Thursday, May 29, 2014

X Men – கடந்த காலத்தின் எதிர்காலம்





X Men days of future past - எக்ஸ்மேன் படங்களில் ஏழாவது படம் என்கிறார்கள்.  எல்லா படங்களையும் பார்க்காவிட்டாலும், சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.  மியூட்டண்ட்கள் சுவாரசியமான ஆட்கள்.  ஒவ்வொருவரும் வித்தியாசமான திறமை கொண்டவர்கள்.

இந்த படத்தின் கதை 2013ல் நடக்கிறது.  ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த செண்டினல்கள்  என்கிற இயந்திர ஆட்கள், மியூட்டண்ட்களை தேடித்தேடி அழிக்கின்றனர்.

மியூட்டண்ட்களில் எதிரும் புதிருமாய் இரண்டு குழுக்களாக அடித்துக்கொள்ளும் சார்லஸ் சேவியரும், மேக்னீடோவும்  மீதியுள்ளவர்களையாவது காக்க ஒன்றிணைகிறார்கள்  1973ல் ஒரு விஞ்ஞானியை மிஸ்ட்டீக் என்ற மியூட்டண்ட் கொன்று, மாட்டிக்கொள்ள, அவளை வைத்து, ஆராய்ச்சி செய்து தான் செண்டினல்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதனால், 1973ம் ஆண்டு காலத்திற்கு போய், அந்த விஞ்ஞானியின் கொலையை தடுத்துவிட்டால், செண்டினல்களின் உருவாக்கத்தையே தடுத்துவிடலாம் என திட்டம் போடுகிறார்கள்.

இதற்காக, தனித்திறமை கொண்ட ஒரு மியூட்டண்டால், ஒருவரைத்தான் அனுப்பமுடியும். அதுவும் நினைவுகளை தான் அனுப்பமுடியும் என்ற நிபந்தனையில், அதற்கு உடல், மனம் தகுதியாயுள்ள வால்வுரீனை (Volverine) அனுப்புகிறார்கள். செண்டினல்கள் அவர்கள் தற்பொழுது இருக்கும் இடத்தை தாக்குதல் செய்வதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. அதற்குள் செய்துமுடிக்கவேண்டும்.

1973ம் ஆண்டிற்குள் போனால், சேவியரும், மக்னீடோவும் சில, பல காரணங்களால் எதிரும் புதிருமாய் இருக்கிறார்கள்.  சேவியர் ஒரு தாக்குதலினால் தனது திறமையை இழந்து நிற்கிறார்.  மேக்னீடோவோ அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியை கொன்ற சதி வழக்கில் மிக பாதுகாப்பாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.   மிஸ்டீக்கோ யார் சொன்னாலும் கேட்காமல், விஞ்ஞானியை போட்டுத்தள்ளுவதிலேயே குறியாய் இருக்கிறார். எல்லா சிக்கல்களையும் எதிர்கொண்டு, விஞ்ஞானியின் கொலையை தடுத்து நிறுத்தினார்களா? எஞ்சியிருக்கும் சில மியூட்டண்ட்களையாவது காப்பாற்றினார்களா என்பது மிச்ச கதை!
***

எக்ஸ் மேன் படங்களை விட்டுவிட்டு பார்த்தால் கூட படம் புரிகிறது.  எதுவும் புரியாமல் போய், கல்லா கட்டுவதில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் எப்பொழுதும் கவனமாக இருக்கிறார்கள்.

படத்தில் வரும் ’காலப்பயணம்’ எப்பொழுதும் சுவாரசியம் தான். எல்லோருக்கும் வாழ்வில், தன் கடந்தகால வாழ்வில் சில விசயங்களை மாற்ற வாய்ப்பு இருந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டால், பல சுவாரசியமான பதில்கள் நிச்சயம் கிடைக்கும்.

மியூட்டண்ட்கள் எப்பொழுதும் சுவாரசியமானவர்கள்.  இந்த படத்தில் கூட ‘மாயி’ படத்தில் வரும் ‘மின்னல்’ பாத்திரம் போல ஒரு பாத்திரம் உண்டு. மேக்னீடோவை காப்பாற்றுவது அசத்தல்.

படத்தில் வரும் மிஸ்டீக்காக வரும் ஜெனிபர் லாரன்ஸ் நன்றாக செய்திருக்கிறார். பொதுவாக ‘அழகாக’ இருப்பவர்கள் நடிப்பதில்லை என்ற கருத்தை உடைத்திருக்கிறார்.

மற்றபடி, சென்டிமெண்ட், ஆக்சன் எல்லாம் அளவோடு நகர்கின்றன. படம் முழுவதும் ஆக்சன் எதிர்பார்த்து போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சம்!

No comments: