Friday, January 16, 2009

பேச்சிலர் சமையல்

சொந்த ஊரைவிட்டு, சொந்தங்களை விட்டு, வேலை தேடி, கிடைத்தாலும் பெரும் போராட்டங்களுடன் பெருநகரங்களில் ஒரு பேச்சிலராய் வாழும் இளைஞனின் வாழ்க்கை நிறைய சிரமங்களுடையது.

இராம் சுரேஷ் எழுதிய இந்த பதிவு சிரமங்களை விளக்குகிறது. “பேச்சிலர் சமையல்” தொடர்ச்சிக்காக இங்கே பதிவிடுகிறேன்.

***
நன்றி : இராம் சுரேஷ்

காலையில் எழுந்து பெட்காஃபியும் தூங்குவதற்கு முன் இளஞ்சூடான பாலும் சாப்பிட எல்லாருக்கும் ஆசை இருக்கும். இதெல்லாம் சொந்த/வாடகை வீட்டில் அம்மா அப்பாவுடனோ இல்லை மனைவியுடன் இருக்கும்போதோ மட்டும் தான் அமையும். ஆனால் சமீபத்தில் படித்து முடித்து விட்டு வேலை பார்க்கும், கல்யாணத்திற்கு இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் வரை இருக்கும் பேச்சிலர்ஸ்க்கு எல்லாம் அந்த வாழ்க்கை வாய்க்காது.காலையில் எழுந்து டீ சாப்பிடுவதற்கே மூன்றாவது ஃப்ளோரில் இருந்து இறங்கி பிஸியான ரோட்டை க்ராஸ் பண்ணி சாப்பிட்டு திரும்ப ரூம்க்கு வந்து ஆஃபிஸ் கிளம்புவதற்குள் அந்த ஆசையே விட்டுவிடும்.

வீக் எண்டில் முற்பகல் 11 மணி வரை தூங்கி எழுந்திருக்கும் நாட்களில், ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு போனால், கடைக்காரர்கள் கார்கில் போரில் பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல் பார்ப்பான். காலை டிபனும் இருக்காது, மதியம் லஞ்ச் அப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கும். அடிவயிறு பசியால் பற்றி எரியும்போது மட்டும் வெளியே போய் டீயும் வடையும் சாப்பிட ஆசை வரும். அது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தாங்கும். சரியாக மணி 12.45 ஆகும்போது வெளியே கெளம்பி தலப்பாக்கட்டு பிரியாணியில் லெக் பீஸுடன் பிரியாணி வாங்கிட்டு வந்து வீட்டில் சாப்பிடுவேன். சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் அட்லீஸ்ட் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கடையாவது இருக்கும்.
.....
இரண்டு வாரம் முன்பு 11.45 ஷோ சில‌ம்பாட்டம் சத்யம் தியேட்டரில் பார்த்தேன். முடித்து விட்டு பக்கத்திலேயே இருக்கும் சரவண பவனில் ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாம் என்று போனோம். அது சரவண பவனின் ஸ்பெஷல் கேட்டகிரி ஹோட்டல் என்று தெரியாது. அங்கு பரிமாறப்படும் ப்ளேட், டம்ளர் என்று சகலமும் வெள்ளியில் மின்னியது. இதெல்லாம் உங்ககிட்ட யார்றா கேட்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ரெண்டு ஸ்பெஷல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன்.

அதற்கு சர்வர், "அதெல்லாம் இங்கே கிடைக்காது சார். பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ், ஸ்பெஷல் பஞ்சாபி தாலி மட்டும் தான் கிடைக்கும்" என்றார். "அடப்பாவிங்களா?!!, நானே படம் பாத்துட்டு தலைவலியோடு வந்துருக்கேன். இதுல இவிங்க வேற‌" என்று நானே என்னை நொந்து கொண்டு ரெண்டு எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன். ஒரு மீல்ஸ் 140 ரூபாய். பாத்திரங்களை வெள்ளியில் போட்டு, பில்லில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று மட்டும் தான் சரவண பவனில் சாப்பிடுவேன். அவர்கள் போடும் பில்லைப் பார்த்தால் அவ்வளவு நேரம் இருந்த பசியும் பறந்து விடும்.
இருந்தாலும் இரவில் சரவணபவனில் கிடைக்கும் மசாலா பாலுக்கு என் நாக்கு அடிமை.இது தவிர நான் ரெகுலராக செல்லும் இடம் திருவான்மியூர் R.T.O அருகில் இருக்கும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரெண்ட். நான் வெஜ் உணவுகள் சாப்பிடுவதற்கு சிறந்த இடம். இரண்டு பேர் சாப்பிட போனால் 500 ரூபாய்க்கு குறையாமல் செலவாகும். லோக்கல் காரைக்குடி கிராமத்து எஃபெக்ட் கொடுக்கிறேன் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு மேலிருந்து தொங்கும் விளக்குகள், அங்கங்கே சுவற்றில் தொங்கும் முறம், கும்பலாக உட்கார்ந்து காய்க்றி நறுக்கும் கிராமத்து ஆட்களின் ஃபுல் ஸ்க்ரீன் போட்டோ, டிபிக்கல் காரைக்குடி ஸ்டைல் வேட்டிக் கட்டு என்று கெட்ட காமெடி பண்ணுவார்கள். அந்த ஹோட்டலில் எப்போதும் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை மட்டும் ப்ளேயரில் ஓடவிடுவார்கள். வாரத்துக்கு ஒரு முறை போனால் மட்டுமே பட்ஜெட்டைக் காப்பாற்ற முடியும்.நான் வேலை செய்யும் ஆஃபிஸில் இதுவரை மதியம் லஞ்ச் ஒரு பெரிய மெஸ்ஸில் அரேஞ்ச் பண்ணினார்கள். கடந்த மூன்று மாதமாக எல்லாருக்கும் SudexHo கூப்பன் கொடுத்து வெளியே சாப்பிட சொல்லிவிட்டார்கள். Height of Cost cutting!!! சொந்தங்களுடன் இருப்பவன் லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொண்டு வந்து எங்கள் வயிற்றெரிச்சலையும் சேர்த்து மதிய உணவைக் கொட்டிக் கொள்வான். பாவப்பட்ட பேச்சிலர்ஸ்க்கெல்லாம் வாழ்வு கொடுக்க‌ சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் தான் "ஆந்திரா மெஸ்". அள்ள அள்ள சாதத்தை இலையில் கொட்டுவார்கள். தினமும் நான் வருவதற்கு முன் ஆரம்பிக்கும் ஒரு கொல்ட்டி ஆள், நான் சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கும் போது தான் சாம்பார் முடித்து ரசம் வருவான். வாழ்க கொல்ட்டிஸ்.

பப்பு (பருப்பாம்), சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, பெருகு (தயிர் என்று தெலுங்கில் அர்த்தம்) எல்லாம் ஒரு ரவுண்ட் முடித்து வரும்போது வயிறு நான்கு மாத கர்ப்பிணி பெண் போல இருக்கும். எல்லாம் சேர்த்து 30 ரூபாய் தான். So cheap. ஆனால் அவர்கள் போடும் காரம் அவ்வளவு சீக்கிரம் தமிழர்களுக்கு ஒத்துக்காது. என்னுடன் சாப்பிட்ட ஒருவனுக்கு காரத்தால் அப்பெண்டிஸ் வந்து ஆபரேஷனுக்காக ஊருக்கு போய் இருக்கிறான். இது தவிர நம்மூரில் சாதிக்கட்சிகள் மாதிரி நான் தங்கியிருக்கும் ஏரியா முழுவதும் எக்கச்சக்கமான‌ ஹோட்டல்கள். நாலு சேர், டேபிள், முன்னாலே புரோட்டோ போடும் கல் இருந்தால் அதுவும் ஒரு ஹோட்டல் என்று கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். சொல்லி வைத்தது போல எல்லா கடைகளும் ஒரே விலை, ஒரே பரிமாறும் ஸ்டைல். குட்டி ப்ளேட் அதன் மேல் பாலிதீன் கவர் போட்டு நம் முன்னே ஒரு 7 வயது பையன் வைத்து விடுவான்.

அந்த ப்ளேட்டை ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் கழுவி முடித்தவுடன் அதன் மேல் அந்த பேப்பரை போடுவார்களா என்றெல்லாம் நீங்கள் யோசிக்க கூடாது. அதுவே உங்கள் மனசை உறுத்தி கடைக்காரரை பார்த்து கேள்வி கேட்டால், உடனே நீங்கள் சென்னை பாஷையில் திட்டப்பட்டு, "அப்படி நீ ஆசைப்பட்டால் சரவணபவன் போய் சாப்பிடு" என்று விரட்டிப்படுவீர்கள். அப்புறம் நீங்கள் நம்ம கோவத்தால ஒரு வடை போச்சே என்று வடிவேலு மாதிரி ஃபீல் பண்ண வேண்டி இருக்கும்.நானும் கொஞ்ச நாளா என்னோட ரூம் மேட்ஸ்கிட்ட குக் வச்சிக்கலாம்டா இல்லை ஒரு கேஸ் ஸ்டவ், குக்கர் வாங்கிக்கலாம்டா என்று எவனைக் கேட்டாலும் "அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்டா... அவன் அவனுக்கு எப்போ வேலை போகும்னே தெரியாது. இதுல நீ வேற அத வாங்கலாம் இத வாங்கலாம்னுட்டு??" என்று திட்டுகிறான்.

இப்போதைக்கு எங்க ரூம்ல சுடு தண்ணீர் வைக்க ஒரு எலக்ட்ரிக் ஸ்டவ் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பால் காய்ச்சி அதில் கெல்லாக்ஸ்(Kellogs)மிக்ஸ் பண்ணி காலையில் ப்ரேக் ஃபாஸ்டாகவும், மதியம் ஆந்திரா மெஸ்ஸிலும், நைட் ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சாப்பிட்டு பேச்சிலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.

from
http://urfriendchennai.blogspot.com/2009/01/blog-post_05.html

No comments: