கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Wednesday, August 17, 2011
மனிதர்கள் 8 - துரப்பாண்டி
அடர்த்தியான சுருள் சுருளான முடி, களையான கருத்த முகம், அயர்ன் பண்ணி போட்ட பேண்ட், சர்ட், பாலிஷ் போட்ட ஷீ, கூலிங் கிளாஸ், முதுகில் ஒரு பேக், லேடி பேர்ட் சைக்கிளில் அந்த கட்டிடத்திற்குள் நுழையும் பொழுது, வாட்ச்மேன், சித்தாள், கொத்தானார் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்வார்கள். புதிதாக வந்திருக்கும் இன்ஜினியர் என நினைப்பார்கள்.
சண்டைக்கு முன் எல்லாவற்றையும் கழற்றி வைக்கும் பாக்யராஜ் போல, பேண்ட், சர்ட், கூலிங்கிளாஸ் என எல்லாவற்றையும் கழற்றி, பாதுகாப்பாய், கண்ணுக்கு எட்டும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஒரு சுமாரான கைலி, பொத்தல் விழுந்த பனியனோடு கையில், உளி சுத்தியலோடு உடைக்க வேண்டிய கட்டிடத்தின் பாகங்களை உடைக்க துவங்குவான் துரப்பாண்டி. அவன் ஒரு கொத்து தொழிலாளி. அந்த முதல் நாளில் எல்லோரும் ஆர்வமாய் பார்ப்பார்கள். பிறகு இந்த காட்சிகள் அவர்களுக்கு பழகிவிடும்.
****
வேலை முடிந்ததும், வீட்டிற்கு போய் ஒரு நல்ல குளியல் போட்டுவிட்டு, சாப்பிட்டுவிட்டு, வாரணம் ஆயிரம் சூர்யா போல கித்தாரை முதுகில் தொங்க போட்டுக்கொண்டு, வகுப்புக்கு கிளம்புவான். யாராவது இடைமறித்து, "கிதார் வைச்சுகிட்டு உதார் கொடுக்கிறாயே! வாசிக்க தெரியுமா? என கலாய்ப்பார்கள். அங்கேயே உட்காரவைத்து, மூடுபனி பிரதாப் போல 'என் இனிய பொன்நிலாவே' பாடலை நூறுமுறையாவது இனிமையாய் வாசித்துக்காட்டுவான். (மவனே! இனி நீ கலாய்ப்பே!) வேறு பாடல் கேட்டால், நாளைக்கு என டபாய்த்துவிடுவான்!
****
படித்தது 6ம் வகுப்பு வரைதான். அவனால் வேகமாய் வாசித்துவிடமுடியாது. ஆனால், புத்தகங்களின் காதலன் என்பது மாதிரி காட்டிக்கொள்வான். எப்பொழுதும் ஒரு புத்தகம் கையில் வைத்திருப்பான். சாதாரண புத்தகங்கள் எல்லாம் கிடையாது. பெரியார், அம்பேத்கார், கலீல் ஜிப்ரான் என மிகப்பெரும் தலைகளின் புத்தகங்களாக இருக்கும். அவன் ஏரியாவிற்குள் நுழைந்து துரப்பாண்டி என்றால், 'புத்தகம் வைத்துக்கொண்டு சுற்றுவானே! அவனா? என அடையாளம் சொல்வார்கள்.
****
காதலித்து திருமணம் செய்வது என்பதை வாழ்க்கையின் இலட்சியமாக வைத்திருந்தான். காதலைப் பற்றி பிரபல கவிஞர்கள், சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என கவனமாய் ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தான். "லைலாவின் அழகை இரசிக்க வேண்டுமென்றால், மஜ்னுவின் கண்கள் வேண்டும்" என்ற வரிகளை துரப்பாண்டி தான் என் வாழ்வில் முதலில் சொன்னான்!
இப்படி எல்லாவற்றையும் காக்டெயில் போல கலந்து கட்டி, ஒரு காதல் கடிதம் தயாரித்து வைத்திருந்தான். பெண்களோடு பழக துவங்கிய சில காலத்திலேயே தயக்கமில்லாமல் எடுத்து நீட்டிவிடுவான். மறுத்துவிட்டால், தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல, அடுத்த முயற்சியை துவங்கிவிடுவான்.
நான்கைந்து முயற்சிகள் தோல்வியடைந்தால், காதல் கோட்டை ஆட்டோ டிரைவர் செல்வா போல திட்ட ஆரம்பித்துவிடுவான். 80களில் வெளியான இளையராஜாவின் பாடல்களை அருமையான தொகுப்பு ஒன்றை சேகரித்து வைத்திருந்தான். சந்தோசமென்றாலும், துக்கமென்றாலும் இரவு நடுநிசிவரை கேட்க ஆரம்பித்துவிடுவான்!
****
திடீரென 'ஏன் என்னை மட்டும் யாரும் காதலிக்க மாட்டேங்குறாங்க!' என்பான். "ஏண்டா எனக்கு மட்டும் நிறைய காதலிகள் இருக்காங்களா என்ன? உன் பேச்சைக்குறை. உன்னைப் பார்த்தா பிடிக்குற பெண் கூட, பேசினா ஓடிறாங்க! உன் அறிவாளித்தனைத்தை எல்லாம் கொட்டாதே!" என்பேன். புரிந்தது போல தலையாட்டுவான். மீண்டும், எந்தவித குறையும் இல்லாமல், தன் பழைய பாணியில் துவங்கிவிடுவான்.
****
எப்பொழுதும் நாலைந்து பேர் வேலைக்காக துரப்பாண்டியை தேடிக்கொண்டே இருப்பார்கள். நண்பன் என்பதால், என்னைப் பார்த்தால் அவனைப் பற்றி குற்றப்பட்டியல் வாசிப்பார்கள். "நாலு நாள் வேலைங்க! இரண்டு நாள் முடிச்சுட்டுப்பால! இப்ப ஆளை பிடிக்க முடியலை' என்பார்கள். அவனிடம் கேட்டால், 'அந்த ஆள் என் சம்பளத்தை போன தடவை இழுத்தடிச்சு கொடுத்தான். இப்ப அலையட்டும்' என்பான் கூலாய்!
****
இப்படி துரப்பாண்டி செய்யும் எல்லா செயல்களுக்கும் தனக்கான 'அங்கீகாரம் தேடுதல்' என்பது அடிநாதமாக இருந்தது. அதற்கு காரணம் துரப்பாண்டி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். சுவரையெல்லாம் உடைக்கும் பொழுது, ஆதிக்க சாதியின் திமிரை நொறுக்குவதாகவே எண்ணிக்கொள்வான். இருவர் செய்யக்கூடிய வேலையை ஒருவனே செய்வான். அவனைத்தேடி பலர் அலைவதற்கும் அதுவே காரணமாகவும் இருந்தது.
காதல் இலட்சியத்திற்கு கூட காரணம் இங்கு சாதி தகர்ப்பிற்கு ஒரு வழி ஒரு சாதிக்குள்ளே திருமணம் செய்வதை தவிர்ப்பது! ஆகையால் தான் அத்தனை முயற்சிகளும்! முற்போக்கு பேசிவிட்டு, யாராவது சொந்த சாதியில், சடங்குகளோடு திருமணம் முடித்தால், ஒரு பெரிய அம்பேத்கார் போட்டோவை பிரேம் பண்ணி, அம்பேத்காரின் சாதி ஒழிப்பு குறித்தான குறிப்புகளை எழுதி, நீ செய்வது தவறு என சொல்லாமல் சொல்லிவிட்டு வருவான்.
ஒருமுறை ஒரு கட்டிடத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளர்களை மட்டமாக நடத்திவிட்டார்கள் என, 'குண்டு வைச்சு, இந்த (ஐந்து மாடிக்) கட்டிடத்தையே தரைமட்டமாக்கியிருவேன்" என மிரட்டிவிட்டான். இன்ஜினியரும் மிரண்டுவிட்டான்.
ஒருமுறை ஒரு உறவினருக்கு உடம்புக்கு முடியவில்லை என்று ரத்தம் கொடுக்க அழைத்து போயிருந்தேன். எங்கள் நண்பர்கள் குழாமில் 30 பேரில் அவனுடைய ரத்தம் தான் மிக அடர்த்தியாய் இருந்தது. ஹூமோகுளோபினும் அதிகமாக இருந்தது.
***
பேண்ட், சர்ட் ஆசைக்கெல்லாம் என்னை மாதிரி கொஞ்சம் படித்த நண்பர்களுடன் பழகியது தான் காரணமா என குழம்பியிருக்கிறேன் பலமுறை! ஆனால், கூலிங் கிளாஸ் நான் போட்டதேயில்லையே!
ஊரை விட்டு வந்ததில், அதிகமாய் மிஸ் பண்ணியது துரப்பாண்டியைத்தான்! ஏனென்றால், அவ்வளவு இம்சை செய்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment