Sunday, May 25, 2014

ஒரு திருமணம் – சில குறிப்புகள்




தாலி, சடங்கு சம்பிரதாயம், வரதட்சணை, மொய் இன்னும் பல விசயங்களும் இல்லை என சொல்லி, ஒரு திருமணத்திற்கு நண்பர் அழைத்து போயிருந்தார்.

’புரட்சிகர மணவிழா’ என பேனர் வரவேற்றது.  மாப்பிள்ளை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர் என கேட்டறிந்தேன்.

பல திருமணங்களில் குத்தாட்ட பாடல்களை கேட்டும், ஆடியும் பார்த்திருந்த எனக்கு, மண்டபத்தில் தாலி செண்டிமென்ட், ஆணாதிக்கம் குறித்த பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர்.  புதிதாக இருந்தன.

மேக்கப் இல்லை; நகை இல்லை; சாதாரண உடைகளில் இருந்தனர். இவ்வளவு எளிமையான மணமக்களை எங்கும் பார்த்ததில்லை.  மணமக்கள் அருகேயே பெற்றோர்களும் அமர்ந்திருந்தனர்.

வேறு வேறு சாதி பிரிவைச் சேர்ந்த, காதல் கொண்ட இருவர் தங்கள் குடும்பத்துடன் போராடி, ஏற்பாடு செய்த திருமணம் என பேச்சில் புரிந்தது!

வாழ்த்திப் பேசியவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் இதே மாதிரி திருமணம் முடித்தவர்கள் என அறிய முடிந்தது!

அருகில் இருந்த அறுபது வயது பெரியவர் “தாலியைப் பத்தி இவ்வளவு பேசுறாங்க!  நல்ல நேரத்தில் தாலி கட்டனும்னு தோணலையே” என்றார். சிரித்துக்கொண்டேன்.

”தங்களுக்குள் எழும் பிரச்சனைகளை ஜனநாயக முறையில் தீர்த்துக்கொள்வோம், பிற்போக்குத்தனங்களை கடைப்பிடிக்கமாட்டோம், சமூக மாற்றத்திற்காக இறுதிவரை போராடுவோம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  கையெழுத்திட்டனர்.  பெற்றோர்கள் மாலை எடுத்துதர மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்.  மணமக்கள் வாழ்க! என குரல் கொடுத்தனர். உற்சாகமாய் கைகளை தட்டினர் அவ்வளவுதான். திருமணம் முடிந்தது. மணமக்கள் வந்த அனைவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

நுழைவாசல் அருகே புத்தக கடை ஒன்று போட்டிருந்தார்கள்.  நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என அனைத்தும் முற்போக்கான நூல்கள். திருமணங்களில் புத்தகங்களை பரிசாக தரவேண்டும் என்பது எனது ஆசை.  வந்தவர்கள் புத்தகங்களை வாங்குவதும், மணமக்களுக்கு தருவதுமாய் இருந்தார்கள்.

ரெம்ப நாளைக்குப் பிறகு மனத்திருப்தியுடன் ஒரு சுவையான சாப்பாடு சாப்பிட்டேன்.

’உலகின் அழகிய மணமக்கள்’ என்று எங்கோ படித்த வாசகம் நினைவுக்கு வந்தது. இவர்கள் தான் அவர்கள் என நினைத்துக்கொண்டேன். 

மணமக்கள் வாழ்க!

2 comments:

Anonymous said...

Nice

ஆனந்த் said...

என்னுடைய வாழ்த்துக்களும்!