Sunday, August 17, 2014

North 24 kaatham – மெல்ல மெல்ல மாறும் மனது!



அஞ்சான் பார்த்து நொந்து போனவர்களுக்காக ஏதாவது ஆறுதலாக செய்யலாம் என தோணியது! முன்பெல்லாம் இப்படி வெறுப்பாகி, அதை சரி செய்வதற்கு இன்னொரு படம் பார்த்து, பழைய படத்தின் நினைவுகளிலிருந்து தப்பிப்பது வழக்கம்! சமீபத்தில் பார்த்த நல்ல மலையாள படம் இது! பகத்பாசிலின் நல்ல படங்களில் இதுவும் ஒன்று!
***

கதை. நாயகன்(பகத் பாசில்) ஒரு மென்பொருள் பொறியாளன். எங்கும், எதிலும் சுத்தம் பார்ப்பவன்.  Obessive Personality Disorder பாதிப்பில் மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அலுவலத்தில் அவன் நடந்துகொள்ளும் தன்மையில், அவன் வேலையை விட்டு போனால், சொந்த செலவில் அனைவருக்கும் டிரிட் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.  இந்த நிலைமையில், அவன் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருக்கிறது.  இவனுக்கோ வெளியூர் போவதென்றால் அலர்ஜி. இருப்பினும் வேண்டாவெறுப்பாய் கிளம்புகிறான்.

ரயிலில் பயணம் செய்யும் பொழுது, நடுநிசியில் சக பயணியான வயதான பெரியவருக்கு (நெடுமுடிவேணு) அவருடடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என தொலைபேசியில் தகவல் வருகிறது.  அந்த செய்தியால் அவர் நிலைகுலைந்து போகிறார்.  மீண்டும் ஊருக்கு போய்சேர, உடன் பயணிக்கும் இளம் பயணியான இளம்பெண் (சுவாதி)  முன்வருகிறாள்.   இருவரும் ரயிலை விட்டு இறங்கும் பொழுது, பெரியவரின் செல்போன் கீழே விழுந்துவிடுகிறது! அதை எடுக்கும் நாயகன் ஒரு செய்தியை கேட்க, வேறுவழியில்லாமல் அவனும் அவர்களுடன் பயணிக்க வேண்டியதாகிறது! 

விடிந்தால் கேரளா முழுவதும் பந்த்.  கிடைக்கிற பேருந்து, ஆட்டோ, படகு என அவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.  இயற்கையை ரசிப்பது, மனிதர்கள் அன்புடனும், சிநேகத்துடனும் நடந்து கொள்வது பார்க்கும்பொழுது, நாயகனுக்குள் மனமாற்றம் நிகழ்கிறது!

ஒருவழியாக, மாலை பெரியவரின் ஊரை அடைகிறார்கள்.  அங்கு அவருடைய துணைவியார் இறந்து, கூடத்தில் கிடத்தப்பட்டு இருக்கிறார். அவரும் அவருடைய துணைவியாரும் பொதுவுடைமை கட்சியில் உறுப்பினர்கள். கட்சிக்காக தனது சொத்துக்களையும் தந்திருக்கிறவர்கள்.  பெட்டியிலிருந்து கம்யு. கட்சி கொடியை எடுத்துவந்து போர்த்துகிறார்.

நாயகனும், நாயகியும் அவரவர் ஊருக்கு திரும்புகிறார்கள்.  இந்த பயணத்தில் இருவருக்குள்ளும் காதல் அரும்புகிறது. அடுத்த சில நாட்களில் மீண்டும் சந்திக்கிறார்கள். சுபம்.
****

‘பயணம் ஒரு நல்ல ஆசிரியர். அது பல பாடங்களை கற்றுத்தருகிறது!’ என்ற வாசகங்கள் தான் படம் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

பயணத்திற்கு முந்தைய நாயகன், பிந்தைய நாயகன் – என இருவருக்குள் தான் எத்தனை மாற்றம். இயல்பான காட்சிகளின் மூலம்  அந்த மாற்றத்தை இயல்பாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்கள்.


அந்த கதாபாத்திரமாகவே பகத்பாசில் மாறியிருக்கிறார்.  நெடுமுடி வேணுவும் கலக்கல். சுவாதி இயல்பாக வலம்வருகிறார்.  ஒரு சிறிய பாத்திரத்தில் நம்மூர் பிரேம்ஜியும் வருகிறார்.


பயணம் சார்ந்த கதை என்பதால், கேரளத்தின் பல பகுதிகளை அவ்வளவு குளுமையாக காட்டியிருக்கிறார்கள்.  மலையாளப்படத்திற்கே உரிய மெதுவாக செல்லும் தன்மை இருக்கிறது!


பந்த் என்றால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அரசியலற்று இயக்குநர் இருந்தால், பந்த் என்றாலே தப்பு என்கிற அளவிற்கு காட்சிகளை நகர்த்தியிருப்பார். இந்த இயக்குநருக்கு அரசியல் அறிவு இருப்பதால், அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக காட்டியிருக்கிறார்.


2013ம் ஆண்டுக்குரிய சிறந்த மலையாள படம் என்ற தேசியவிருதை வென்றிருக்கிறது! பார்க்கவேண்டிய படம்! பாருங்கள்!

1 comment:

Unknown said...

கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஜாலியான படம். நான் மிகவும் ரசித்துப் பார்த்த படங்களுள் ஒன்று.