Monday, April 28, 2014

The others – நல்ல அமானுஷ்ய படம்!

Orphanage பார்த்த சில மாதங்களுக்கு பிறகு திடுக்..திடுக் என பார்த்த இன்னொரு ஒரு நல்ல அனானுஷ்ய படம் இது!

இரண்டாம் உலகப்போர் காலகட்டம்! ஒரு பெரிய பங்களா! தனியாக இருக்கிறது! ஒரு அம்மா (கிரேஸ்) தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறாள்.  புதிதாக வீட்டு வேலைக்கு அம்மா, அப்பா, மகள் என ஒரு குடும்பமாய் வருகிறார்கள். 

”தன் குழந்தைகளுக்கு வெளிச்சம் ஒத்துக்கொள்ளாது. அதனால் எப்பொழுதும் அறையில் அடர்த்தியான திரைச்சீலைகள் மூடியபடி இருக்கவேண்டும்!  பல்புகளுக்கு பதிலாக, கொஞ்சம் பெரிய வகை சிம்னியை பயன்படுத்த வேண்டும். ஒரு அறையை விட்டு இன்னொரு அறைக்கு நகர்ந்தால், அறையை பூட்டிவிட்டு தான் போகவேண்டும்” என சில நிபந்தனை விதிக்கிறாள். மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பெண்ணின் கணவர் போரில் கலந்து கொள்ள போனவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது.

அடுத்தடுத்து வரும்நாட்களில், அந்த வீட்டில் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன.  திடீரென பியானோ வாசிக்கும் சத்தம் கேட்கிறது. அந்த அறையை திறந்து பார்த்தால், யாரும் இல்லை.  அவளின் பெண் Anne “இந்த வீட்டில் விக்டர் என்ற பையன் இருப்பதாகவும், அவனின் அம்மா, அப்பா, பாட்டி என மூவரும் இந்த வீட்டில் இருப்பதாக சொல்கிறான்” எனவும்  சொல்கிறாள்.  அம்மா பதட்டமடைகிறாள்.

நகருக்கு சென்று சர்ச் பாதிரியாரை அழைத்து வந்து, புனித நீர் தெளிக்கவைக்க வேண்டும் என சொல்லி கிளம்புகிற வழியில், Graceயின் கணவன் வந்துகொண்டிருக்கிறான்.  அவன் துணைக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையில் வீடு திரும்புகிறாள்.  ஆனால், அவனோ நிறைய நோய்வாய்ப்பட்டவனாக இருக்கிறான்.  மீண்டும் உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என சொல்லி, அடுத்தநாளே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போய்விடுகிறான்.

ஒரு நாள் தூங்கி எழும்பொழுது, வீட்டில் எல்லா திரைச்சீலைகளும் காணாமல் போயிருக்கின்றன. வெளிச்சத்தைப் பார்த்ததும், பிள்ளைகள் வீல் என அலறுகிறார்கள்.  வேலைக்காரர்களைக் கேட்டால், எங்களுக்கு தெரியாது என்கிறார்கள். கோபத்தில் வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறாள். எதைச்சையாக ஒரு ஆல்பத்தை பார்க்கும் பொழுது,  வேலைக்காரர்கள் மூவருமே 50 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோனவர்கள் என தெரிகிறது. அவள் இன்னும் பதட்டமடைகிறாள்.

இறுதியில் அந்த வீட்டில் உள்ள ‘அமானுஷ்ய  சக்திகளை’ துரத்தினார்களா? அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? என்பது திகில் கலந்து மிச்சக்கதை!
*****

’பேய்’ படம் என்றாலும், பேய் ஒருமுறை கூட வந்து நம்மை பயமுறுத்தவில்லை.  இறுதிக்காட்சி பார்த்ததும், கைப்புள்ள வடிவேல் சொல்கிற படி “இவ்வளவு நேரம் திருடனோடா சகவாசம் வைத்திருந்தோம்” என்கிற வசனம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது! கதையின் சிறப்பு அதன் திரைக்கதை தான்!

படத்தின் பாத்திரங்கள் மிக குறைவு.  எல்லோரும் அருமையாக அவரவர் பாத்திரங்களை செய்திருக்கிறார்கள்.  படத்தின் பிரதான பாத்திரமான குழந்தைகளின் தாயாக வரும் Nicole Kidman ன் நடிப்பு அபாரம்.  மொத்த படத்தையும் தாங்குவது இவரின் நடிப்பு தான்.  இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமையாக பொருந்தி நிற்கின்றன.

ஏ.வி.எம் தயாரித்த திகில் படமான ‘அதே கண்கள்’ படத்தின் முதல் காட்சியில் ‘இந்த படத்தின் இறுதிக் காட்சியை யாருக்கும் சொல்லாதீர்கள்” என வேண்டிக்கொள்வார்கள். அது இந்த படத்திற்கும் பொருந்தும்! J


1 comment:

bandhu said...

அருமையான படம்.. எனக்கும் மிகப் பிடித்திருந்தது!