Friday, February 14, 2014

அவளின் காலடித்தடங்கள்!

முகநூலிலும் பதிவுகளிலும் இன்று காதல் பிரவாகம் எடுத்து ஓடுகின்றது.   கடந்த வந்த பாதையும் என் காதல்களும் மனதில் மெல்ல எழும்புகின்றன.

பள்ளிக் காலத்தில் எங்களுடன் படித்த ‘பாபி’ தான் எங்கள் வகுப்பில் உள்ள எல்லா பசங்களுக்கும் காதலி!  கொஞ்சம் சிவப்பாய், கொஞ்சம் பூசினாப்பல, யாரையும் வசீகரிக்கிற புன்னைகையுடன், நடுத்தர வர்க்கம் என்பதால் மற்ற பிள்ளைகளை விட கொஞ்சம் பளபளக்கும் ஆடைகளோடு வருவதால் அவள் தேவதை தான்.  அவளிடம் பேசும் பொழுது பையன்கள் மரியாதையுடன், குழைந்து பேசுவார்கள். தேவதையிடம் அப்படித்தான் பேசமுடியும்! என் கிட்ட பேனா கேட்டாள்! பென்சில் கேட்டாள்! என அள்ளிவிடுவார்கள்.  ஒரு நாள் பள்ளி மாறி, இறக்கை முளைத்து, போயே போய்விட்டாள்!

பருவ வயதில், என்னுடைய தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு வேகமான சூறைக்காற்றைப் போல கடந்து சென்ற ‘செல்வி’ என்னை மிகவும் கவர்ந்தாள். அவள் வேலை செய்த கடைக்கேல்லாம் போய், பொருள் வாங்குவது போல போய், சைட் அடித்திருக்கிறேன்.  அன்னாவும் ரசூலும் படத்தில் ஆண்ட்ரியாவை பகத் பாசில் பின் தொடர்வானே அதைப் போல பல நாட்கள் பின் தொடர்ந்திருக்கிறேன்.

ஒரு நாள் வழியில் பெயரென்ன என கேட்டதற்கு, பெயர் தானே என சர்வசாதாரணமாய் சொல்லி சென்றாள்.  அவளின் வேகம், நடை, பேச்சு, நடை என எல்லாம் பிடித்தது (பருவ வயது என்கிறீர்களா!)

அவளை காதலிக்கலாம் என நினைக்கும் பொழுது, திடீரென ஒரு நாள் மாலையும்,கழுத்துமாய் திருமணம் முடிந்து சொந்தங்களுடன் ஆட்டோவில் வந்திறங்கிய பொழுது,   தாடி வளராமலே சில நாட்கள் சோகமாய் திரிந்தேன்.

அவர்களுடைய குடும்பத்தில் உள்ள சில சிக்கல்களினால், செல்வியின் திருமணம் மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை.  அவளுக்காக வருத்தப்படுவதா, எனக்காக சந்தோசப்படுவதா என சில நாட்கள் குழம்பி திரிந்தேன்.

சில நாட்களில் நானும், அவளும் நார்மலுக்கு வந்தோம்.  அப்பொழுதெல்லாம் செல்போன் இல்லாத காலம்.  துணிந்து ஆறுதல் சொல்லி கடிதம் எழுதினேன். நான் நாலு பக்கத்திற்கு நாள் நாள் யோசித்து எழுதினால், அவள் நாலே வரியில் அடுத்த நாளே கவித்துவமாய் பதில் வரும்!

கொஞ்சம் இலக்கியமெல்லாம் வாசித்து, நண்பர்களுடன் சுற்றித்திரிந்த காலம் அது! அவளுடன் நட்பாகி, பழகி, இருவருக்கும் பிடித்திருந்தால் காதலிக்கலாம் என கற்பனையில் திட்டம் தீட்டினேன்.

நான் அவளை நெருங்க முயற்சித்த பொழுதெல்லாம் அவள் விலகி விலகி போய்க்கொண்டிருந்தாள். திருமண முறிவு ஆழமான காயங்களை ஏற்படுத்தியிருக்கும். எனக்கு அத்தனை புரிதலில்லை. அவள் எப்படி யோசிப்பாள் என யோசித்ததேயில்லை.

இந்த குழப்பத்திற்கும் ஒருநாள் முடிவு வந்தது.   இடையில் சில காலம் வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து போய்க்கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றி என்ன நினைத்தாலோ, வீட்டில் பார்த்த மறு திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாள். இப்பொழுது யோசித்தால், நான் அத்தனை நம்பிக்கை தரவில்லை என உணர்கிறேன்.  பிராக்டிலாக யோசித்தால், செல்வி எடுத்த சரியென்றேபடுகிறது.

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு ஒரு நாளும் கண்ணில்பட்டதே இல்லை.  இன்றைக்கும் நடிகர் சிரஞ்சிவியின் நடனத்தைப் பார்த்தால், செல்வி நினைவிற்கு வருகிறாள்.  வாழ்த்து அட்டைகளைப் எங்காவது கண்ணில் பட்டால் செல்வி தெரிகிறாள்.

இன்னும் சில காதல்கள் இருக்கின்றன.  இன்றைக்கு செல்வியின் நினைவுகள் போதும்!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

செல்வி அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க...