Wednesday, February 19, 2014

எழுவர் விடுதலையும், ஜெ.வின் பிரதமர் கனவும்!

எழுவரை விடுதலை செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! நேற்று விடுதலை விசயம் கேள்விப்பட்டதும் முகநூலில் என்னுடைய மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டேன். அவர்களுடைய விடுதலை கோரிக்கைக்கான பல போராட்டங்களில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். இந்த விடுதலைக்கு பின்னால், பல புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளின் விடாப்பிடியான போராட்டங்கள் இருந்திருக்கின்றன.

தமிழகம் முழுவதுமே மக்கள் போராடியிருக்கிறார்கள். ஜெ.வை சட்டமன்றத்தில் தீர்மானம் போட வைத்ததில் மக்கள் போராட்டத்திற்கு பங்குண்டு. விடுதலை குறித்து அரசு வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், ஜெ.வே இந்த விசயத்தை ஒத்துக்கொண்டிருக்கிறார்.

ஜெ. விடுதலை செய்ததை பலரும் பாராட்டுகிறார்கள். தப்பில்லை.ஆனால் அமைப்புகளின், மக்களின் போராட்டங்களை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு விடுதலை செய்ததற்காக ஜெ.யின் தைரியம் பிரமாதம். அம்மா இப்படித்தான் அதிரடியாக பல பிரச்சனைகளை தீர்ப்பவர். அப்படி, இப்படி என இன்னும் என்னனென்னவோ புல்லரித்துப்போய் எழுதி, ஜெவை. பிரதமராக்கலாம் என இந்தியாவை ஜெ.வின் காலடியில் வைப்பதை நாம் அனுமதிக்கமுடியாது. நாட்டை கொள்ளையிட்டு கொண்டும், இன்னமும் மொத்தமாக கொள்ளையிட காத்திருக்கும் பல கழுகுகளுக்கு ஜெ.வைப் போல பாசிஸ்டு இருந்தால், நன்றாக இருக்கும் என காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், டுபாக்கூர் மோடியை கூட வானாளாவ புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜெ.விடம் அடிவாங்காத பிரிவினர் உண்டா?  இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட கண் தெரியாத மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய நியாய கோரிக்கைகளுக்காக போராடும் பொழுது, மிக மோசமாக நடத்தியவர் தான் இந்த ஜெ.

நாம் எப்பொழுதும் பழசை மறந்துவிடக்கூடாது!

No comments: