Friday, July 8, 2011

பொன்னியின் செல்வன் இறுதிபாக (நொந்த) கிளைக்கதை!



முன்குறிப்பு : புதையல் தேடி கெளபாய் வீரர்கள் புறப்படுவார்களே, அது போல பொன்னியின் செல்வன் இறுதிபாகத்திற்காக நான் அலைந்து திரிந்த அனுபவம் இது. சுவாரசியமான சம்பவங்களும், திடீர் திருப்பங்களும் கொண்டது.

முதல் அத்தியாயம் டிசம்பர் 2009ல் தொடங்கி, ஒவ்வொரு அத்தியாயமாக மொத்தம் 8 அத்தியாயங்களை மே 2010ல வரை எழுதிமுடித்தேன். ஏதாவது ஒரு அத்தியாயம் எப்பொழுதாவது உங்கள் கண்ணில்பட்டிருக்கலாம். இப்பொழுது புதியதாய் முடிவுரை எழுதி, மொத்தமாய் பதிவிட்டிருக்கிறேன்.

கொஞ்சம் நீளம் தான். எட்டு அத்தியாயமாயிற்றே! பொறுமையாய் படித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் தன்யானாவேன்.

*****

அத்தியாயம் - 1

இடம்: பகுதியில் இயங்கும் பொது நூலகம்

"இத்தனை பாகம் படிச்சுட்டேன். இறுதி பாகத்துக்கு மட்டும் இப்படி ஒரு விதியை சொன்னீங்கன்னா! எப்படி சார்? புரியல!" என்றேன்

"நூறு ரூபாய்க்கு மேல உள்ள புத்தகத்தை இங்கேயே தான் படிக்கனும்னு இப்ப தான் விதி கொண்டு வந்திருக்காங்க! நாங்க என்ன செய்ய முடியும்?" என்றார் நூலகர்.

வந்தியத்தேவன், குந்தவை, அருண்மொழிவர்மன், வானதி-க்கெல்லாம் என்ன ஆயிற்றோ! என பதைபதைப்பாய் இருந்தது. எப்படி வாங்குவது? இப்படியே எடுத்துக்கொண்டு திடு திடுன்னு ஓடிப்போயிடாலாமா? என்று கூட யோசனை வந்தது.

"சார்! இந்த காலத்துல புத்தகம் படிக்கிற பழக்கமே மக்கள்கிட்டே குறைஞ்சுகிட்டே வருது! மக்களை படிக்க விடாம பண்ணுறதுக்கு தான் அரசு இப்படி ஒரு விதி போட்டிருக்கு!" என்றேன் குரல் உயர்த்தி கோபமாய்!

படித்துக் கொண்டிருந்த வாசகர்கள் எல்லோரும் ஒருமுறை திரும்பி பார்த்தார்கள்.

"அதெல்லாம் ஒன்னும் கிடையாது தம்பி. படிக்க எடுத்துட்டு போனா... பொறுப்பா கொண்டு வருவது கிடையாது. 10ரூ சந்தா கட்டிட்டு, 200 ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்து போயிடுறான். நாங்க மாற்றலாகி வேறு நூலகம் மாறி போகும் பொழுது, கணக்கு காட்டிட்டு போக சொல்லுது அரசு! அந்த சமயத்துல நாங்க வீடு வீடா தேடிப்போய் வாங்கி வர வேண்டியிருக்கு. அப்படியும் கிடைக்கலையா! புத்தகத்துக்குரிய பணத்தை எங்க தலையில கட்டிடுறாங்க!" என்றார் புலம்பியபடி.

"அது சரி சார்! இங்க உட்கார்ந்து புக் படிச்சிட்டிருந்தா... பொழப்பை எப்படி சார் பார்க்கிறது?" என்றேன்.

"உங்க நிலைமை புரியுது! நான் உதவி நூலகர். நூலகர் இரண்டு நாள் விடுப்பில் இருக்கிறார். அவர் வந்ததும் பேசி, வாங்கிக்கங்க! என்றார்.

எப்பொழுதும் பிசியாய் இருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. புத்தகத்தை ஏக்கமாய் பார்த்தபடி, டேபிளில் வைத்துவிட்டு வெளியே வந்தேன். சூரியன் தலை சாய்த்து இருள் கவ்வியிருந்தது. (எல்லாம் நாவலோட பாதிப்பு தான்!)

****
அத்தியாயம் - 2

இரண்டு நாட்களை கடத்துவதற்கு, நிறைய சிரமப்பட்டேன். பல நாட்கள் ஆனது போல இருந்தது. இதனால் சாப்பாடு கூட சரியாக உள்ளே இறங்க வில்லை. (இலக்கியத்தின் மீது இப்படி ஒரு காதலா! என என நீங்கள் என்னை பாராட்டுவது எனக்கு கேட்கிறது!) இன்றைக்கு எப்பாடு பட்டாவது பொன்னியின் செல்வன் -ன் இறுதி பாகத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடம் : பொது நூலகம் நேரம் : காலை 10 மணி

நூலகர் சீட்டில் இருந்தார். அப்பாடா! இன்றைக்கு கிடைத்துவிடும் நம்பிக்கை வந்தது.

நூலகரிடம் 30 வயது மதிப்பு கொண்ட ஒருவர் ராஜேஷ்குமார் நாவலைப் பற்றி சிலாகித்து " என்னா ட்விஸ்ட்! என்னா சஸ்பென்ஸ்! சான்ஸே இல்லை சார்! ராஜேஷ்குமார்னா ராஜேஷ்குமார் தான் சார்"

டே! நாலு கழுதை வயசாச்சு! இன்னும் ராஜேஷ்குமார் நாவலிலேயே நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கான் என மனதில் திட்டினேன். நாம பரவாயில்லை. நாலாம் வகுப்பில் சிந்துபாத்தில் தொடங்கி, 7ம் வகுப்பில் அம்புலிமாமா படித்து, 16 வயதில் ராஜேஷ்குமார்-ன் விவேக் துப்பறியும் அறிவை கண்டு வியந்து, பிறகு பட்டுகோட்டை பிரபாகர்-ன் நொந்தகுமாரனில் விழுந்து விழுந்து சிரித்து, பிறகு பாலகுமாரனிடத்தில் தொபுக்கடீர்னு விழுந்து எழ முடியாமல் எழுந்து, சுஜாதாவிடம் 22 வயதில் சிக்கிகொண்டேன். இப்ப கல்கி. எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்து கொண்டேன்.

ராஜேஷ்குமார் ரசிகரிடம் பேசி அனுப்பி விட்டு, என்னிடம் "என்ன தம்பி?" என்றார்.

பவ்யமாய் "சார்! என் நண்பன் காமராஜர் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பண்றார். தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்வதால், சில தமிழ் நாவல்களிலிருந்து சில குறிப்புகள் தேவைப்படுது. அதனால்...!"

"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க!" என நக்கலாய் இடைமறித்தார்.

"அந்த ஆய்வுக்காக(!) பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் தேவைப்படுது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து கேட்டேன். (பாழாய் போன அரசு விதியை எல்லாம் ஞாபகப்படுத்தாமல்... கவனமாய் தவிர்த்து) உங்க கிட்டே கேட்டு வாங்கிட்டு போகலாம்-னு உதவி நூலகர் சொன்னார்" என்றேன்.

'சரி தம்பி! எடுத்துங்க! லேட் பண்ணாம கொண்டு வந்திருங்க!" என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி, ஆர்வமாய்.. கனமான புத்தகங்கள் இருக்கும் வரிசையில்... வேகமாக போய் தேடினேன். அருகில் ஒரு பெண் புத்தகம் தேடிக்கொண்டிருந்தார். எதைச்சையாய் என்னை பார்த்தார். எனக்கு தூக்கிவாரி போட்டது. அப்படியே! பொன்னியின் செல்வனில் வருகிற நந்தினி! கொஞ்சம் தலையை சிலிப்பி கொண்டு பார்த்தால்.. நந்தினின் சாயலோடு இருந்தார். நான் அதிர்ச்சியாய் பார்த்ததில் அந்த பெண் ஒரு மாதிரியாய் பார்த்து, அவசரமாய் அடுத்த செல்புக்கு புத்தகம் தேட நகர்ந்தாள்.

கனமான புத்தகங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தேடினேன். புத்தகத்தை காணவில்லை. முகம் வாடிபோனது. நூலகர் புத்தகம் வெளியே போன விசயம் தெரிந்து தான், அனுமதிச்சுட்டாரோ! என சந்தேகம் வந்தது.

மீண்டும் நூலகரிடம் இல்லாததை வந்து சோகமாய் சொன்னேன். லெட்ஜரில் தேடி..

"ஆமா! வெளியே போயிருக்கு. ஒரு வாரம் கழிச்சு வாங்களேன்! என்றார் கூலாய். (என் அவஸ்தை புரியாமல்)

இதற்கிடையில் வெளியூரில் வேலை கிடைத்தது. இனி அடிக்கடி புத்தகம் வந்துவிட்டதா என பார்க்க முடியாதே என வருந்தினேன். இலக்கியத்தில் ஆர்வமாய் இருக்கும் நண்பன் ஒருவனிடம் என் அவஸ்தையை விளக்கி... எடுத்து வைக்க சொல்லி... டாட்டா காட்டி ஊருக்கு புறப்பட்டேன்.

அடுத்த வந்த இரவுகளில்... ஆழ்வார்க்கடியான் தன்னந்தனியனாக காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தான். வானதி, குந்தவை பிராட்டியார் கனவில் வந்து போனார்கள்.
*****

அத்தியாயம் - 3

இடம் : நண்பன் வீடு நேரம் : காலை 11 மணி

இருபது நாட்கள் கழித்து, சொந்த ஊருக்கு வந்தேன். ஆவலாய் நண்பனைச் சந்தித்தேன். அவன் என் அவஸ்தையை புரிந்து கொண்டு, ஆய்வு கதையை கொஞ்சம் நூலகரிடம் நினைவுப்படுத்தி கொஞ்சம் அலைந்து.. பொறுப்பாய் எடுத்து வைத்திருந்தான்.

பொன்னியின் செல்வனின் இறுதி பாக கனத்த புத்தகத்தை தடவிப் பார்த்தேன். (பீலீங்!)

"ஊருக்கு எடுத்துட்டு போறேன். இரண்டு வாரத்திற்குள் முடித்துவிடுவேன். கொடுத்துவிடலாம்" என்றேன்.

"இல்லைடா! நீ ஊருக்கு போன 6வது நாளே எடுத்துட்டேன். வழக்கம் போல 14 நாட்கள் கெடு கொடுத்திருந்தார்கள். இப்பொழுது முடிந்துவிட்டது. போய் ரெனிவல் (புதுப்பித்துவிட்டு) பண்ணிட்டு தருகிறேன்" என்றான் மிக பொறுப்பாய்!

இதென்ன புது பிரச்சனை. எனக்கென்னவோ அவன் வார்த்தைகளில், புத்தகம் கை நழுவி போகிற மாதிரி இருந்தது. புத்தகத்தை இறுக்க அணைத்து கொண்டேன்.

"வேண்டாம்டா! போய் ரெனிவல் பண்ணி கேட்டு... தந்துவிட்டால் பிரச்சனையில்லை. தராவிட்டால் ரெம்ப டென்சனாயிடும்!" என்றேன்.

"இல்லையில்லை! நீ வா! ரெனிவல் பண்ணி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது! கவலைப்படாதே! நீ 4 மணிக்கு நேரா நூலகத்துக்கு வந்துரு! நானும் வந்துவிடுகிறேன்!" என சொன்னான். இறுதி பாகமான "தியாக சிகரத்தை" ஏக்கமாய் ஒருமுறை தடவி பார்த்துகொண்டேன். புத்தகத்தைப் பார்த்து... "நீ எனக்கு கிடைச்சுருவேயில்ல!" என்றேன் மனதுக்குள்!

இடம் : நூலகம் நேரம் : மாலை 5 மணி

நம்ம கெட்ட நேரத்திற்கு நூலகர் சீட்டில் இல்லை. உதவி நூலகர் தான் சீட்டில் இருந்தார். பகீரென ஆகிவிட்டது. திரும்பவும் நண்பனிடம் சொன்னேன். "வேண்டாம்டா! உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது! இந்த ஆள் தரமாட்டான் என!" என்றேன். "நானாச்சு! வா" என இழுத்துப்போனான்.

நேரே போய், ரெனிவல் பண்ணி தர சொல்லி கேட்டான். அவரும், புத்தகம் திரும்பி வந்ததற்கான பதிவை எல்லாம் எழுதினார். நிமிர்ந்து.... நண்பனை பார்த்து...

":தம்பி! நீங்க வாங்கிட்டு போனதுக்கு பிறகு, நூலகர் லெட்ஜரைப் பார்த்துட்டு, எதுக்கு கொடுத்தீங்க? என எனக்கு டோஸ்விட்டார். அதனால், இப்ப கொடுக்க முடியாது!" என்றார்.

நண்பனின் முகம் வெளிறிப் போனது. அவனின் தர்ம சங்கட நிலைமையை பார்த்து, அந்த டென்சனிலும் எனக்கு சிரிப்பு வந்தது.

பிறகு, இருவரும் ஆய்வுக்கதை, வேலைக் கதை, நேர்மை கதை - என பல அஸ்திரங்களை தொடுத்தோம். "நூலகர் பூதத்தை"க் காட்டி, எல்லாவற்றையும் சளைக்காமல் முறித்து போட்டார்.

இனி, பேசுவது வீண் என பட்டது. தலை தொங்கி, இருவரும் வெளியேறினோம்.

என்னைப் பார்த்து..."ஸாரிடா!" என்றான். புத்தகம் கிடைக்கவில்லை என்றாலும்... நண்பனின் நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.

பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் உலகத்திலேயே ஒரு புத்தகம் தான் இருக்கா என்ன! வேறு வகைகளில் தேடலாம் என, முயற்சியில் தளரா விக்கிரமாதித்தனை போல, வெளியே வந்தோம்.

*****
அத்தியாயம் - 4

நூலகத்தை விட்டு வெளியே வந்ததும்... "நூலகரைப் பார்த்து நானே வாங்கித் தர்றேன்டா" என்றான் குற்ற உணர்வுடன்!

"வேண்டாண்டா! புத்தகம் அடிக்கடி வெளியில போயிருது. நூலகரும் அடிக்கடி விடுப்புல போயிறாரு! இந்த புத்தகத்தை நம்புனா ரெம்ப காலம் இழுக்கும் போல தெரியுது! வேற வழியில முயற்சிக்கிறேன்" என்றேன்.

நான் சொன்னதை ஏற்றுக்கொள்வது போல, நண்பன் அமைதியாய் இருந்தான்.

என் வீட்டு எதிரில் இருக்கும் ஒரு குடும்பஸ்தர் சாண்டில்யனின் பரம ரசிகர். அவருடைய படைப்புகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விரட்டி விரட்டி படித்தவர். என்னிடம் ஒரு முறை சாண்டியல்யனைப் பற்றி புகழ்ந்து பேசினார்.

"கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை அவ்வளவு அழகா.. அவரை மாதிரி யாரும் வர்ணிக்க முடியாது" என நினைவுகளில் ஆழ்ந்தார்.

புத்தகம் எல்லாம் எங்கு வாங்குகிறீர்கள் என கேட்டதற்கு, ஒரு தனியார் நூலக பெயரை சொல்லியிருந்தார். பொன்னியின் செல்வனின் இறுதி பாகத்தை அவர் மூலமாக படித்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அவரை பார்த்து, நாலுபாகங்களை படித்தது. இறுதி பாகத்தை மட்டும் படிக்க முடியாமல் போனது என எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னேன். கவனமாக கேட்டவர் "உங்க நிலைமை எனக்கு புரியுது தம்பி. கல்யாணம் நடந்ததுக்கு பின்பு இந்த இரண்டு வருசமா நான் எதுவும் படிக்கிறதே இல்லை. குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சனைகள். வேலையிலும் சில பிரச்சனைகள். (என்னது கல்யாணம் ஆன இலக்கியமெல்லாம் படிக்க முடியாதா?!) உங்களைப் போலத்தான் டோக்கனை கொடு நான் வைச்சுகிறேன்னு சொல்லி வாங்கிட்டு போனான். நானும் அதுக்கு பிறகு கேட்கவே இல்லை" என்றார்.

நாசமா போச்சு! இந்த நாவல் நமக்கு கைக்கு கிடைக்கவே கிடைக்காதா! மனதுக்குள் புலம்பினேன்.

அவரே தொடர்ந்து சொன்னார். "மேகலா தியேட்டருக்கு எதிரே தான் அவன் கடை வைச்சிருக்கான். அவன்கிட்ட என் பெயரை சொல்லி கேட்டீங்கன்னா... தந்திருவான்" என்றார். சரி என சொல்லி விடைபெற்றேன்.

சில அவசிய வேலைகளுக்காக விடுப்பு எடுத்திருந்ததால்... இறுதி பாகத்தை அதற்குள் கைப்பற்றிவிடவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்தேன்.

நான் போகும் சமயத்திலெல்லாம்... டோக்கன்காரர் கடையை விட்டு வெளியே போயிருந்தார் அல்லது கடை மூடியிருந்தது. ஒருவழியாக ஒரே நாளில் பலமுறை படையெடுத்து, டோக்கனை கைப்பற்றினேன். பாதி புத்தகம் கைக்கு வந்த மாதிரி இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புத்தகம் நம் கையில் இருக்கும் என நினைத்தாலே சந்தோசமாய் இருந்தது. சந்தோசமாய் நூலகத்தை நோக்கி சைக்கிளை விரட்டினேன்.
****
அத்தியாயம் - 5

அந்த தனியார் நூலகம் பிரதான சாலையில் அமைந்திருந்தது. வெளியே அப்படி ஒரு
இரைச்சல். உள்ளே நுழைந்ததும் சத்தம் காணாமல் போயிருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு பெண் அமர்ந்திருந்தார். கையில் ஒரு ஆங்கில நாவல். (ரேஞ்ச் தான்!)

நூலகம் சிறியதாய் இருந்தாலும், அடக்கமாய் இருந்தது. ஷெல்புகளில் புத்தகங்கள் நேர்த்தியாய் அடுக்கியிருந்தார்கள். ராஜேஷ்குமார், பி.கே.பி., அனுராதா ரமணன், பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சுஜாதா, அசோகமித்தரன் என எழுத்தாளர்களின் படைப்புகள் வரிசையாய் இருந்தன.

சரி பாதி ஆங்கில நாவல்கள். ஆங்கில நாவலெல்லாம் எப்ப படிக்க போறோம்? இப்படி நூலகத்துல வேலை கிடைச்சா எப்படி இருக்கும்? ஒரு வருடம் வேலை பார்த்தாலும், எல்லா நாவலையும் படிச்சிராலாமே! மனம் கணக்கிட்டது.

டோக்கனை கொடுத்து, பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் வேண்டும் என்றேன். அவர் கை காட்டிய ஷெல்பில் வேகமாய் போய் தேடினேன். இரண்டு செட்கள் இருந்தன. சில பாகங்கள் வெளியே போயிருந்தன. அவ்வளவு பிஸி!

இறுதி பாகத்தை கையில் எடுத்தேன். பழைய பதிப்பாக இருந்தது. அதலானென்ன! நாவலே 50களில் வெளிவந்தது தானே!

நான் எடுத்து வருவதற்குள், டோக்கனுக்கான லெட்ஜர் பக்கத்தை புரட்டி வைத்திருந்தார்.

'எவ்வளவு" என்றேன்.

"ரூ.95" என்றார்.

"வாடகை புத்தக விலையில் 10% தானே!" என்றேன் பதட்டமாய். பையில் 25 ரூக்கு மேல் தேறாது.

"ஏற்கனவே இந்த டோக்கன் மூலம் எடுத்து போன கடைசி புத்தகத்தை பல மாதங்கள் கழித்து தான் கொடுத்திருக்கார். அதனால் அபராதம் போட்டிருக்கிறோம்!" என்றார் கூலாய்.

எனக்கு தலை கிர் என சுற்றியது. இந்த இறுதி பாகத்தை படிக்கவே முடியாது போலிருக்கே! என புலம்பினேன்.

"அவ்வளவு பணம் கொண்டு வரவில்லை. புத்தகத்தை கொடுக்கும் போது, தரலாமா?!" என்றேன்.

'அதற்கு எங்களுடைய நூலக விதி ஒத்துக்காதே!" என்றார்.

பாழாய் போன விதிகள். டோக்கனை கொடுக்கும் பொழுது, அந்தாள் ஒன்னும் சொல்லவில்லையே! அவனை கெட்ட வார்த்தைகளில் மனதுக்குள் திட்டித்தீர்தேன். வேறு ஏதும் பேச தோன்றவில்லை. புத்தகத்தை ஏக்கமாய் பார்த்துவிட்டு, டோக்கனை வாங்கி கொண்டு, வெளியே வந்தேன்.

எல்லோரும் விர், விர் என சாலையில் வேகமாக போய்கொண்டிருந்தார்கள். நான் சைக்கிளை ரெம்ப சோகமாய் வீட்டுக்கு மிதித்தேன்.

வீடு வந்து சேர்வதற்குள்... புத்தகத்தை அடைய அடுத்த திட்டம் தயாராகியிருந்தது.
****

அத்தியாயம் - 6

முன்பெல்லாம் விடிகாலை கனவில் வானதியும், நந்தினியும் வந்தார்கள் என்றால்... இப்பொழுதெல்லாம் ஆழ்வார்கடியனையும், வந்தியத்தேவனையும் கொலைவெறியோடு துரத்திக்கொண்டிருந்த பாண்டிய மன்னனின் ஆபத்துதவிகள் "இன்னுமா இறுதிபாகத்தை படிக்கலை?!" என என்னை காட்டுக்குள் துரத்திகொண்டிருந்தார்கள்.

நிற்க. சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல அடுத்த முயற்சியை துவங்கினேன்.

நூலகங்களை அரசு ஏ, பி, சி என தரம் பிரித்து வைத்திருக்கிறது. வருடாவருடம் நூலகங்களின் தரத்திற்கேற்ப புத்தகங்களின் கொள்முதல் எண்ணிக்கையும் வேறுபடும் என பழைய நூலகர் சொல்லியிருந்தார். அதனால், முன்பு வேலை செய்த இடத்திற்கு அருகே உள்ள 'பி' தர நூலகத்தில் உறுப்பினராய் சேர்ந்திருந்தேன்.

முன்பொருமுறை வேறு புத்தகம் தேடும் பொழுது, பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகம் கையில் தட்டுப்பட்டதாய் ஆழ்மன நினைவு மேலெழும்பி சொன்னது. அந்த புத்தகத்தை கைப்பற்ற முயற்சிக்காலாமே என தோன்றியது.

நூலக டோக்கனை தேடினேன். நல்ல வேளை! வைத்த இடத்தில் பத்திரமாய் இருந்தது. நேரம் பார்த்தேன். நூலகம் திறந்திருக்கும். சைக்கிளை உற்சாகமாய் மிதித்து போய் சேர்ந்தேன்.

நூலகர் மாறியிருந்தார். உதவி நூலகர் எனக்கு பரிச்சயம். பார்த்ததும் புன்முறுவல் செய்தார். அவருடைய அறிமுகமும் வித்தியாசமானது தான். நான் புத்தகம் தேட ஆரம்பித்தால்... அரை மணி நேரமாவது ஆகும். அப்படியே நான் எடுத்து வருகிற புத்தகம் இதுவரை யாருமே கையில் தொட்டிராத புத்தகமாக இருக்கும். இதனாலேயே ஆச்சரியப்பட்டு என்னிடம் பேசினார்.

நேரே புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி பகுதிக்குள் சென்றேன். மங்கிய வெளிச்சம். முன்பு புத்தகம் தேடுகிற பொழுது, படிக்க கூடிய புத்தகங்கள் என சிலவற்றை... ஒரு இடத்தில் சேர்த்து வைப்பேன். அந்த இடத்திற்கு போய் முதலில் தேடினேன். சில புத்தகங்கள் இருந்தன. சில புத்தகங்களை காணவில்லை. அதில் ஒன்று பொன்னியின் செல்வனின் பாகமும் ஒன்று. என்னை மாதிரியே இலக்கிய தாகம் (!) கொண்ட ஒருவன் இடம் மாற்றி வைத்திருக்கிறான்.

வேறு வழியில்லை. பொன்னியின் செல்வனின் அளவு (தடிமன்) கொண்ட எல்லா புத்தகங்களையும் வரிசையாக தேட வேண்டியது தான். நூலக நேரம் வேறு குறைவாக இருந்தது. விரைவாக தேட ஆரம்பித்தேன்.

அலமாரி முழுக்க ஒரே தூசி. நூலாம்படை. தமிழகம் ஏன் இலக்கிய அறிவில் பின் தங்கி இருக்கிறது என புரிந்தது. இது பற்றி, பழைய நூலகரிடம் கோபமாய் முறையிட்டிருக்கிறென்.

"பக்கத்தில் நூலகத்திற்கென்று பெரிய இடம் ஒன்று வாங்கி கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. நானும் இப்ப முடியும். பிறகு முடியும் என நினைக்கிறேன். முடிந்த பாடு இல்லை. இந்த தூசியில் உட்கார்ந்தால் எனக்கு தான் உடல்நல பிரச்சனையாகிறது. அநேகமா திறப்பு விழா அன்றைக்கு நான் ரிடையர்டு ஆகியிருப்பேன்" என புலம்பினார்.

நேரம் நெருங்கி கொண்டிருந்தது. உடலில் பதட்டம் ஏறியது. இன்னும் ஒரு அலமாரி தான் பாக்கி. முன்னிலும் வேகப்படுத்தி தேடினேன். கைக்கு சிக்கியது. வேகமாய் பாகம் என்ன? என கண்கள் தேடியது. பாகம் 4. சோர்ந்து போனேன். ஆழ்மனது தப்பாக சொல்லியிருக்கிறது. தூ!

நூலகரிடம் வந்தேன். அழுக்கும் தூசியுமாய் வந்த என்னை விநோத ஜந்து போல பார்த்தார்.

போங்கய்யா! நீங்களும் உங்க நூலகமும்! இனிமேல் நூலகத்தை நம்பி பிரயோஜனமில்லை என முடிவுக்கு வந்தேன்.

பணத்தை திரட்டி... புத்தகத்தை புதிதாய் வாங்கி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

****
அத்தியாயம் - 7

நூலகங்கள் என்னை கைவிட்டுவிட்டன. புதிதாய் சேர்ந்த வெளியூர் வேலையில் இனி விடுப்பு எடுப்பதும் சிரமம். ஆகையால், அலைவதை விட்டுவிட்டு, சொந்தமாகவே இறுதி பாகத்தை வாங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். அண்ணணிடம் பணம் கேட்டேன். (அப்பா இல்லாத பிள்ளை நான்)

'எதுக்குடா?' என்றார்.

'நாவலுக்கு என்றால்!' வாய்ப்பே இல்லை. 1ரூ கூட வாங்கமுடியாது. நான் மற்றவர்களை போல இயல்பாக (!) இல்லாததற்கு, இந்த இலக்கிய சகவாசம் தான் காரணம் என முடிவு கட்டியிருந்தார். (ஆமா எப்ப பார்த்தாலும், எதாவது ஒரு புத்தகத்தை கையில வச்சிகிட்டு சுத்திகிட்டே இருந்தா!) ஏதோ சப்பையான காரணம் சொல்லி, இரண்டு நாள் கழித்து பணத்தை வாங்கிவிட்டேன்.

உள்ளங்கையில் உள்ள பணத்தை பார்த்தேன். ஒருநொடி பொன்னியின் செல்வனின் இறுதிபாகமாய் மாறி தெரிந்தது. இன்றைக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

எங்கள் ஊரில் புத்தக கடைகள் சொற்பம் தான். ஆனால், பொன்னியின் செல்வனுக்கு வாசகர்கள் பரந்துபட்டு இருப்பதால், எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கும். உற்சாகமாய் கிளம்பினேன்.

பரபரவென இருந்த காலை வேளையில்... அந்த புத்தக கடை மட்டும் மூடியிருந்தது. 'சீக்கிரமே வந்துவிட்டோமோ!' காலை 9.30 மணி. கடை திறக்கும் நேரம் என ஏதாவது போர்டு
மாட்டியிருக்கிறார்களா! என தேடிப்பார்த்தேன். காணவில்லை. சகுனமே(!) சரியில்லையே! இல்லாத மூட நம்பிக்கையெல்லாம், இந்த புத்தகத்தால் வந்துவிடும் போலிருக்கிறதே! என யோசித்தேன்.

நாலு தெருக்கள் தள்ளி... இரண்டாவது கடைக்கு போனேன். அப்பொழுது தான் கடையை கூட்டிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு முதல் வாடிக்கையாளர் நான் தான். இறுதி பாகத்தை விற்பனையாளனியிடம் கேட்டேன். 'கடந்த வாரம் தீர்ந்துவிட்டது. ஆர்டர் கொடுத்திருக்கிறோம். ஒரு வாரத்தில் வந்துவிடும்" என்றார். அடடா! இரண்டாவது வாய்ப்பும் போச்சே! உற்சாகம் 20% குறைந்தது. 'மனம் தளராதேடா!' என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

வேறு பகுதியில் இருந்த அடுத்த கடைக்கு போனேன். உள்ளே நுழைந்ததுமே பொன்னியின் செல்வன் புத்தகங்கள் வரவேற்றன. ஆகா! இதுவல்லவோ கடை. இறுதிபாகத்தை கையில் எடுத்து ஒருமுறை முகர்ந்து பார்த்தேன். நல்ல வாசனை. எனக்கு பிடித்த வாசனைகளில் முதன்மையானது புத்தகவாசனை. (சே! என்ன ஒரு அறிவு தாகம்; இலக்கிய தாகம்! என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது)

பணத்தையும் புத்தகத்தையும் பில் போட கேசியரிடம் நீட்டினேன். அவர் வாங்கி முகத்தைப் பார்த்தவர்...

'ஐந்தாம் பாகம் மட்டும் எடுத்திருக்கிறீர்கள்?! மற்ற பாகமெல்லாம்?!" என்றார் கேள்விக்குறியுடன்.

'அதெல்லாம் இருக்கு சார்!' என்றேன்.

"நாங்க தனியாக ஒரு பாகம் மட்டும் தர மாட்டோமே!' என்றார். மண்டையில் இடி விழுந்தது போல இருந்தது.

'ஏன் சார் தனியா தர மாட்டீங்க!' என்றேன் சோகமாய்.

'நாங்க செட்டு செட்டா தான் வாங்கறோம்! உங்களுக்கு ஒரு பாகம் மட்டும் கொடுத்துட்டா... மற்ற பாகமெல்லாம் அப்படியே தனியா நின்னு போயிரும்! என்றார்.

அவர் சொன்ன காரணத்தை அறிவு ஏத்துகிடுச்சு. மனசு கேட்கலையே!
வேறு ஏதும் பேச தோணவில்லை. மெதுவாய் வாசலுக்கு நடையே கட்டினேன்.

***
அத்தியாயம் - 8

எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது. 'இறுதிபாகம் இனி கிடைக்காது" என புரிந்தது. என்ன செய்யலாம் இனி?

சில நாள்கள் அமைதியாய் இருக்கலாம் என்ற முடிவுக்கு சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். கனவில் அவ்வப்பொழுது பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் வருவது... குறைந்து கொண்டே போனது.

சில நாள்கள் கடந்தன. ஒரு திரையரங்கில் வரிசையில் நிற்கும் பொழுது எனக்கு முன்னே ஒருவர் சின்சியராக கையடக்க புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். துப்பறியும் பாக்கெட் நாவலோ என நினைத்தேன். இல்லை. என்னடா! இது நம்மை போலவே இலக்கிய தாகம் உள்ளவராக இருக்கிறார் என ஆர்வமானேன். இரண்டு வரிகள் படித்த பொழுது... பொன்னியின் செல்வன் என தெரிந்தது.

சின்ன சைஸில் எப்படி? எல்லாம் மெகா பைண்டிங் புத்தகமாயிற்றே! என யோசித்து கொண்டே... அவரிடமே கேட்டேன். மலிவு விலையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாங்கியதாக சொன்னார். அவரிடமே முகவரி வாங்கி... அடுத்த நாளே போய் அந்த கடையில் ஆஜரானேன்.

மாநிலம் முழுவதும், புத்தக கண்காட்சிக்காக, குறிப்பிட்ட பதிப்பகத்தார் மலிவு விலையில் பிரசுரித்ததாகவும், வாங்கிய புத்தகங்கள் எல்லாம் கடந்த வாரம் நடந்த புத்தக திருவிழாவில் விற்று தீர்ந்து விட்டதாகவும், மேலும் நிறைய புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கடைக்காரர் உற்சாகமாக தெரிவித்தார்.

"ஒரு பிரதி இருக்கா?" என்றேன் பாவமாய்.

"புத்தக திருவிழாவிலேயே... ஸ்டாக் இல்லை.. ஸ்டாக் இல்லை சொல்லி சொல்லியே என் வாய் வலித்து விட்டது" என்றார்.

"போயா! நீங்களும் புத்தகமும்?"

திரும்பி பார்க்காமல் வீடு போய் சேர்ந்தேன்.

*****
முடிவுரை :

இதென்ன முடிவுரை? பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நன்றாக அறிவார்கள். இறுதிபாகத்தின் இறுதியில், கல்கி சில விளக்கங்கள், தந்திருப்பார். அது போல நானும் சில செய்திகள் சொல்ல வேண்டிய தேவையில் சொல்கிறேன்.

1. முதல் ஆறு அத்தியாயங்கள் என் சொந்த அனுபவங்கள். மீதி இரண்டு அத்தியாயங்கள் தகவல் சேகரித்ததின் அடிப்படையில் புனைவாக எழுதப்பட்டது. ஏழாம் அத்தியாயத்திற்கு அடிப்படை, "கடைக்காரர்கள் ஐந்து பாகங்களாக தான் விற்பனை செய்வார்கள். ஒரு பாகம் மட்டும் தனியாக விற்கப்பட்டார்கள்" எட்டாம் பாகத்திற்கு அடிப்படை "திரையரங்கில் கையடக்க புத்தகமாய் மலிவு புத்தகமாய் படித்தது" நான் கண்ட அனுபவம் தான்.

2. இன்னும் இரண்டு அத்தியாயங்களுக்கு கூட தகவல்கள் இருந்தது. சோம்பேறித்தனம் காரணமாக நிறுத்திக்கொண்டேன். அதில் ஒரு தகவல். எங்கள் பகுதியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. நண்பர்களுடன் போயிருந்த பொழுது, ஒரு இளைஞன் ஒரு புத்தகத்தை தூக்கி கொண்டு ஓடிவிட்டான்" என்று பரபரப்பாக இருந்தது. அந்த புத்தகம் 'பொன்னியின் செல்வனின் இறுதிபாகம்" என்று எழுதலாம் என நினைத்தேன்.

3. அத்தியாயங்களுக்கு இடையில், "பாலகுமாரன், சுஜாதா, இப்பொழுது கல்கி என தாண்டி வந்துவிட்டேன்" என குறிப்பிட்டு இருந்தேன். சுஜாதாவுக்கு பிறகு, ஜெயகாந்தன், செ.கணேசலிங்கன், கார்க்கி, டால்ஸ்டாய் என எப்பொழுதோ வேறு திசை போய்விட்டேன். தமிழக எழுத்தாளர்களின் அனைவரின் வாசித்துவிட வெண்டும் என்று ஆசை தான். ஆனால், வசதி, வாய்ப்பு, வாசிப்பதற்கென்று உழைப்பு இல்லையே! ஆகையால் குறைந்தபட்ச திட்டமாக, முக்கிய எழுத்தாளர்களின் "மாஸ்டர் பீஸ்" களை எல்லாம் வாசித்துவிடலாம் என முடிவுக்கு வந்தேன்.

தொ.மு.சி. ரகுநாதனின் "பஞ்சும் பசியும்"'
கி.ராஜநாராயணனின் "கோபாலபுரத்து மக்கள்"
தி.ஜானகிராமனின் "மோகமுள்"

அந்த வரிசையில் தான் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படித்தேன்.

3. நாவலைப் பொறுத்தவரையில், கல்கியின் தமிழ் நடை அருமை. வரலாற்றை இப்படி நாவல்களாக படித்தால், எந்த காலத்திலும் மனதை விட்டு அகலாது. நாவலின் கண்ணோட்டம் மன்னர் மற்றும் மேட்டுக்குடி மக்களை விழி உயர்த்தி பார்த்து எழுதியதாக இருந்தது. 60 களில் எளிய மக்களை கதை மாந்தர்களாக எழுதும் சூழல் தமிழுக்கு வந்துவிட்டது.

4. ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் பொழுது, எனக்காக இரக்கப்பட்டு, ஐந்தாம் பாகத்தின் "இணைய இணைப்பு" தந்தார்கள். ஒருவர் "புத்தகத்தை அனுப்பி வைக்கட்டுமா!" என்று கூட கேட்டார். இந்த தேடுதல் படலம் நடந்து, சில வருடங்களாகிவிட்டன. இப்பொழுது நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தாலும், படிக்கத்தான் முடியவில்லை. நல்ல முரண். எனக்காக உதவ முன்வந்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

5. பிறகு, ஒரு விசயம் சொன்ன கோவிச்சுக்க கூடாது. இவ்வளவு ஆர்வமா தேடிய இறுதி பாகத்தை எப்ப படிச்சேன்னு, எனக்கு மறந்துபோச்சு! நமக்கு ஞாபக சக்தி கொஞ்சம் கம்மி. ம்ஹூம். அதிகம் தான். அநேகமா நூலகத்தில் தான் எடுத்து படிச்சேன்னு நினைக்கிறேன்! :)

No comments: