
மும்பையில் ஒரு நட்சத்திர விடுதி தனது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த ஆட்டம் ஆட பிபாசா பாசுவை (என்கிற அழகிய பிசாசுவை - இப்படித்தான் ஆனந்தவிகடனில் எழுதுகிறார்கள்) ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம். இரண்டு கோடி சன்மானம். கடந்த ஆண்டில் தீவிரவாதிகள் நட்சத்திர விடுதிகளை தாக்கியதில், கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். இந்த முறை பழைய உற்சாகம் துவங்கிவிட்டது.
சென்னையில் கூட நம்பர் ஒன்னாக (!) முன்னேறி கொண்டிருக்கும் நம்ம தமன்னாவை ஒரு நட்சத்திர விடுதி ஒரு ஆட்டம் போட கோடியில் கூப்பிட்டார்களாம். என்ன நடந்ததோ தெரியவில்லை. சொந்த ஊருக்கு போகிறேன் என சொல்லிவிட்டாராம்.
புதிய தாராளவாத கொள்கைகளால் செழிப்படைந்த ஒரு கும்பல் புத்தாண்டை வரவேற்க குதூகலத்துடன் தயாராகி விட்டனர். புதிய வகை கார்கள், புதிய வகை செல்கள் என சந்தையில் புதிய ஆண்டில் விற்க தயாராக நிற்கின்றன. பெருநகரங்களிலும், நகரங்களிலும் இருபத்தி நாலு மணி நேரமும் வாயாடுகிற பண்பலைகள் புதிய ஆண்டை வரவேற்க எல்லோரையும் உற்சாகப்படுத்தி கொண்டிருக்கின்றன. பணபலை வாயாடன்கள்/வாயாடிகள் குரலில் என்ன ஒரு உற்சாகம், குதூகலம். இதெல்லாம் ஒரு புறம்.
மற்றொரு புறம், கடந்த மாதத்தில் ரூ. 36 க்கு விற்ற பொன்னி அரிசி இந்த மாதம் ரூ. 40 ஆகிவிட்டது. எண்ணெய், பருப்பு என அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் எங்கோயோ எகிறி நிற்கிறது.

ஆனால், தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பளம் உயர மறுக்கிறது. பொருளாதார மந்தத்தை காரணம் காட்டி போனஸ் இல்லையென்றார்கள். சம்பள உயர்வு வெட்டு என்றார்கள். உற்பத்தி சுருங்கிவிட்டதாம்.
ஏண்டா! உற்பத்தி நன்றாக இருந்து லாபம் கொழித்த பொழுது, அள்ளியாடா கொடுத்தீங்க! என கேள்வி தொண்டை வரைக்கும் வருகிறது. வெளியே வர தயக்கம் வருகிறது. சிக்கல்கள் பெருகிவிடும் என்ற பயம்.
இப்படி மக்கள் அடிப்படை பிரச்சனைகளில் அல்லாடும் பொழுது, நமது மானமிகு பிரதமர் இந்த நாட்டுக்கு பெரிய ஆபத்து தீவிரவாதம், மதவாதம், நக்சலிசம், தேசியவாதம் என்கிறார். ஆமாம். அவர்களது கவலை அவர்களுக்கு. நமது கவலை நமக்கு.
உலகம் இரண்டாக பிளவுபட்டிருப்பது இப்பொழுதெல்லாம் பளிச்சென தெரிகிறது.
இப்பொழுதெல்லாம், வீட்டிற்குள் உள்ளே புகுந்து 500 சவரன் திருட்டு! என படிக்கும் பொழுது, உள்ளுக்குள் சின்னதாய் சிரிப்பு எழுகிறது.
பையில் உள்ள பத்து டாலருக்காக அமெரிக்காவில் கொலை நடக்கும் என்கிறார்கள். இந்தியாவிலும் விரைவில் இந்த நிலை வந்துவிடும். உள்ளுக்குள் பட்சி சொல்கிறது.