Monday, July 4, 2011

மனிதர்கள் 5 - பாலா


"இவர் பாலசுப்பிரமணியன். நம்ம அலுவலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கிறார்" என அறிமுகப்படுத்தினார்கள். நெற்றியில் திருநீர் பட்டை. சராசரிக்கும் மேலான உயரம். சாந்தமான முகம். வயது 22ஐ தாண்டாது.
****

இரண்டு மாதத்தில் நன்றாக பழக்கம் ஏற்பட்டிருந்தது. பாலாவிற்கு இந்தியாவின் பிரதமர் யார்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்? போன்ற முக்கிய செய்திகள் மட்டும் தெரிந்திருந்தன (!). மற்றபடி எது கேட்டாலும், அப்பாவியாய் தெரியாது என்பான்.

"சாயந்திரம் போய் வீட்டில் என்ன செய்வாய்?" என கேட்டால், " இரவு 8.30 க்கெல்லாம் படுக்கைக்கு போயிருவேன்" என்றான். இத்தனை வயதில், இதுவரை பழகியவர்களில் முதன்முதலாக 8.30 க்கே தூங்க போகிற ஆளை ஆச்சர்யமாய் பார்த்தேன்.

ஏதாவது செய்திகள் சொன்னால், "உங்களுக்கு எப்படி இவ்வளவு செய்திகள் தெரிகிறது?" என்பான் விழிகள் விரிய! "டீக்கடையில் தினமும் தினத்தந்தி படிப்பேன்" என்பேன் நக்கலாய்!

*****
சைக்கிளில் வந்த பாலா, இப்பொழுது ஹோண்டா பைக்கில் வந்தான். "என்ன பாலா? கலக்குறே!" என்றால், "நான் காலேஜ் படிக்கும் பொழுதே, டிவிஎஸ் 50 வாங்கிக்க சொன்னார் அப்பா. ஓட்டுனா பைக் தான்னு பிடிவாதமாய் இருந்துட்டேன்" என்றான். "வைராக்கியமான ஆளுன்னு சொல்ற!" என்றேன்.

நாலைந்து மாதங்கள் கழித்து, மீண்டும் அதே பழைய சைக்கிளில் வர ஆரம்பித்தான். "என்னாச்சு பாலா?" "இரண்டு மாதமா பைனான்சுக்கு பணம் கட்டல! வண்டியை தூக்கிட்டு போயிட்டாங்க!" என்றான் சோகமாய்!

*****

ஒரு வருடம் கழிந்தது. இருபது நாளாக பாலாவைக் காணோம். திரும்ப வந்த பொழுது, "நான் இப்ப எல்.ஐ.சி ஏஜெண்ட்" என்றான். என் எதிர்காலத்தை சொல்லி, பயமுறுத்தி ஒரு பாலிசி எடுக்க வைத்தான். நண்பர்களையும் அறிமுகப்படுத்த சொன்னான். "என்னைய விட எல்லோரும் ஏழை. விட்டுரு!" என்றேன். விட்டுவிட்டான்.

****

6 மாதம் உருண்டோடியது. "நான் ஒரு ஜெராக்ஸ் கடை திறக்கப்போறேன். வாங்க!" என்றான் பாலா. "எப்படி?" என்றதற்கு, "அப்பா மூலமாக ஒரு வங்கி ஊழியர் அறிமுகமாகி, கடன் வாங்கினேன்" என்றான். போய் பார்த்தால், எட்டுக்கு எட்டு. ஒரு சின்ன கடை. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது. 10வது வரை படித்த ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். பாலா இப்பொழுது முதலாளி.

****

4 மாதம் கழித்து, "நான் செகன்ட் ஹேண்ட் டாடோ சுமோ வாங்கியிருக்கேன். டிராவல்ஸ்க்காக தான். பர்மிட் ஏதும் எடுக்கல! தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டியது தான்!" என்றான்.

"என்ன பாலா! விக்ரமன் பட நாயகன் மாதிரி எல்லாம் பண்ற! கவர்மென்டையும் ஏமாத்த நினைக்கிற! கொஞ்சம் நிதானமா போ!" என்றேன்.

"ஒண்ணும் பிரச்சனையில்லை. அதெல்லாம் சமாளிச்சுருவேன். கேரண்டி கையெழுத்து ஒருத்தர் போடணும். நீங்க போடுங்க!" என்றான் உரிமையாய்.

"நான் அவ்வளவு ஒர்த் இல்லையே! இந்த ஓட்டை டிவிஎஸ் 50 தவிர, வேற எந்த சொத்தும் இல்லையே!" என்றேன்.

"அதெல்லாம் ஏதும் தேவை இல்லை. வாங்க!" என்றான். போனேன். என் கையெழுத்த நம்பி சுமோ லோனா?! சிரிப்பு வந்தது. கையெழுத்திட்டேன். பாலாவின் அப்பா, நன்றியெல்லாம் சொல்லி, அரை கிலோ ஸ்வீட் வாங்கி தந்தார். இது வேறயா!

****
அந்த அலுவலகத்தை விட்டு, வெளியே வந்துவிட்டேன். இருப்பினும் நட்பு தொடர்ந்தது.

பகலில் அலுவலக வேலை, மாலையில் எல்.ஐ.சி வேலை, 8 மணிக்கு மேல் ஜெராக்ஸ் கடை என பாலா பரபரப்பாக இயங்கினான். இப்பொழுதெல்லாம் தூங்க 11.30 ஆனது.

5 மாதம் கழித்து சந்தித்த பொழுது, டல்லாக தெரிந்தான். "என்னப்பா?" என்றேன். டாடா சுமோ நிறைய செலவு வைக்குது. செலவுக்கு தகுந்த வருமானம் இல்ல! வித்துரலாம்னு இருக்கேன்" என்றான். சிட்டி பைனான்சில் கடன் வேறு ஏறிக்கொண்டே இருக்கிறது என்றான்.

****

பாலாவிற்கு பெண் தேடினார்கள். அப்பா அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். வயது 75க்கு மேலே! பொருளாதார பலம் ஏதும் இல்லை. பெண் வீடு பலமாய் இருந்தால் பாலாவுக்கு நல்லது என வசதியான பெண்ணாக தேடினார்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். 60 வது பெண் பார்த்த பொழுது, பொருந்தி வந்தது.

திருமணத்திற்கு முதல்நாள் . பாலாவின் அப்பா விடிகாலையில் இறந்தார் திருமணத்தை நிறுத்தினால், மீண்டும் திருமணம் நடத்துவதற்கான வசதி பாலாவின் குடும்பத்தாரிடம் இல்லை. ஆகையால், அன்று மதியமே அடக்கம் செய்தார்கள். அடுத்த நாள் கல்யாணம் நடைபெற்றது. மறுநாள் மாலையில் பெண்ணின் அப்பா இறந்து போனார். அவரும் வயதானவர் தான். இரண்டு மரணங்களும் பாலாவை கொஞ்சம் கலக்கிவிட்டது.

****

பாலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பார்க்க போயிருந்தேன். பாலா நிறைய சோர்ந்திருந்தான். விசாரித்தால், இடையில் ஒரு டிப்ளமோ தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஹாஸ்டல் நடத்தியதாகவும், பொருளாதார பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்பொழுது, சில பிரச்சனையால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றான். கவனமாக எதையும் செய் என்று சொல்லி வந்தேன்.

****

பாலா பற்றி, வேறொரு அலுவலக நண்பரிடம் பேசிய பொழுது, பாலா இப்பொழுது பணப்பிரச்சனையில் சிக்கி இருப்பதாகவும், தன்னிடம் வாங்கிய எல்.ஐ.சி பாலிசி பணத்தை கூட கட்டாமல் விட்டுவிட்டான் என்றார். பாலாவிற்காக கவலைப்பட்டேன்.

***

பலரிடமும் தொலைபேசி எண் கேட்டு, சிரமப்பட்டு பாலாவை தொடர்பு கொண்டேன். "என்னாச்சு இவ்வளவு பிரச்சனை?" என்றதற்கு, "அதெல்லாம் ஒன்றும் இல்லையே!" என்றான். "உண்மையை சொல்!" என்றதற்கு, தயங்கி, தயங்கி "கிட்டத்தட்ட 4 லட்சம் கடன். மாதம் 25 ஆயிரம் இருந்தால் தான் சமாளிக்கவே முடியும்" என்றான். "வருமானத்திற்கு வழி உண்டா!" என்றேன். "இல்லை" என்றான். அவன் இருந்த ஊரில் 4 லட்சம் கடன் இருந்து, வருமானத்திற்கும் வழி இல்லையென்றால் தற்கொலையை தவிர வேறு ஏதும் வழி இல்லை.

"எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்னைக்கு பஸ்ஸோ, ரயிலோ ஏறு! இங்கு வந்து வேலை செய்! கடனை பிறகு பார்த்து கொள்ளலாம்!" என்றேன். "யோசித்து சொல்கிறேன்" என்றான்.

அதற்கு பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ளவும் இல்லை.

****
சில ஆண்டுகளில், வாழ்க்கை பாலாவிற்கு எவ்வளவு கற்றுத்தந்துவிட்டது என்பதை நினைக்கையில் ஆச்சரியமாயிருக்கிறது.

***

டெயில் பீஸ் : பாலா ஒருமுறை சென்னை வந்திருந்தான். அபிராமி தியேட்டர் அருகே ஒரு முனையில், ஓடுகிற பஸ்ஸில் ஏறி, ஒரே ஒரு சீட் இருந்து, அமர, பேருந்து நிறுத்தம் வந்தது. செக்கர் ஏறி சோதனை செய்ய, பாலாவிடம் டிக்கெட் இல்லை. கடந்த வளைவில் தான் ஏறினேன் என்றதற்கு, ஒரு வயதான அம்மா "இந்த தம்பி இரண்டு நிறுத்தத்திற்கு முன்பே ஏறியது. நான் பார்த்தேன்" என தவறாய் சொல்ல, அழுதழுது ரூ. 500 அபராதம் கட்டினான்.

1 comment:

Anonymous said...

:)