப் பழுக்க வைக்க போடும் கார்பைடு இப்படி பயந்து பந்தே நான் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.

Jayadev Das said...

வீட்டில் சமைத்தாலும் அரிசி விளைவிக்க போடும் பூச்சி மருந்து, உரம், காய்கறிகளில் உள்ள விஷம் பழங்களைப் பழுக்க வைக்க போடும் கார்பைடு இப்படி பயந்து பந்தே நான் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மையை பளிச்செனப் சொல்லிவிட்டீர்கள். பலர் இதை உணர்வதாக இல்லை.
இங்கு ஒரு நிறுவன அரிசி மா ரோஸ் நிறத்தில், கையால் இடித்த சிவப்பரிசி மா என விற்றார்கள். அந்த மாவைப் பார்த்ததும் என் அனுபவத்தில் அந்தக் நிறத்தில் மா எப்படி வரும், கேட்டபோது
வீட்டின் இளம் தலைமுறைக்கு 25 வருடங்களுக்கு முற்பட்ட நிறம் தெரியாது.சிவப்பரிசி மாவுக்கு பழுப்பு நிறத்தைக் கொடுப்பதே அதில் கலந்துள்ள தவிட்டுத் துகள்கள்.
இந்த மாவில் அத் துகள்களே காணப்படவில்லை. மாக்குழைத்த போது, கைநிறம் மாறிய போது தான்
சாயம் கலந்திருப்பது, தெரிந்து கடையில் கேட்டபோது, தாம் தயாரிப்பதில்லை, அந்த நிறுவனத்திடம் சொல்லுகிறோம் என்றார்கள். பின் அந்நிறத்தில் மா வருவதில்லை. ஆனால் என்ன கலப்படம் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்களோ? தெரியாது.
இங்குள்ள நம் நாட்டவர் கடைகளில்
இற்க்குமதியாகும், பொருட்கள் யாவற்றிற்கும் தரக்கட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
பெருவாரியான இவர்கள் இறக்குமதிகள், பிரான்சியர் உபயோகிப்பதில்லை.
பலரது நிலை வீட்டிலேயே எல்லாவற்றையும் செய்யமுடியாது. இவர்களையே நம்பவேண்டிய நிலை.
அவர்களுக்கோ பணம் பண்ண வேண்டும். யார் குடல் அழுகினாலும் கவலையே இல்லை.
அந்த பாவம் தீர்க்க ஏதாவது ஒரு கோவிலுக்கு எதையாவது உபயமாகக் கொடுத்து சமாதானமாகிறான்.
இவர்கள் தயாரிப்பை உண்டு உடன் மாண்டால் தானே சிக்கல் வரச் சிலசமயம் வாய்ப்புண்டு, இக்கலப்படங்களால் 'சிறுகச் சிறுகக் கொல்லப்படுகிறோம்' அதனால் அவர்கள் சிக்கவே மாட்டார்கள்.
நாம் தான் சிந்திக்க வேண்டும்.
அதற்கு நேரமற்ரவர்களாகி விட்டோம்.

Avargal Unmaigal said...

தகவல்கள் மிகவும் அதிர்ச்சியை தருகின்றன...அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்