Thursday, February 13, 2014

கோபமும், மன்னிப்பும்!

அன்றைக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும் பொழுது, சில பிரச்சனைகளினால் மகா எரிச்சலுடன் கிளம்பினேன்.  போகிற வழியில் நண்பனை பார்த்துவிட்டு போகலாம் என போனில் பேசினேன்.  ”20 நிமிடம் ஆகும். கொஞ்சம் காத்திரு. வந்துவிடுகிறேன்” என்றான்.

நேரே போய் அலுவலகத்திற்கு கீழே வண்டியை பார்க் செய்துவிட்டு டீ குடித்துவிட்டு வரலாம் என கிளம்பினேன்.  அப்பொழுது ஏடிஎம் வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த செக்யூரிட்டி “இங்க வண்டியை வைச்சுட்டு எங்க போறீங்க!. வண்டியை எடுங்க” என்றார்.

“எங்கே போறோம்னு உங்ககிட்ட சொல்லிட்டு தான் போகனும்னா!... இன்னும் சில வார்த்தைகள் கோபமாய் பேசிவிட்டு, விருட்டேன போய்விட்டேன்.

தேநீர் குடித்துக்கொண்டிருந்த பொழுது, நடந்தவற்றை அசைப்போட்ட பொழுது,  யார் மேலேயோ இருந்த கோவத்தை ஏன் நாம பெரியவர்கிட்ட காட்டினோம்? ரெம்ப தப்பாச்சே!  என யோசித்தேன்.  மேலே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பனுக்காக காத்திருக்கிறோம் என சொல்லியிருந்தா, முடிந்துவிட்டது.  இவ்வளவு மோசமா இதற்கு முன்னாடி இப்படி நடந்துகொண்டதில்லையே!  என நினைத்தேன்.

நேரே போய், “நான் வேறு ஒரு பிரச்சனையிலே உங்ககிட்ட கோபமாய் பேசிட்டேன்.  மன்னிச்சுங்க!  மேலே தான் என்னுடைய நண்பர் வேலை செய்கிறார்” என்றேன்.

அவர் பெருந்தன்மையாய்,  ”மன்னிப்பெல்லாம் எதுக்கு தம்பி! பக்கத்திலே பெரிய மால் இருப்பதால், அங்க பார்க்கிங் சார்ஜ் அதிகம்னு இங்க வந்து பார்க் பண்ணிட்டு போயிடறாங்க!  ஏடிஎம்ல பணம் எடுக்க வர்றவஙக வண்டியை வைக்க தடுமாறாங்க! கவனமா பாத்துக்கிட மாட்டிங்களான்னு கம்பெனி என்னை திட்டுது!” என்றார்.

அதற்கு பிறகு நண்பன் வருகிறவரை அவரிடம் பேசியதில், இரண்டு பசங்க! வளர்த்து ஆளாக்கி, திருமணம் முடித்து வைத்தும் இன்னும் செட்டிலாகலை! என் மனைவிக்கு உடம்புக்கு முடியல!  பன்னிரண்டு மணி நேரத்திற்கு இவங்க தர்ற சம்பளம் ரெம்ப கம்பி! என அவருடைய துயரக்கதையை முழுவதும் சொன்னார்.

எங்க அப்பா கூட இறப்புக்கு முன்னாடி சில காலம் செக்யூரிட்டியாக வேலை செய்தது நினைவுக்கு வந்தது.

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கோபம் எப்போது.... எம்முடைய கண்களை மூடிவிடும்.... பொறுமை அவசியம்...


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

உடனே எரிச்சலை உணர்ந்து, மன்னிப்பு கேட்டதற்கு பாராட்டுக்கள்...