Saturday, October 4, 2008

பேச்சிலர் சமையல்!

வேலைக்காக தன் சொந்த ஊர், மற்றும் குடும்பத்தை விட்டு விட்டு, சிறு நகரங்களில், மெட்ரோ சிட்டிகளில் வாழும் பல இலட்சகணக்கான இளைஞர்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனை சாப்பாடு.
சென்னையில் 10 ஹோட்டல்கள் ஒரு ஏரியாவில் இருந்தால்... ஒன்று மட்டுமே ஏதோ தோறும். நல்ல ஹோட்டலாய் பார்த்து, பார்த்து சாப்பிடுவதற்கு நேரமும் இருப்பதில்லை. போதுமான பணமும் இருப்பதில்லை.
விளைவு. அல்சர். ஒரு குறிப்பிட்ட காலம் பிறகு தான் இந்த பிரச்சனை எழும். ஆனால், வந்துவிட்டால் பல்வேறு அவஸ்தைகள். அதற்கு பிறகு ஒரு வேளை கூட கவனம் இல்லாமல் இருக்க முடியாது. காரல் இல்லாமல், உறப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொல்லை தான்.
பல்வேறு பேச்சிலர் நண்பர்கள். பல்வேறு பிரச்சனைகள். இதிலிருந்து தப்பிக்க அறையிலேயே சமைப்பது என்ற முடிவுக்கு வரும் பொழுது, என்னசமைப்பது. எப்படி சமைப்பது என்ற பிரச்சனை எழுகிறது.
எங்களுக்கும் இந்த பிரச்சனை வந்து, ஒரு சுபயோக சுபதினத்தில்(!) ஏற்கனவே சமைத்த அனுபவத்தை மூலதனமாக வைத்து சமைக்கத் தொடங்கினோம். அதிலும் பல்வேறு பிரச்சனைகள். ஒரு புரிதலுடன் பரஸ்பரம் பேசி, விவாதித்து வெற்றிகரமாய் சமைத்து அதில் சமையலில் பல அனுபவங்கள் கண்டோம்.

மேலும், சமைக்கத் தொடங்கியதும், சமையலில் எங்களுக்கு இருந்த அறிவு மிக குறைவு என அப்பொழுது தான் புரியத் தொடங்கியது. எலுமிச்சைப் பழ சோறு கிண்டலாம் என செய்ய ஆரம்பித்தால், செய்முறையில் எங்கோ தப்பி... சட்டி முழுக்க கருப்பாய் ஏதோ லேகியம் போல ஆகிவிட்டது.

கருப்பட்டியில் டீ போடலாம் என யோசித்து, போட்டால் பால் திரிந்தது. "கெட்டுப்போன பாலை கொடுத்திட்ட! கடைக்காரனோடு மல்லுக்கட்டி, புதுப்பால்வாங்கி திரும்பவும் முயற்சித்தால், மீண்டும் திரிந்தது. பிறகு தான் தெரிந்தது "கருப்பட்டியில் பால் திரியும்" என்பது.



கறிக் குழம்பு வைக்க ஆரம்பித்து... 99% சதவிகித வேலைகள் முடித்து, கொஞ்சம் வற்றியதும் இறக்கி வைக்க வேண்டிய வேலை மட்டும் பாக்கி இருக்கும்.ஏதாவது பேச ஆரம்பித்து ஆர்வத்தில் பேச்சு நீளும் பொழுது, ஒரு கருகிய வாடை அடுப்படியிலிருந்து வரும். போச்சு..அருமையான கறிக்குழம்பு... கருகிய குழம்பாய் மாறியிருக்கும்.

கடைகளில் நிறைய புத்தகங்கள் விற்கிறார்களே! என வாங்கி பார்த்தால், ஏற்கனவே சமையலில் புலியாய் இருப்பவர்களுக்கு பயன்படுகிற புத்தகங்கள் தான்அதிகம். அல்லது வெரைட்டிக்காக புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை புது முயற்சிகள் செய்தாரோ! அதைவிட அதிகமாய் முயற்சிகள் செய்தோம். பல தோல்விகள். சில வெற்றிகள். அவற்றை பகிர்ந்துகொள்ளும் விதமாக மாதம் ஒரு பதிவோ, அல்லது இரண்டோ எழுத உத்தேசம். மற்றபடி... உங்கள் பதில்கள் கண்டு. பதிவர்கள் பலர் இந்த பிரச்சனைகளைஎதிர்கொண்டு இருப்பீர்கள். நீங்களும் இது சம்பந்தமாக கருத்து சொல்லலாம்.

2 comments:

Anonymous said...

சோறு குழைந்து விட்டதேனு கவலையில் வந்து தமிழ்மணத்தை பார்த்தால் :(

குமரன் said...

வந்து படித்து, கருத்து சொன்னதற்கு நன்றி.

ஆங்காங்கே, குண்டு வெடித்துக் கொண்டிருக்கும் பொழுது, வெடிகுண்டு முருகேசனு எப்படித்தான் தெகிரியமா பேர் வைக்கிறீங்களோ!

பின்குறிப்பு : இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னெவென்றால், எனக்கும் இவருக்கும் இந்த பின்னூட்டத்தைத் தவிர எந்த தொடர்பும் இல்லை மக்களே!