Wednesday, January 28, 2009

‘பித்தன்’ – கவிஞர் அப்துல்ரகுமான்


படித்ததில் பிடித்தது.

கவிஞர் அப்துல் ரகுமான் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பித்தன்’.

ஏன் பிடித்தது என்றால்.... அப்துல் ரகுமானே பித்தனின் அறிமுகத்தில் சொல்வது மாதிரி

‘பித்தன்
‘எதிர்’களின் உபாஸகன்

….

உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.

....

முரண்கள்
கள்ளக்காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
….

உள் அத்தியாயங்களில் பல தலைப்புகளில் அசைபோட வைக்கிற, அதிர வைப்பவை பல.

உதாரணத்திற்கு...
மனிதன் ஆடையாய் இலை, தலை கட்ட தொடங்கி... இன்றைக்கு ஜீன்ஸ், டீசர்ட் என மாறி நிற்கிறோம்.

ஆடை தலைப்பில்
பித்தன் சொல்கிறான்.

“பூக்களும் பறவைகளும்
ஆடை அணிவதில்லையே?

நீங்கள்
ஆபாசமானீர்கள்;

அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள்”

- கேட்டதும் நாம் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போகிறோம்.

பெண் தலைப்பில்
பித்தன்

பெண் நட்பில் பலருக்கு மகிழ்ச்சியான நினைவுகள் இருந்தாலும், சிலருக்கு நிறைய கசப்பும் இருக்கிறது.
இந்த வரிகள் எனக்கு பிடித்திருந்தன.

“பெண்களின் கூட்டத்தைக் கண்டு
பித்தன்
விலகி ஓடினான்.

‘நீ பெண்களை வெறுப்பவனா?’
என்று கேட்டேன்.

‘இல்லை; அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கிறேன்.
பெண் தூரத்தில்தான்
அழகாயிருக்கிறாள்”.
...

வினா தலைப்பில்
பித்தன்

“வினாக்களே
நம்மை எழுப்புகின்றன.
விடைகளோ
உறக்கமாய் இருக்கின்றன.
வினாக்கள்
நம்மைத் திறக்கின்றன.
விடைகளோ
நம்மை மூடுகின்றன”

- நம் பள்ளிகள் நம் பிள்ளைகளுக்கு செய்யும் அதிகபட்ச வன்முறை “வினாக்கள் எழுப்பாதே!” என மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

இப்படி புத்தகங்களில் நிறைய இருக்கின்றன. படியுங்கள்.

நவீன கவிதைகள் என நிறைய வருகின்றன. நம் சிறு மூளைக்கு அவைகள் புரிவதில்லை.
அப்துல் ரகுமானின் எழுத்து புரிந்து கொள்வதற்கு மூளையை குடைவதில்லை. எல்லா பாடுபொருளும், உருவகமும், உள்ளடக்கமும் நமக்கு புரிகிறது. அது அவருடைய எழுத்தின் பலம்.

அப்துல் ரகுமான் “பித்தன்”க்கான கருவை 1980 களில் சிந்தித்து, பிறகு எழுதி, 1998 ல் புத்தகமாய் முதல் பதிப்பாய் வந்திருக்கிறது.

இந்த புத்தகங்களில் எனக்கு உடன்படாத விசயங்களும் இருக்கின்றன. 1990களுக்கு பிறகு, அப்துல் ரகுமானிடம் இருந்த சில முற்போக்கு கருத்துக்களும் விலகி, முழுக்க முழுக்க ஆன்மீகம் என்பதாக அவருடைய எழுத்துக்கள் மாறிவிட்டன. சம காலங்களில் அவர் எழுதுவதை படிக்க பிடிக்கவில்லை.

அப்துல் ரகுமான் இறந்துவிட்டார் என ஒரு மாதத்திற்கு முன்பு சன் செய்தியில் பிளாஷ் செய்தியாக வந்தது. அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றாக வ்ரிசையாக நினைவுக்கு வந்து, அவருடைய இறப்பில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். பிறகு, கவிஞர் தானா! என உறுதிப்படுத்த தேடும் பொழுது, மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ உள்ள அப்துல் ரகுமான் என்ற பிரபலம் இறந்ததாய் அறிந்தேன். கவிஞர் பிழைத்தார்.

புத்தக வடிவமைப்பு பொறுத்தவரை, அத்தியாயங்களுக்கான இன்டெக்ஸ்-ல் இருக்கிற பக்க வரிசைப் படி இல்லை. மூன்று பக்கங்கள் வித்தியாசம் என புத்தகத்தின் இறுதிபக்கம் வரை தொடர்கிறது. கொஞ்சம் கவனித்திருந்தால் சரி செய்திருக்கலாம்.
***
விலை ரூ. 40

கிடைக்குமிடம் :

நேசனல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் சாலை,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),
தியாகராக நகர், சென்னை – 600 017 பேசி : 2834 3385

1 comment:

VIKNESHWARAN said...

நல்ல அறிமுகம்... நன்றி...